புதுச்சேரி நியமன எம்எல்ஏக்களாக மீண்டும் பாஜகவினர் நியமனம்
புதுச்சேரி, ஜூலை 11- புதுச்சேரியில் நியமன எம்எல்ஏக்களாக பாஜகவைச் சேர்ந்த 3 பேரை மீண்டும் நியமித்து ஒன்றிய பாஜக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் புதுச்சேரி தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக உள்ளார். பாஜகவைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர்கள் பதவி ஒதுக்கப்பட்டன. 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவியை பாஜக கபளீகரம் செய்து கொண்டது. இந்நிலையில், புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களாக இருந்த ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் கட்சித் தலைமையின் உத்தரவை தொடர்ந்து ராஜினாமா செய்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் சுகாதாரத் துறை இயக்குநர் நியமனத்தில் துணை நிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. தனது விருப்பத்திற்கு மாறாக, சுகாதாரத் துறை இயக்குநர் நியமிக்கப்பட்டதால் அதிருப்தியடைந்த ரங்கசாமி, கடந்த 8 ஆம் தேதி சட்டமன்றத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். கடந்த 2 நாட்களாக ரங்கசாமி சட்டமன்றம் செல்லாத நிலையில், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முதலமைச்சர் இல்லத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சருக்கும் தனக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கூறினார். இதையடுத்து, மீண்டும் பாஜகவைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, பாஜக மூத்த நிர்வாகி செல்வம், முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான், காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர் ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜூலை 15 ஆம் தேதி சட்டப்பேரவையில் பதவி ஏற்பார்கள் என்று உள்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய அமைச்சர் புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய அமைச்சராக ஜான் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.