tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

பணி நியமன ஆணை வழங்கல்

பெரம்பலூர், ஆக. 29-  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் திட்ட கண்காணிப்பு பணிகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 818 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கு 22.08.2025 அன்று முதல்வர், பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு நபரும், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 3 நபர்களும், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு நபரும், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 நபர்களும் என மொத்தம் தெரிவு செய்யப்பட்ட 8 சாலை ஆய்வாளர்களுக்கு பணி இடங்களுக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.  இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை அலுவலக மேலாளர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்.

‘உங்களுடன் ஸ்டாலின்’  திட்ட முகாம்

பாபநாசம், ஆக. 29-  தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, அகரமாங்குடியில் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடந்தது.  அகரமாங்குடி, வடக்கு மாங்குடி, சுரைக்காயூர், செருமாக்கநல்லூர், வேம்புகுடி உள்ளிட்ட ஊராட்சிகளுக்கான முகாமில், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் வரப்பெற்று, நடவடிக்கைக்காக உரிய துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.  இதில் திமுக அம்மாபேட்டை வடக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள், பாபநாசம் தாசில்தார் (பொறுப்பு) சுமதி, தொழிலாளர் உதவி ஆணையர் - சமூக பாதுகாப்புத் திட்டம் நடராஜன், தொழிலாளர் துணை ஆய்வாளர் கலைமதி, அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவரோஜா, நந்தினி, வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.