tamilnadu

img

இந்திய மார்க்ஸ் - அ.அன்வர் உசேன்

இந்திய நாடாளுமன்ற தேர்தல்களில் மக்களை பிளவுபடுத்துகின்ற மிக மோசமான முதலாளித்துவ வடிவத்தை கைக் கொண்டுள்ள மோடி தலைமையிலான பாஜகவையும்  அதனை வழிநடத்தும் சங் பரிவாரத்தையும் முறியடிக்க கடும் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சக்திகளை தோற்கடிக்க தனிப் பெரும் வலிமை இல்லாத காரணத்தால் ஏனைய சக்திகளுடன் கம்யூனிஸ்டுகள் கை கோர்த்துள்ளனர். இந்தியக் குடியரசையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க கம்யூனிஸ்டுகள் களத்தில் உள்ளனர். இவற்றை தற்பொழுது பாதுகாப்பது உடனடித் தேவை என்பது மட்டுமல்ல; எதிர்காலத்தில் சமூக, பொருளாதார சமத்துவத்தை நோக்கி பயணிப்பதற்கு இது அவசியம் என்பதிலும் கம்யூனிஸ்டுகள் தெளிவாக உள்ளனர்.  தங்களது கம்யூனிஸ்ட் அறிக்கையில் காரல் மார்க்சும் ஏங்கெல்சும் கீழ்க்கண்டவாறு கூறினர்: “கம்யூனிஸ்டுகள் தொழிலாளி வர்க்கத்தின் உடனடி நலனுக்கான கோரிக்கைகளை அமலாக்கவும் உடனடி இலக்குகளுக்காகவும் போராடுகின்றனர். ஆனால் தற்கால இயக்கங்களில் அவர்கள் இயக்கத்தின் எதிர்காலம் குறித்தும் கவனம் கொள்கின்றனர்”. மே 5- மகத்தான கம்யூனிச ஆசான் காரல் மார்க்ஸ் அவர்களின் பிறந்த தினம்!  இந்தியா குறித்து மார்க்சின் ஆய்வுகள் இந்திய சமூகத்தை உள்வாங்கிக் கொள்வதில் மிகப்பெரிய வெளிச்சத்தை தருகின்றன எனில் மிகை அல்ல. பிற்கால ஆய்வுக்காக அவர் சேகரித்த பல குறிப்புகள் இந்தியா மட்டுமின்றி தமிழ்நாடு குறித்தும் இருந்தன என்பது மிகவும் வியப்பூட்டுபவையாகும். 

