சர்வதேச விளையாட்டு நட்சத்திரம் கரூர் யாழினிக்கு பாராட்டு விழா
கரூர், செப். 25-
கரூர் பரணி பார்க் பள்ளி வளாகத்தில், உலக அரங்கில் தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் சர்வதேச விளையாட்டு நடசத்திரம் கரூர் யாழினிக்கு சிறப்பு வரவேற்பு, பாராட்டு விழா பரணி பார்க் கல்விக் குழுமத் தாளாளர் மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது.
தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற 9 ஆவது ஆசிய சாப்ட் டென்னிஸ் போட்டிகளில், இந்தியா சார்பாக அபாரமாக விளையாடி வெண்கலப் பதக்கம் வென்று, தாய்நாட்டிற்கும், தமிழ் மண்ணிற்கும், கரூருக்கும் பெருமை சேர்த்த பரணி வித்யாலயா பள்ளி 12 ஆம் வகுப்பு மாணவி சர்வதேச விளையாட்டு நட்சத்திரம் யாழினி ரவீந்திரன், வியாழனன்று தாய்நாடு (கரூர்) திரும்பினார்.
சர்வதேச விளையாட்டு நட்சத்திரம் யாழினி மற்றும் யாழினியின் பெற்றோர் ரவீந்திரன், தீபா ஆகியோரை பள்ளியின் சார்பாக ஆயிரக்கணக்கான மாணவ- மாணவியர், ஆசிரியர்கள் தேசியக் கொடியசைத்து, வாத்தியக் குழுவின் அணிவகுப்பு, தேசிய மாணவர் படை சிறப்பு மரியாதையுடன் வரவேற்றனர்.
பரணி கல்விக் குழும செயலாளர் பத்மாவதி, அறங்காவலர் சுபாஷினி, முதன்மை முதல்வர் முனைவர்.ராமசுப்பிரமணியன், முதல்வர் சுதாதேவி, துணை முதல்வர் பிரியா, ஒருங்கிணைப்பாளர் ஜெர்லின், இருபால் ஆசிரியப் பெருமக்கள் யாழினியின் பல்வேறு தேசிய, சர்வதேச விளையாட்டு சாதனைகளைப் பாராட்டிப் பேசினர்.
தாய்லாந்தில் நடை பெற்ற சர்வதேச சாப்ட் டென்னிஸ் போட்டியில் இந்தியா சார்பாக பங்கு பெற்று இரட்டையர் பிரிவில் யாழினி ஒரு தங்கப் பதக்கமும், தனி நபர் பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும் என மொத்தமாக 2 தங்கப் பதக்கங்கள் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
பஞ்சாபில் நடை பெற்ற 21 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சீனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில், தமிழ்நாடு சார்பாக யாழினி பங்கு பெற்று குழு பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2 வெண்கலப்பதக்கமும் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடைபெற்ற 16 ஆவது தேசிய சாப்ட் டென்னிஸ் போட்டியில் யாழினி சப்-ஜூனியர் பிரிவில், தமிழக அணியின் சார்பாக பங்கு பெற்று 4 பதக்கங்கள் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
மேலும், தேசிய சப் ஜூனியர் போட்டிகளில் குழு பிரிவு மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் 2 தங்கப் பதக்கங்களும், தனி நபர் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கமும் என தேசிய அளவில் 4 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார்.
ஹரியானாவில் நடைபெற்ற 20 ஆவது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஜூனியர் சாப்ட் டென்னிஸ் போட்டியில் யாழினி, தமிழ்நாடு சார்பாக பங்கு பெற்று குழு பிரிவில் ஒரு தங்கப் பதக்கமும், தனி நபர் மற்றும் இரட்டையர் பிரிவில் 2 தங்கப் பதக்கமும் வென்று அபார சாதனை படைத்துள்ளார்.
மேலும், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.