இன்றும் கனமழைக்கு வாய்ப்பு!
சென்னை, செப். 11 - தென்னிந்திய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், செப்டம்பர் 12 அன்று மயிலாடுதுறை, நாகை, கடலூர், விழுப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. செப். 13 முதல் 16 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகிறார்
சென்னை, செப். 11 - ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செப். 14 அன்று சென்னை வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஜிஎஸ்டி விழிப்புணர்வு குறித்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காகவே ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் விலையில்லா உணவுக்கு ரூ. 1.87 கோடி ஒதுக்கீடு
சென்னை, செப். 11 - தூய்மைப் பணியாளர்களுக்கு விலையில்லா உணவு வழங்குவதற்காக, சென்னை மாநகராட்சி 1.87 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு 1.81 கோடி ஒதுக்கீடு செய்து தினசரி 10,000 தூய்மை பணியாளர் களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ள மாநக ராட்சி, சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர்களை கோரியுள்ளது.
பொறுப்பு டிஜிபி நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
சென்னை,செப்.11- தமிழக பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31 அன்று பணி ஓய்வு பெற்றதையடுத்து பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. அவரும் டிஜிபியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்ட தற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர் ஆர். வரதராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு ப்ளீடர், எட்வின் பிரபாகர், இதேபோன்ற ஒரு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி டிஜிபி நியமனம் செய்யப்பட இருப்பதால், மேற்கொண்டு இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. உச்ச நீதிமன்றம் ஏற்கனவே யு.பி.எஸ்.சி.க்கு இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் நாங்கள் தலையிட விரும்பவில்லை. டிஜிபி பொறுப்பு காலியாக இருந்த நிலையில், பொறுப்பு டிஜிபி நியமனத்தை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
‘தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்’: முதலமைச்சர்
சென்னை, செப். 11 - ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ‘எக்ஸ்’ தள பதிவில், “தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000-க்கும் அதிகமான பூத் வாரியாக உறுதிமொழி எடுக்கவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த உறுதிமொழியில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவது, வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நிற்பது, நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பது, தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவது மற்றும் பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாப்பது ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.