இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.கே.கோபாலன் 1904 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் நாள் பேரலாசேரி எனும் வடகேரள ஊரில் பிறந்தார். கல்வியை தெல்லிசேரி எனும் ஊரில் கற்றார். கற்கும் போதே தான் ஒரு ஆசிரியராக வரவேண்டும் எனவே விரும்பினார். 1927 ஆம் ஆண்டு இவர் தன்னை இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சியின் சார்பில் நடைபெற்ற கதர் இயக்கம் மற்றும் பட்டியலின மக்கள் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றினார். உப்புச் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக 1930ல் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1937-ல் மலபார் பகுதியிலிருந்து சென்னைக்கு பட்டினி பட்டாள நடை பயணத்தைத் தொடங்கினார்.
இந்தியக் காப்பி விடுதியின் தொழிலாளர் போராட்டம் இவரது தலைமையில் நடந்தது. இந்தியச் சுதந்திரப் போராட்டக் காலத்தில் சிறைப்படுத்தப் பட்டுப் பல ஆண்டுகள் சிறையிலிருந்தார். ஒருமுறை வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது காவலர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டுச் சாதுர்யமாகத் தப்பிச் சென்றதும் உண்டு. சுதந்திரத்திற்குப் பின் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் எதிர்க்கட்சித் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பதவி வகித்த பெருமைக்குரியவர் தோழர் ஏ.கே.கோபாலன். நாடாளுமன்றத்தில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான தோழர் ஏ.கே. கோபாலனின் முழக்கம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தவை. அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு உட்பட அனைவரும் தோழரின் உரையை உன்னிப்பாகக் கவனித்தனர்.
ஏ.கே. கோபாலன் எழுதிய ‘நான் என்றும் மக்கள் ஊழி யனே’ எனும் சுயசரிதை நூல் கம்யூனிஸ்டுகள் படிக்க வேண்டிய முக்கிய நூல். 1964ல் கம்யூனிஸ்ட் கட்சியி லிருந்து மார்க்சிஸ்ட் கட்சி உதயமான போது தம்மை அக்கட்சியில் இணைத்துக் கொண்டு செயல்பட்டார். சிறந்த கம்யூனிஸ்டான தோழர் சுசீலாவைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் இணைந்து ஆற்றிய பணிகள் கம்யூனிச இயக்க வரலாற்றில் குறிப்பிடத்தக்கவையாகும். தனது 72 ஆவது வயதில் 1977 மார்ச் 22ல் மறைந்தார் தோழர் ஏ.கே.கோபாலன். இன்று (மார்ச் 22) தோழர் ஏ.கே.கோபாலன் நினைவு நாள்