tamilnadu

சிபிஎஸ்சி பாடத்திட்ட திணிப்பு: மாணவர்களின் கல்வியை பறிக்கும் திட்டம்

சிபிஎஸ்சி பாடத்திட்ட திணிப்பு:  மாணவர்களின் கல்வியை பறிக்கும் திட்டம்

புதுச்சேரியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில், கல்வி முறை பிரெஞ்சு மொழியை மையமாகக் கொண்டி ருந்தது. பிரெஞ்சு மொழியில் கல்வி வழங்கப்பட்டதால், உள்ளூர் மக்க ளில் குறிப்பிட்ட பிரிவின ருக்கு மட்டுமே கல்வி கிடைத்தது. இந்திய விடுதலைக்குப் பிறகு, புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்தபோது, கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. ஆரம்பத்தில், மாநிலப் பாடத்திட்டம் பின்பற்றப்பட்டது. அதே நேரத்தில், மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளும் இருந்தன. இந்த இரண்டு பாடத்திட்டங்களும் வெவ்வேறு கல்வித் தரங்களைக் கொண்டிருந்தன. இதனால், வசதி படைத்தவர்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளிலும், மற்றவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசுப் பள்ளிகளிலும் படிக்கும் நிலை ஏற்பட்டது.  ஏற்றத்தாழ்வுகளுக்கு முற்றுபுள்ளி  2009ஆம் ஆண்டு, தமிழக அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்விக் கொள்கை, இந்த ஏற்றத்தாழ்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது. புதுச்சேரிக்குத் தனியாகக் கல்வி வாரியம் இல்லாததால், மாநில அரசும் சமச்சீர் பாடத்திட்டத்தைப் பின்பற்றியது. இதன் விளைவாக, தனி யார் மற்றும் அரசுப் பள்ளிகள் அனைத்தும் ஒரே பாடத்திட்டத்தைப் பின்பற்றி, கல்வி சமத்துவம் நிலை நாட்டப்பட்டது. இதன் மூலம் தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது.  மாணவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடப்புத்தகங்கள் மற்றும் கல்வி முறைகள் கிடைத்தன. ஆனால், இந்த சமத்துவ முறையை முறியடித்து  தற்போது ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை (NEP 2020) மற்றும் சிபிஎஸ்சி பாடத்திட்டத் திணிப்பு மூலம், இந்த மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.  புதிய பாடததிட்டம் மாநில உரிமைகளை அடகு வைத்து, கல்வியை வணிக மயமாக்குவதோடு, குறிப்பிட்ட சித்தாந்தங்களை திணிப்ப தற்கான ஒரு முயற்சியாகும். உள்கட்ட மைப்பு, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மொழித் திணிப்பு புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளோ, போதிய ஆசிரியர்களோ இல்லை. மாநிலப் பாடத்திட்டத்தில் சமூக அறிவியல் ஒரு பாடமாக இருந்த நிலையில், சிபிஎஸ்சி-யில் அது வரலாறு, புவியியல், குடிமையியல் மற்றும் வணிகவியல் என நான்கு தனித்தனிப் பாடங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் இந்த வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஒரு தமிழாசிரியர் ஆங்கில வழியில் சமூக அறிவியல் பாடத்தை நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மாணவர்களின் கல்வித் தரத்தை நேரடியாகப் பாதிக் கின்றன.  இந்த சிபிஎஸ்சி திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்கான ஒரு வழி யாகப் பார்க்கப்படுகிறது. இந்தப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கில வினாத்தாள்கள் ஆசிரியர்களுக்கே கடினமாக இருப்பதால், முதல் தலை முறை மாணவர்களால் அவற்றை எதிர்கொள்வது சிரமமாக உள்ளது. மேலும், இந்தி மொழித் திணிப்புக்கு வழிவகுக்கும் புதிய கல்விக் கொள்கை, 3, 5, மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வுகளை அறிவித்துள்ளது. இது மாணவர்களின் வாழ்வையும், தாய்மொழி உரிமையையும் சூரையாடும் ஒரு கொடூரமான திட்டம். இந்தத் திட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் ஏற்காது.  