tamilnadu

img

போக்சோவில் கைதானாவருக்கு ஜாமீன் மீண்டும் கைது செய்யக்கோரி மாதர் சங்கம் மனு

போக்சோவில் கைதானாவருக்கு ஜாமீன் மீண்டும் கைது செய்யக்கோரி மாதர் சங்கம் மனு

தருமபுரி, செப்.2- சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, சிறைக்கு சென்றவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, மீண்டும் கைது செய்யக்கோரி மாதர் சங்கத்தினர் தருமபுரி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரிடம் மனு அளித்தனர். அம்மனுவில், தருமபுரியைச் சேர்ந்த 13 வயது பள்ளி சிறுமியை, பழைய இரும்பு வாங்கி வியாபாரம் செய்து வரும் பழனிமுருகன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தருமபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் கடந்த ஜூன் 9 ஆம் தேதியன்று பழனி முருகன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இவர் வெளியே சுற்றித்திரிவதால் சிறுமியின் குடும்பத்திற்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது. எனவே, ஜாமீனில் வெளிவந்த பழனிமுருகனை மீண்டும் கைது செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மல்லிகா, மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா, மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி, எஸ்.நிர்மலா ராணி, மீனாட்சி, கே.சுசிலா, சுபா, மங்கை, ரங்கநாயகி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.