புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழாவில் ரூ.1.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை
புதுக்கோட்டை, அக். 13- புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய 8 ஆவது புதுக்கோட்டைப் புத்தகத் திருவிழாவில் மொத்தம் ரூ.1.5 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. புதுக்கோட்டை நகர்மன்றத்தில், கடந்த அக்.3 ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரை 10 நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற்றது. மொத்தம், 80 புத்தக அரங்குகளும், 17 இதர அரங்குகளும் இடம்பெற்றிருந்தன. 120 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 20 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளின் மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் மற்றும் இதர புத்தக ஆர்வலர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் பார்வையிட்டனர். 10 நாட்களிலும் மொத்தம் ரூ.1.50 கோடி மதிப்பில் நூல்கள் விற்பனையானதாக புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமை வகித்துப் பேசினார். அறிவியல் இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலர் எம்.எஸ். முஹம்மது பாதுஷா வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, அன்னைத் தமிழின் அடையாளம் யார்? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. எழுத்தாளர் நா. முத்துநிலவன் நடுவராகவும், தொல்காப்பியரே என மு. பாலசுப்பிரமணியன், வள்ளுவரே என கும. திருப்பதி, கம்பரே என மகா சுந்தர், ஒளவையாரே என இரா. ராமதிலகம், பாரதியாரே என மு.கீதா ஆகியோர் பேசினர்.