முழு விடுதலைக்கு முதல் குரல்

பிரிட்டிஷாரிடமிருந்து இந்தியாவின் முழுவிடுதலைக்கு முதலில் குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள்தான் என்பது மறைக்கப்பட்ட உண்மை! அத்தகைய முதல் குரல் காரல் மார்க்ஸ் அவர்களுடையது எனில் மிகவும் ஆச்சரியமாக இருக்கும். ஆம்! தனது சுய நலனுக்காக பிரிட்டிஷார் இந்தியாவில் நவீன தொழில்நுட்பத்தை புகுத்தினர். பஞ்சாலைகள்/ரயில்வே/ தொலை தொடர்பு/இரும்பாலைகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. அதுவரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை மட்டுமே கொண்டிருந்த இந்திய சமூகம் தனது வரலாற்றில் முதன் முதலாக கனரகத் தொழில் உற்பத்தியை கண்டது.  பிரிட்டிஷாரின் இந்த செயல் முற்றிலும் தமது சுய நலனுக்காகவே என்பதை ஆணித்தரமாக மார்க்ஸ் கூறினார். இந்தியாவில் விளையும் பருத்தி மற்றும் பல மூலப்பொருட்களை அடிமாட்டு விலைக்கு  கொள்முதல் செய்து பிரிட்டன் கொண்டு செல்லவும் பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் துணி மற்றும் ஏனைய பொருட்களை இந்தியாவிற்குள் கொண்டு வரவும் ரயில்வேக்கள் பிரிட்டிஷாருக்கு தேவைப்பட்டன. இதன் காரணமாக இரும்பாலைகளும் ஏனைய தொழில்களும் உருவாவது  தவிர்க்க இயலாத ஒன்றாக இருந்தது. தனது சுயநலனுக்காக கொண்டுவரப்பட்டாலும் இந்தியாவில் முதன் முதலில் கனரக தொழில் உற்பத்தியும் அதன் விளைவாக நவீன தொழிலாளி வர்க்கமும் தோன்றும் ஒரு முக்கிய நிகழ்வை பிரிட்டிஷார் துவக்கி வைத்தனர் என்பதை மார்க்ஸ் பதிவு செய்தார். இந்திய மண்ணில் முதல் முறையாக நவீனத் தொழிலாளி வர்க்கம் உருவாவதும் அதன் பின்விளைவுகளும் இந்திய சமூகத்துக்கு முக்கிய வளர்ச்சிப் போக்காக அமையும் எனவும் மார்க்ஸ் ஆழமாக குறிப்பிட்டார்.  இங்கிலாந்து முதலாளித்துவம் இந்திய மக்களை சமூக துயரங்களிலிருந்து விடுதலை செய்யாது! ஆனால் அது என்ன செய்யும் எனில் அந்த விடுதலைக்கான புறச்சூழல்களை தனது சுயநலனுக்காக உருவாக்கும்! இதைவிட கூடுதலாக எதையாவது முதலாளித்துவம் செய்துள்ளதா எனும் கேள்வியை மார்க்ஸ் முன்வைக்கிறார். மக்களை இரத்தம் சிந்த வைக்காமல், துன்பங்களில் தள்ளாமல், வாழ்வாதாரத்தை தாழ்த்தாமல் என்றைக்காவது முன்னேற்றத்தை முதலாளித்துவம் உருவாக்கியுள்ளதா எனும் பொருள் பொதிந்த கேள்வியை மார்க்ஸ் எழுப்புகிறார். எனினும் இத்தகைய நவீனத் தொழில் நுட்பங்கள் பிரிட்டிஷாருக்கு பயன்படும் அளவுக்கு இந்திய மக்களுக்கு பயன்படுமா எனும் கேள்வியையும் எழுப்பிய மார்க்ஸ், அவ்வாறு மக்களுக்கு பயன்பட வேண்டுமானால் கீழ்க்கண்ட இரண்டில் ஏதாவது ஒன்று நடக்க வேண்டும் என கருதினார்:

பிரிட்டனில் முதலாளித்துவ ஆட்சி தூக்கி எறியப்பட்டு தொழிலாளி வர்க்க ஆட்சி அமைய வேண்டும்.

 அல்லது

இந்தியர்கள் தமது வலிமையைப் பெருக்கி பிரிட்டிஷ் அடிமை ஆட்சியை முழுமையாகத் தூக்கி எறிய வேண்டும்.

ஆம்! பிரிட்டிஷார் புகுத்திய நவீனத் தொழில் உற்பத்தியின் பலன்கள் இந்திய மக்களுக்கும் பயன்பட வேண்டும் எனில் பிரிட்டிஷ் அடிமை ஆட்சியை இந்தியர்கள் முழுமையாக தூக்கி எறிய வேண்டும் என மார்க்ஸ் கூறினார். மார்க்சின் மதிப்பீடு மலைக்க வைக்கும் ஒன்று எனில் மிகை அல்ல! இதனை மார்க்ஸ் எழுதியது 1853இல்! மகத்தான சிப்பாய்-விவசாயிகள் கிளர்ச்சி நடப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு! இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்குவதற்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு! மார்க்ஸ் சொன்ன முதல் நிகழ்வு நடக்கவில்லை. ஆனால் அவர் சொன்ன இரண்டாவது நிகழ்வு 1947இல் நடந்தது.

