10 ஆயிரம் பேரை புறக்கணிக்கும் வகையில் மேம்பாலம் அமைப்பதா?
மேம்பாலங்கள் அமைக் கப்படும்போது சாலை வசதி பெருகி அப்பகுதி வளர்ச்சி அடையும் என்பதால் அனைவரும் வரவேற்பர். ஆனால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியை தனிமைப்படுத்தும் விதமாக மேம்பாலம் அமைக்க திட்ட மிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் விரிகோடு மக்கள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இப்போராட்டம் குறித்து ஒரு நேரடி ரிப்போர்ட். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் விரிகோடு ரயில்வே கிராசிங் உள்ளது. இந்த வழித்தடத்தில் திருவனந்தபுரம் நாகர்கோவில் இடையே முன்பு ஓரிரு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. தற்போது தினமும் 30 பயணிகள் ரயிலும், கூடுதலாக சரக்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அதோடு மார்த்தாண்டம் கருங்கல் சாலையில் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, மேம்பாலம் அல்லது சுரங்க சாலை அமைக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. அதற்காக இப்பகுதி மக்கள் சுமார் 15 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைத்துக் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருவதோடு போராட்டங்களில் பங்கேற்றும் வருகிறார்கள். பரிந்துரையை புறக்கணித்த நெடுஞ்சாலைத்துறை ரயில்வே நிர்வாகமும் மேம்பாலம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது சாலை அமைந்துள்ள பகுதியிலேயே குறைந்த செலவில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என்பதையே பல்வேறு ஆய்வுகளிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், பத்மநாபபுரம் சாராட்சியர் தலைமையிலான கருத்துக் கேட்பு கூட்டங்களில் இதே கருத்துகள் பொதுமக்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் அரசுக்கு பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவற்றை புறக்கணித்து நெடுஞ்சாலைத்துறையினர் மாற்றுப்பாதையில் பாலம் அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான அரசாணைகள் 2015 இல் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்தபோதும், 2019 இல் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றுத்திட்டம் என்பதே முற்றிலும் பெரும் பொருட் செலவில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தை நோக்கமாகக் கொண்டது என்கிறார்கள் இப்பகுதி மக்கள். ஏற்கெனவே தேசிய நெடுஞ்சாலை 66-க்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு இணையாக மற்றொரு சாலை அமைப்பது அவசியமற்றது. அதிக அளவில் விவசாய நிலங்களை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் இதில் ஏற்படுகிறது. இதுகுறித்து பூமத்து நடையைச் சேர்ந்த வில்சன் என்கிற விவசாயி கூறுகையில், எனக்கு 60 சென்ட் நிலமும் வீடும் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அடிக்கடி இந்த பகுதிக்கு வந்து கல் நட்டு அச்சுறுத்தி வருகிறார்கள் என்றார். விரிகோடு நெடுஞ்சாலையில் இருந்து புதிய பாலம் அமைக்க திட்டமிட்டுள்ள நுழைவுப் பகுதியில் கல்லறைகள் உள்ளன. இங்குள்ள மக்கள் கூறுகையில் ஏற்கெனவே, இரட்டை ரயில் பாதைக்காக ஒரு பகுதி நிலத்தை எடுத்துக்கொண்டார்கள். இப்போது தேவையற்ற மேம்பாலம் அமைக்கிறோம் என்று மீதி நிலத்தையும் பறித்துக்கொண்டால் இங்க இருக்கிற ஏழெட்டு குடும்பம் எங்கே போவது என்று பதற்றத்தோடு கேட்கிறார்கள். ஓய்வு பெற்ற அரசுப்பேருந்து ஓட்டுநரான பால்ராஜ் கூறுகையில், இப்போதுள்ள சாலை வளைவாக உள்ளதாகவும், நேர்கோட்டில் புதிய பாலம் அமைப்பதாகவும் கூறுகிறார்கள். மாநில நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல சென்னை – பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையே வேலுர் மாவட்டம் ஆம்பூரில் ‘S’ வடிவ வளைவு மேம்பாலமாக அமைக்கப்பட்டுள்ளதை ஒரு முறை இந்த அதிகாரிகள் பார்த்துவிட்டு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். தகவல் கோரும் மனுவுக்கு அளித்துள்ள பதிலில் 50 கட்டடங்கள் இடிக்க வேண்டி வரும் என தவறான தகவல் அளிக்கிறார்கள் என்றார். இப்போதுள்ள சாலையை கைவிட்டு சுற்றி வளைத்து புதிய பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டால் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும். அதன்மூலம் விரிகோடு மட்டுமல்லாமல் காரவிளை, கொல்லஞ்சி, காவு மூலை, எலவிளை, காட்டாவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களுக்கான நேர்வழிப்பாதையே பறிபோகும். சாலை வசதி மூலம் வளர்ச்சி கண்டுள்ள இப்பகுதி போக்குவரத்து தொடர்பற்றதாக தனிமைப்படுத்தப்பட்டு விடும். அதிமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட தவறான அரசாணைகளை ரத்து செய்து, தற்போதுள்ள 54 அடி அகல சாலையில் மேம்பாலம் அமைத்து பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இப்பகுதி மக்களுக்கு தமிழக அரசு நீதி வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. செப்.6 இல் சிபிஎம் தர்ணா விரிகோடு பகுதி மக்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் செப்டம்பர் 6 சனிக்கிழமையன்று மாலைநேர பெருந்திரள் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது. இதில் இப்பகுதி மக்களுடன் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பங்கேற்க உள்ளதாகவும் சிபிஎம் நல்லூர் வட்டாரச் செயலாளர் எம்.ஜஸ்டின் தெரிவித்தார். -சி.முருகேசன்
