பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு
நாமக்கல், செப்.11- நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில், பாதுகாப்பான ரயில் பயணம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் சாலைப் பாதுகாப்பு மன்றம், உள் தர உறுதி மையம் மற்றும் சேலம் கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில், ‘பாதுகாப்பான ரயில் பயணம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி’ புதனன்று நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) மு.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். சேலம் ரயில்வே கோட்டத்தைச் சேர்ந்த புலனாய்வு பிரிவு காவல் ஆய்வாளர் கோயா கலந்து கொண்டு, ரயில்வே துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் பற்றியும், ரயில் பயணம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எவ்வாறு நாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி எடுத்துரைத்தார். கரூர் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி காவல் ஆய்வாளர் நாயுடு, நாமக்கல் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி காவல் ஆய்வாளர் குமரேசன் ஆகியோர், பாதுகாப்பான ரயில் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் கரூர் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் ராஜலட்சுமி, கல்லூரி துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.