tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அரியலூர் மாவட்ட  சுகாதாரப் பேரவை

அரியலூர், செப்.15-  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட சுகாதாரப் பேரவை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 10 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். முன்னதாக, மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார மையங்களில் கட்டமைப்பை மேம்படுத்துவது, பொதுமக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் தடையின்றி வழங்கிடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட சுகாதார அலுவலர் மணிவண்ணன், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதன்மையர் முத்துக்கிருஷ்ணன், குடும்ப நல துணை இயக்குநர் ஜெயந்தி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய, வட்டார மருத்துவர்கள், பணி யாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பருத்தி மறைமுக ஏலம்

பாபநாசம், செப். 15-  தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் இயங்கி வரும், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது.  ஏலத்திற்கு கண்காணிப்பாளர் சித்தார்த்தன் தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். ஏலத்தில் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 95 விவசாயிகள், 33.70 மெட்ரிக் டன் அளவு பருத்தியை எடுத்து வந்தனர்.  பண்ருட்டி, கொங்கணாபுரம், செம்பனார்கோவில், திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த 6  வணிகர்கள் மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு பருத்திக்கு அதிகபட்சம் ரூ.7,769, குறைந்தபட்சம் ரூ.6,659, சராசரி ரூ.7,358 என விலை நிர்ணயித்தனர். மொத்த மதிப்பு ரூ.24.79 லட்சம்.

ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட  டாஸ்மாக் மதுபாட்டில்கள் பறிமுதல்

தஞ்சாவூர், செப். 15-  தஞ்சாவூர் அருகே, கரம்பை – திருவையாறு புறவழிச் சாலையில் கடந்த செப்.13 ஆம் தேதி அதிகாலை வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி காவலர்களுடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சென்ற ஆட்டோவை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால், அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது.  இதையடுத்து, காவலர்கள் விரட்டிச் சென்று அந்த ஆட்டோவை மடக்கினர். அப்போது அதில் வந்தவர்கள் சட்டென்று ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பியோடி விட்டனர். பின்னர், ஆய்வாளர் ஜெயந்தி மற்றும் காவல்துறையினர் ஆட்டோவை பரிசோதனை செய்ததில், 1,243 மதுபாட்டில்கள், 2 கம்பிகள் இருந்தன.  அவற்றை பறிமுதல் செய்து மேற்கொண்ட விசாரணையில், ஆட்டோவில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்கோட்டை காவல் சரகம், கோவிலூர் அரசு மதுபான கடை எண் 6603-ல் காவலாளியை தாக்கிவிட்டு திருடி கொண்டு வரப்பட்டவை எனத் தெரிய வந்தது. இவ்வழக்கு தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, கந்தர்வகோட்டை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.