மார்க்ஸ் சாடிய சாதியம்

நவீன காலத்தில் சாதியத்தை முதலில் கேள்விக்குள்ளாக்கியது காரல் மார்க்ஸ்தான் என குறிப்பிடுகிறார் சமூக ஆய்வாளர் ஆனந்த் டெல்டும்டே! சாதியத்துக்கு எதிராகக் களம் கண்ட மகத்தான போராளி ஜோதிபா பூலே அவர்களுக்கு முன்பாகவே மார்க்ஸ் சாதியத்தை விமர்சித்தார் என கூறுகிறார் டெல்டும்டே. உலகில் எந்த சமூகத்திலும் இல்லாத ஒரு சாபக்கேடாக இந்தியாவில் சாதியம் உள்ளது. இந்திய சமூகத்தின் பிற்போக்குத் தன்மைக்கு சாதியம் ஒரு முக்கியக் காரணி என்பதை காரல் மார்க்ஸ் 1852-53ஆம் ஆண்டுகளிலேயே பதிவு செய்துள்ளார். இந்திய சமூகத்தை ஆய்வு செய்த அவர் காலனியாதிக்கத்துக்கு முன்பு உற்பத்தி முறையின் அடிப்படை என்பது கிராம வாழ்வாக இருந்தது எனவும் கிராமத்திற்குள் மாற்றவே முடியாத வேலைப்பிரிவினை இருந்தது எனவும் இதற்கு அடிப்படை சாதிய முறை என்பதையும் அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.  ஒரு சாதியில் பிறந்த மனிதன் அந்த சாதியுடன் உடைக்க முடியாத சமூக சங்கிலியுடன் பிணைக்கப்பட்டிருக்கிறான் எனவும் அதிலிருந்து அவனுக்கு விடுதலை சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது எனவும் கூறுகிறார். இந்தியா உட்பட கிழக்கத்திய தேசங்களின் வரலாறு ஏன் மதங்களின் வரலாறாகக் காட்சி அளிக்கின்றன எனும் கேள்வியையும் எழுப்புகிறார். மார்க்ஸ் இந்த கேள்வியை எழுப்பி 170  ஆண்டுகளுக்கு பின்னரும் மதங்கள் இன்றும் இந்தியாவின் தலைவிதியை நிர்ணயித்து கொண்டுள்ளன எனும் கொடுமையை யார்தான் புறம் தள்ள முடியும்? இந்தியர்கள் முன்னேற வேண்டுமெனில் இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார். எனினும் இந்தியர்கள் குறித்து மார்க்சுக்கு மிக உயர்ந்த எண்ணம் இருந்தது. இந்தியா ஒரு மகத்தான தேசம்! இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள்; வீரம் படைத்தவர்கள்; அமைதியானவர்கள் என மார்க்ஸ் மெச்சுகிறார். அதே சமயத்தில் பிரிட்டிஷாரை மிகவும் கடுமையாகச் சாடுகிறார். அவர்களது நாகரிகம் இங்கிலாந்தில் மேன்மையானது; ஆனால் இந்தியா போன்ற காலனிகளில் அது அம்மணப்பட்டு நின்றது என்கிறார் மார்க்ஸ். தேசிய சொத்து பற்றி கவலைப்படும் பிரிட்டிஷார் இந்திய அரசர்கள் தமது நிறுவனங்களிடம் செய்த முதலீடுகளை அபகரிக்கவில்லையா? பக்தர்களிடம் பணம் ஈட்ட ஜெகநாதர் கோவிலில் கொலை மற்றும் விபச்சாரச் செயல்களில் ஈடுபடவில்லையா? இந்திய மக்களிடம் மெகா கொள்ளையில் ஈடுபட்டதாக மகா திருடன் ராபர்ட் கிளைவ் ஒப்புதல் வாக்கு மூலம் தரவில்லையா? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார்.

இந்தியா பற்றிய குறிப்புகள்

கி.பி. 664 முதல் 1858 வரை குறிப்புகள் சுமார் 190 பக்கங்கள் எடுத்துள்ளார் மார்க்ஸ். அவற்றில் சில முக்கியமானவை

