ஆக.15 கிராம சபை கூட்டம்
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராம ஊராட்சிகளில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சுத்தமான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனைப் பிரிவு, கட்டிட அனுமதிகள், சுய சான்று அடிப்படையில் குடி யிருப்புக் கட்டிடங்களுக்கு உடனடி பதிவு மூலம் அனுமதி அளித்தல் ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் ஆகியவை தொடர்பாகவும் விரிவாக ஆலோசிக்கப்பட வேண்டும். பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொதுக் கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
எம்.எட். சேர்க்கை தொடக்கம்
சென்னை: 2025-26 ஆம் கல்வியாண்டுக்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. 6 அரசு கல்வி யியல் கல்லூரிகளில் உள்ள 300 இடங்களுக்கு ஆகஸ்ட் 20 வரை www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பிக் கலாம். தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளி யிடப்பட்டு, சேர்க்கை ஆக.26 முதல் 29 வரை நடைபெறும். முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் தொடங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரி வித்திருக்கிறார்.
‘அகல்விளக்கு’ திட்டம்
சென்னை: அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இணையப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த ‘அகல்விளக்கு’ திட்டம் தொடங்கப்படுள்ளது. இணையவழிக் குற்றங்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்தும் மாணவிகளுக்கு வழி காட்டுதல் வழங்கப்படும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இதற்காக விழிப்புணர்வுச் சிற்றேடு மற்றும் காணொலிகளை உருவாக்கியுள்ளது. இத்திட்டம் Career Guidance ஆசிரியர்கள் வாயிலாக பள்ளிகளில் நடத்தப்படும்.
நடிகர் மீது புகார்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் சனாதனம் குறித்துப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆக.3 ஆம் தேதி அகரம் அறக்கட்டளை விழாவில் கமல்ஹாசன் நீட் தேர்வு மற்றும் சனாதன தர்மம் குறித்துப் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவிச்சந்திரன் “சங்கை அறுப்பேன்” என மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு
சென்னை: வங்கக் கடலில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், புதுக் கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும், புதுவையிலும் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.