ரயில் நிலையங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்த கூடுதலாக காவலர்கள்
சென்னை, அக்.15- தீபாவளியை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதலாக 350-க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் இருந்து தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால், வழக்கத்தை விட ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் அதிக அளவில் உள்ளது. வரும் 17, 18, 19 ஆகிய தேதிகளில் இன்னும் அதிக அளவில் கூட்டம் அதிகரிக்கும் என்று கணிக்கப்படுகிறது. இதனால், ரெயில் நிலையங்களில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், முன்பதிவில்லாத ரயில் பெட்டிகளில் செல்வோரை முறைப்படுத்தவும் தற்போதுள்ள ரயில்வே பாதுகாப்பு படையினரைவிட கூடுதல் போலீசார் தேவைப்படுகின்றனர். எனவே, ஜோலார்பேட்டை, அரக்கோணம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர் செவ்வாயன்று சென்னை வந்தடைந்தனர். சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த அவர்களுக்கு பாதுகாப்பு பணிகள், கூட்டத்தை கட்டுப்படுத்துதல் குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே உள்ளனர் என்றும், தீபாவளியை முன்னிட்டு சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்கள். இவர்கள் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், கிண்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.