tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஆக. 23-  அகில இந்திய கருப்பு தினமாக அறிவித்து, வட்டார தலைநகரங்களில் தமிழ்நாடு அங்கன்வாடி உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் சார்பாக மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  திருவாரூர், வலங்கைமான், மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர், நன்னிலம், முத்துப்பேட்டை, கொரடாச்சேரி மற்றும் திருத்துறைப்பூண்டி என திருவாரூர் மாவட்டத்தில் ஒன்பது மையங்களில் உள்ள வட்டாரக் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.   மையப் பணிகளை செய்வதற்கு 5ஜி செல்போன், 5ஜி சிம் கார்டு வழங்கிட வேண்டும். அந்தந்த கிராமத்தின் நெட்வொர்க்கிற்கு ஏற்ப சிம் கார்டு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கண்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சுகந்தி தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.மாலதி கோரிக்கை விளக்கி உரையாற்றினார். வலங்கைமானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஜெயசித்ரா தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அ.பிரேமா, மாநில செயற்குழு உறுப்பினர் பி.சித்ரா உள்ளிட்ட பலர் கோரிக்கை வலியுறுத்தி உரையாற்றினர். நன்னிலத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ராதா தலைமை ஏற்றார். மாவட்டத் தலைவர் வி. தவமணி, சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் டி.வீரபாண்டியன், சீனி.மணி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி  உரையாற்றினார்கள். கொரடாச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பிரபா தலைமை தாங்கினார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் கே. கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.  இதேபோல் முத்துப்பேட்டை, கோட்டூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.