  1.     கி.பி.600 முதல் 1100 வரை போர்கள் முஸ்லிம் மற்றும் இந்து மன்னர்களுக்கு இடையே நடந்த சமமான அளவுக்கு முஸ்லிம் மன்னர்களிடையேயும் நடந்தது.
  2.     இந்தியா மீது கஜனி முகம்மது 12 முறை படையெடுத்துள்ளார். பலமுறை இந்து மன்னர்களுக்கு ஆதரவாகப் போர் செய்துள்ளார்.
  3.     1526- முதல் பானிபட் போர்- பாபர்- இப்ராகிம் லோடி இடையே நடந்தது. லோடிக்கு ஆதரவாக 40,000 இந்துக்கள் போரிட்டனர்.
  4.      பாபர் துப்பாக்கி பவுடரை முதன் முதலில் பயன்படுத்தினார்.
  5.      ஹுமாயூன் இஸ்லாத்தில் சுஃபி பிரிவை ஆதரித்தார். 
  6.     அக்பர் சிறந்த பொதுப்பணிகளை அமலாக்கினார். மதத்தில் நாட்டம் இல்லை; இராமாயணமும் மகாபாரதமும் பார்சி மொழியில் மொழிபெயர்ப்பு/ பைபிள் மொழி பெயர்ப்பு/ சிர்சியா வரி ஒழிப்பு/ உடன் கட்டை ஏறுதலை கைவிடக்கோரி இந்துக்களிடம் வற்புறுத்தல்.
  7.     நிதி அமைச்சர் தோடர்மால்-திட்டமிடப்பட்ட வரி வசூல் முறை – மூன்றில் ஒரு பங்கு அரசுக்கு என நிர்ணயிப்பு/ தில்லி உலகிலேயே அழகான நகரமாக ஆக்கப்பட்டது.
  8.     அக்பருக்கு எதிராக கலகம் செய்த முஸ்லிம் அதிகாரிகள்- அப்துல்லாகான், மூன்று மிர்சா சகோதரர்கள், தாவூத், ஷேர்கான், ஹக்கீம்(அக்பரின் சகோதரர்), யூசுஃப், உஸ்பெக் முஸ்லிம்கள், பெர்சிய முஸ்லிம்கள், சுல்தானா சந்த்,சலீம் (அக்பரின் மகன்).
  9.     1764இல் முதல் சிப்பாய்க் கலகம் –பாட்னாவில்- சிப்பாய்கள் பீரங்கியின் வாயில் கட்டி சுடப்பட்டனர்.
  10.     1766இல் 50,000 அதிகாரிகள் ராபர்ட் கிளைவை எதிர்த்து ராஜினாமா (பாட்டா தொகை அழிப்பை எதிர்த்து) 50,000 பேரும் டிஸ்மிஸ்- இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை.
  11.     1773- முகம்மதியர்களுக்கு குரான்/ இந்துக்களுக்கு- வேதங்கள்/ ஏனைய உள்ளூர் மக்களுக்கு அவர்களுக்குரிய சட்ட திட்டங்கள் என முடிவு.
  12.     1855-56 சந்தால் பழங்குடியின மக்களின் கலகம் 7 மாதங்கள்! தமிழ்நாடு குறித்து:
  13.     டெக்கான் பிரதேசத்தில் 5 மொழிகள்- தமிழ்- திராவிட தேசத்தில்/ கன்னடம்/ தெலுங்கு /மராத்தி/ஒரியா
  14.     மிகவும் பழமையான ஆட்சி மற்றும் மொழி தமிழ்.
  15.     பாண்டிய அரசாங்கம்- தலைநகரம்-மதுரை.
  16.     சோழர்கள்- தலைநகரம்- காஞ்சிவரம்.
  17.     சேரர்கள்- திருவாங்கூர்/கோயம்புத்தூர்/மலபார் பகுதி.
  18.     மாலிக்காபூர் கன்னியாகுமரி வரை படையெடுத்தது; முதல் முஸ்லிம் படையெடுப்பு தமிழகத்தில் என குறிப்பிடுகிறார். குமரியில் ஒரு மசூதியை மாலிக்காபூர் கட்டியதாகவும் குறிப்பிடுகிறார்.
  19.     1807 வேலூர் கலகம்- திப்புவின் புதல்வர்கள் பங்கேற்பு
  20.     மெட்ராஸ் ராயத்வாரி அமைப்பு- மூன்றிலொரு பங்கு அரசுக்கு- விளைச்சல் தவறினால் முழு கிராமும் அரசுக்கு வரி கட்ட வேண்டும்- விவசாயி வேண்டும் என்றே விளைச்சலை பாதித்தால்- தண்டனை.

இப்படி பல குறிப்புகளை காரல் மார்க்ஸ் அவர்கள் எடுத்து வைத்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக அவற்றை பயன்படுத்தி விரிவான நூல்களை அவரால் உருவாக்க இயலவில்லை. எனினும் மார்க்சின் (ஏங்கெல்சும் உட்பட) எழுத்துக்கள் இன்றளவும் கம்யூனிஸ்டுகளுக்கு மிகச்சிறந்த வழிகாட்டுதல்களாக விளங்குகின்றன! தற்சமயம் மிகப்பெரிய அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கம்யூனிஸ்டுகள் காரல் மார்க்சிடமிருந்து கற்பது மிக இன்றியமையாதது எனில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை!


 



 

 

 

;