குளறுபடியான தேர்வு முறை: "13 மார்க் "  சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் திடீர் திணிப்பால் மாண வர்கள் அனுபவித்த மன உளைச்சல், தற்போது தேர்வுகளில் எதி ரொலித்துள்ளது. 2024-25 பத்தாம் வகுப்புத் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 81.25% மட்டுமே. 5792 மாணவர்களில் 1086 பேர் தோல்வியடைந்துள்ளனர், குறிப்பாக அறிவியல் பாடத்தில் 998 பேர் தோல்வியடைந்துள்ளனர். மாநிலப் பாடத்திட்டத்தில் 80-90% மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், சிபிஎஸ்சி-யின் கருத்து அடிப்படையிலான மற்றும் விரிவான விடையளிக்கும் (open-ended) வினா முறைகளைக் கையாள முடியாமல் திணறினர். மேலும், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்பட்டது, தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியது.  ஆசிரியர்களின் மன சாட்சியை உலுக்கும் செயல் இதன் உச்சகட்ட அவலமாக, ஆசி ரியர்களிடம் பேசும்போது "எப்படியாவது மாணவர்களை 13 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வைக்க வேண்டும்" என்ற வாய்மொழி உத்தரவுகள் துணை இயக்குநரால் வழங்கப்பட்டது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இது ஆசிரியர்களின் மனசாட்சியை உலுக்கும் ஒரு செயல். சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் மாணவர்கள் 80 மதிப்பெண்களுக்குத் தேர்வு எழுதுவர், இதில் 13 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெற்றுவிடுவர். அரசாங்கம் தேர்ச்சி விகிதத்தைப் பெருமை பேச மட்டுமே இந்த 13 மதிப்பெண் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், "கணிதத்தில் எத்தனை சதம், அறிவியலில் எத்தனை சதம்" என்று கணக்குப் போட்ட காலம் மாறி, "எத்தனை மாணவர்கள் 13 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றனர்" என்று கணக்குப்போடும் நிலைக்கு இந்த ஆட்சியாளர்கள் தள்ளிவிட்டனர். நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட 60 மதிப்பெண்களை தாண்ட முடியாமல் மனக்குமுறல்களைக் கொட்டி வருகின்றனர்.   மாற்றுத்திட்டங்கள்  மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இத்தகைய தன்னிச்சையான முடிவுகளை எடுத்த என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு தங்கள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும்.    அனைத்து அரசுப் பள்ளிகளையும் சிபிஎஸ்சி பள்ளிகளாக மாற்றாமல், பாதிப் பள்ளிகளை சிபிஎஸ்சி பள்ளி களாகவும், மீதிப் பள்ளிகளை மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளி களாகவும் மாற்றியமைக்க வேண்டும். இது மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கல்வித் திட்டத்தை தேர்வு செய்ய ஒரு வாய்ப்பை வழங்கும்.   * சிபிஎஸ்சி பாடத்திட்ட அறிமுகத்தால் ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்யும் வகையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் பிற உயர்கல்வியில் முதலமைச்சர் இந்த ஆண்டு அறிவித்த 10% இட ஒதுக்கீட்டை 30% ஆக உயர்த்த வேண்டும்.  இது, மாணவர்களின் நல்வாழ்விற்கு வழி வகுக்கும். அரசியல் காரணங்களுக்காகக் கல்வித் திட்டங்களில் தன்னிச்சையாக மாற்றங்களைச் செய்வது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். எனவே சிபிஎஸ்இ பாடதிட்ட திணிப்பை எதிர்த்து  சிபிஎம் சார்பில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று நமது குழந்தைகளின் கல்வி உரிமையை பாது காக்கவும்  அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கவும் திரளாக பங்கேற்க வேண்டும்.