இணையவழிக் கல்வி தன்னார்வ அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா
புதுக்கோட்டை, ஜூலை 29- இணையவழிக் கல்வி வானொலியான www.kalviradio.com இல் கல்வி வளர்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மாணவர்களின் குரல் பதிவுகளைப் பதிவு செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடைபெற்றது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ரோட்டரி கிளப் ஆஃப் பேலஸ் சிட்டி மற்றும் கல்விக்கண் திறந்த காமராஜர் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவிற்கு மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் முனைவர் பெ. நடராஜன் தலைமையுரை வழங்கினார். விழாவில் தேசிய நல்லாசிரியர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை பேலஸ் ரோட்டரி சங்கத் தலைவர் கோ. முருகராஜ், கே.கே. டிரஸ்ட் பா. கணேஷ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நல்லாசிரியர் ப. கலைவாணி வரவேற்புரை வழங்கினார். முனைவர் ரா. கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் புவனேஸ்வரி, விரிவுரையாளர் கவிஞர் காசிநாதன், கல்வியாளர் அ. குமரன், ரோட்டரி சங்க செயலாளர் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். நல்லாசிரியர் ஆ. கார்த்திக் ராஜா சிறப்புரையும், இணையவழிக் கல்வி வானொலி முன்னறிவிப்பாளர் பணியையும் மேற்கொண்டார். ஆவூர் அரசுப் பள்ளி ஆசிரியர் க. கயல்விழி ஏற்புரையும், ஊ.ஒ.தொ. பள்ளித் தலைமையாசிரியர் நன்றியுரையும் வழங்கினர். இணையவழிக் கல்வி வானொலி மூலம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதில் ஆசிரியர்களின் தன்னார்வப் பணி பாராட்டத்தக்கது என்று விழாவில் வலியுறுத்தப்பட்டது.