tamilnadu

img

மின்னல் வேகம்... மிரண்ட எதிரிகள்

மின்னல் வேகம்... மிரண்ட எதிரிகள்

கேரளத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திலேயே இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) தனது வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தல் களத்தில் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகிறது.  ஆனால், மற்ற கூட்டணிகளோ வேட்பாளர்களை முடிவுசெய்ய முடியாமல் திணறிவருகின்றன.

குழப்பத்தில் யுடிஎப் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் தொகுதிப் பங்கீட்டிலும், வேட்பாளர் தேர்விலும் பெரும் இழுபறி நீடிக்கிறது. 95 இடங்களில் போட்டியிடும் காங்கிரஸால் இதுவரை 55 வேட்பாளர்களை மட்டுமே அறிவிக்க முடிந்துள்ளது. எம்பிக்கள் யாரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற தலைமையின் முடிவை ஏற்க மறுத்து, முன்னாள் தலைவர் கே.சுதாகரன் உள்ளிட்டோர் பிடிவாதம் பிடிப்பதே இந்தப் பட்டியலை வெளியிடத் தாமதத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. முஸ்லீம் லீக் கட்சியிலும் இன்னும் முழுமையான பட்டியல் வெளியாகவில்லை.

காத்திருக்கும் பாஜக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என் டி ஏ) நிலைமையோ இன்னும் மோசம். வியாழனன்று வெளியிடப்பட்ட 39 பேர் கொண்ட இரண்டாவது பட்டியலையும் சேர்த்து, இதுவரை 86 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் பட்டியலில் இடம் கிடைக்காமல் அதிருப்தி அடைபவர்கள் யாராவது வருவார்களா என பாஜக தலைமை வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

களத்தில் எல்டிஎப் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட அன்றே களத்தில் இறங்கிவிட்ட இடது முன்னணியினர், கடந்த நான்கு நாட்களாகத் தொகுதி மாநாடுகள், ரோடு ஷோக்கள் என மாநிலம் முழுவதும் சிவப்புக் கொடிகளுடன் வலம் வருகின்றனர். மற்ற கட்சிகள் இன்னும் பட்டியலைத் தயாரிப்பதிலேயே காலம் கடத்திக் கொண்டிருக்கும் நிலையில், எல்டிஎப் வேட்பாளர்கள் மக்கள் சந்திப்பில் பல மைல் தூரம் முன்னிலையில் உள்ளனர்.