நாய் குறுக்கே வந்ததால் கார் - தனியார் பேருந்து மோதி விபத்து 4 பேர் காயம்
விருதுநகர், அக். 18- விருதுநகர் அருகே குறுக்கே வந்து இறந்த நாயை காரை நிறுத்தி பார்த்த போது, பின்னால் வந்த தனியார் பேருந்து மோதியதில் 10 வயது சிறுமி உட்பட 4 நான்கு பேர் காயமடைந்தனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த ராமலட்சுமி (37). இவர் தனது குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். விருதுநகர்-சாத்தூர் 4 வழிச் சாலையில் உள்ள பட்டம்புதூர் விலக்கு அருகே கார் சென்ற போது, சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்தது. இதனால் காரை நிறுத்த முடியவில்லை. நாய் மீது கார் மோதியதில் அது இறந்து போனது. இதையடுத்து, காரை நிறுத்தி இறந்த நாயை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து, நின்ற கார் மீது மோதியது. இதில் கார் தலைகீழாக கவிழ்ந்தது, இந்த விபத்தில் இராமலட்சுமி (37), அப்பாவுராஜ் (67), மனைவி சித்ரா (57), 10 வயது சிறுமி என 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து வச்சக்காரப் பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடதத வருகின்றனர்.
ஒரே நாளில் 241.2 மி.மீ மழை
விருதுநகர், அக்.,17- விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 241.2 மி.மீ மழை பெய்தது. அதன் விபரம் வருமாறு :விருதுநகர் 19 மி.மீ, சாத்தூர் 15, பிளவக்கல் 13, வத்ராப் 12.8, திரு வில்லிபுத்தூர் 12.8, காரியாபட்டி 8, கோவிலாங்குளம் 7.7 மி.மீ, வெம்பக்கோட்டை 5.2, திருச்சுழி 5.1 என மழை பதிவாகியுள்ளது.
அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்கு
விருதுநகர், அக்.17- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி மல்லாங்கிணறு வி.வி.வி.,நகரை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 54). அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றுகிறார். நேற்று சிவகாசியில் இருந்து விருதுநகர் நோக்கி புறப்பட்ட பேருந்து காலை 7:25 மணிக்கு ஆனைக்குட்டம் பேருந்து நிறுத்தத்தில் ஆட்களை ஏற்றிக் கொண்டிருந்தது. அப் போது, சிவகாசி வடமலாபுரத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி (43) என்பவர் அய்யாசாமியை திட்டி வாக்குவாதம் செய்தார். பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தமாட்டியா? என்று கேட்டு அவரது நெஞ்சில் மிதித்தார். இதில் காயமடைந்த ஓட்டுநர் அய்யாசாமி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வீட்டில் வைர நகை-பணம் திருட்டு
விருதுநகர், அக்.17- விருதுநகர் அருகே கால்நடை மருத்துவமனை செல்லும் ரோட்டில் வசிப்பவர் சுரேஷ் மோகன் (44). கட்டிட கட்டுமானம் வேலை செய்கிறார். தனது வீட்டை தீபாவளியை முன்னிட்டு சுத்தம் செய்வதற்காக தன்னி டம் வாடிக்கையாக வேலைக்கு ஆள் அனுப்பும் பாக்கிய ராஜ் என்பவர் மூலம் பாலவநத்தம் தெற்குபட்டியை சேர்ந்த பாண்டிராஜன் அக்டோபர் 15 காலை வீட்டை சுத்தம் செய்ய வந்தார். வேலை முடித்து சென்ற பின், இரவு 7 மணிக்கு சுரேஷ் மோகனும், அவரது மனைவி கார்த்திகாவும் பீரோவில் பொருட்களை பரிசோதித்தனர்.அப்போது 1.25 கிராம் எடையுள்ள 2 வைரக்கல் பதித்த தங்க மோதிரம், இரண்டரை கிராம் மோதிரம், ரூ.5 ஆயிரம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில் பாண்டியராஜன் மீது கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
நத்தம், அக்.18- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் போலீஸ்- சப்-இன்ஸ்பெக் டர் அருண்நாராயணன் உள்ளிட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செல்லப்பநாயக் கன்பட்டி மயானம் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தது. பின்னர் அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் செல்லப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(35), மேலூர்- அட்டபட்டியைச் சேர்ந்த ராஜா (39), பாலப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக்(35), ஊராளிபட்டியைச் சேர்ந்த வீரமணிகண்டன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
போலி காப்பீட்டு பத்திரம் தாக்கல் செய்தவர் மீது வழக்கு பதிவு
தேனி,அக். 17- தேனி மாவட்டம் போடி மின் வாரிய அலுவலக தெருவில் வசிப்பவர் ஆறுமுகம் மகன் முருகன் (70). இவர் போடி முந்தல் கிராமத்தில் தோட்ட காவலராக வேலை செய்து வந்தார். 21.10.2022 ஆம் தேதி வேலை முடிந்து ஆட்டோ ஒன்றில் போடிக்கு வந்துள்ளார். போடி அரசு மருத்துவமனை அருகே வந்தபோது ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் முருகன் பலத்த காயமடைந்தார். போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தபோது முருகன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து போடி நகர் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் போடி முந்தல் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோபால் மகன் ரெஜி (43) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விபத்து இறப்பு வழக்கில் இழப்பீடு கேட்டு முருகன் மகன் கருப்பையா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆட்டோ வுக்கான தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் போடப்பட்ட விபத்து காப்பீட்டு பத்தி ரத்தை (இன்சூரன்ஸ் பாலிசி) ரெஜி நீதி மன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த விபத்து காப்பீட்டு பத்திரத்தை தனியார் காப்பீட்டு நிறுவனம் ஆய்வு செய்ததில் அது போலியாக தயாரித்தது தெரிய வந்தது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த தனியார் காப்பீட்டு நிறுவன கிளை பொறுப்பாளர் பிரவீன் என்பவர் போடி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் ஆட்டோ ஓட்டுநர் ரெஜி மீது வழக்கு பதிவு செய்தனர். போலியாக விபத்து காப்பீட்டு பத்திரம் தயாரித்து கொடுத்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
