tamilnadu

img

சிறைக் கூடம் செதுக்கிய சிற்பி... -

கடந்த 2009-ஆம் ஆண்டு இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டார் கோயம்புத்தூர் திம்மம்பாளையத்தைச் சேர்ந்த ராஜ்குமார், நான்கு மாதங்கள் சிறையில் இருந்தார். அப்போது சிறைச் சுவர்களில் படங்கள், சித்திரங்களை வரையத் தொடங்கினார். சிறைவாசியாக இருந்து வெளியே வந்துள்ள அவர் தற்போது சிறந்த ஓவியக் கலைஞராக விளங்குகிறார். 

கடந்த 2009-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இருசக்கர வாகனத் திருட்டு வழக்கில், காட்டூர் காட்டூர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார் ராஜ்குமார். இவர் வேறொரு நபரிடமிருந்து வாகனத்தை வாங்கியுள்ளார், அப்போது தான் வாங்கிய வாகனம் திருடப்பட்டது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. சிறிது காலம் அந்த வாகனத்தைப் பயன்படுத்தி வந்த ராஜ்குமார். தனது மனைவியின் மூன்றாவது பிரசவத்திற்கு பணம் தேவைப்பட்டதைத் தொடர்ந்து அதை வேறொருவருக்கு விற்றுள்ளார். இரு சக்கர வாகனத்தை விற்ற சில நாட்களில் காவல்துறை ராம்குமாரை திருட்டு வழக்கில் கைது செய்து கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தது. அங்கு நான்குமாதங்கள் விசாரணைக் கைதியாக இருந்துள்ளார். சிறையிலிருந்த காலத்தில் சுவர்களில் படங்கள், சித்திரங்கள் வரைந்துள்ளார். இவரது ஓவியத் திறமையைப் பார்த்த அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.  தொடர்ந்து சிறை அதிகாரி சீனிவாசலு, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு, கோயம்புத்தூர் நகர் முழுவதும் சுவர் ஓவியங்கள் வரைவதற்காக ராஜ்குமார் பெயரை பரிந்துரைத்தார். இந்த நிலையில் ஜாமீனில் வெளியே வந்தார். 2011-ஆம் ஆண்டு வழக்கிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்.

 இதையடுத்து ராஜ்குமார் ஒரு விளம்பர நிறுவனத்தில் சுவர் விளம்பரங்கள் வரையும் கலைஞனாக சேர்ந்தார். முப்பரிமாண ஓவியங்கள் (3-டி) வரைவதை நண்பர் ஒருவர் மூலம் கற்றறிந்தார். தொடர்ந்து சிற்ப வடிவமைப்பிலும் கைதேர்ந்த அவர் கோயம்புத்தூர் நகரில் பலருக்கு அலங்கார சிற்பங்களை வடிவமைத்துக் கொடுத்துள்ளார்.  தொடர்ந்து அவரது நண்பர் ஒருவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு முன்னணி கட்டுமான நிறுவனத்தில் வேலை கிடைப்பதற்கு உதவியுள்ளார். அந்த நிறுவனத்தில் சுவரோவியங்கள், மற்றும் சிற்பங்களை வடிவமைக்கும் வேலைகளில் உதவியாளராக இருந்துள்ளார் ராஜ்குமார். அங்கு கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தி சிற்பம் செதுக்கும் பணியை கற்றுக்கொண்டார். தற்போது ராஜ்குமாரிடம் ஏழு பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் அனுபவத்தின் மூலம் தேர்ச்சி பெற்றவர்கள். படைப்பாற்றலாலும் கடின உழைப்பாலும் தற்போது ராஜ்குமார் தொழிலதிபராக மாறியுள்ளார். கவுண்டம்பாளையத்தில் ஆர்ட் சோழாஸ் என்ற நிறுவனத்தை வைத்திருக்கிறார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் சிற்பங்கள், குடியிருப்பின் முகப்பு பகுதி, வளைவுகள் மற்றும் நீரூற்றுகளை வடிவமைத்துள்ளார். 

முத்தாய்ப்பாக கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலக புதிய நுழைவு வாயிலில் இரண்டு சிற்பங்களை வடிவமைத்து நிறுவ ஆர்டர் கிடைத்துள்ளது ராஜ்குமாருக்கு. ஆட்சியர் அலுவலக வாயிலில் சிற்பம் வடிவமைக்க ஆர்டர் கிடைத்தது குறித்து அவர் கூறியதாவது:- “நான் சில மாதிரிகளை சமர்ப்பித்தேன், அதிகாரிகள் இரண்டு சிற்பங்களைத் தேர்ந்தெடுத்தனர். அதில் ஒன்று புத்தகத்தின் மீது அமர்ந்து புத்தகத்தைப் படிக்கும் ஒரு சிறுவனும், கல்வியின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கும் ஒரு சிறுமியும் பறக்க முயல்கின்றனர். நன்றாகப் படிப்பவர்கள் வாழ்வில் உயரத்தை அடைவார்கள் என்பதைக் குறிப்பதாகும். மற்றுமொரு சிற்பம் இயற்கை அன்னையைப் பாதுகாப்பது என்ற கருப்பொருளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  இரண்டு சிற்பங்களும் சுமார் 16 மீட்டர் உயரம் கொண்டவை மற்றும் கான்கிரீட் மற்றும் இரும்பு பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது சிற்பங்கள் ஒவ்வொன்றும் சுமார் 1.5 டன் எடை கொண்டது. என்னோடு ஏழு கலைஞர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு சிற்பத்தை முடிக்க குறைந்தது 20 நாட்கள் ஆகும் என்றார். சிறை வாழ்க்கை குறுகிய காலமே என்றாலும் தனது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறிய ராஜ்குமார் “நான் கைது செய்யப்படவில்லை என்றால், நான் ஒரு சிற்பியாகியிருக்க மாட்டேன் என்றார்.