நூறு நாள் வேலை வழங்கவில்லை வேட்டமங்கலத்தில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர், ஆக. 26- கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேட்டமங்கலம் ஊராட்சியில், நூறு நாள் வேலை அனைவருக்கும் வழங்கிட வலியுறுத்தி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சியில் 8,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயமே பிரதான தொழிலாகும். போதுமான வேலை வாய்ப்பின்மையால் வேறு தொழில்களுக்கு நகரத்தை நோக்கி செல்லக் கூடியவர்கள் மிக அதிகமாக உள்ளனர். ஆனாலும், விவசாயக்கூலி வேலையை மட்டுமே நம்பியுள்ள ஆயிரக் கணக்கான குடும்பங்கள், நூறு நாள் வேலையை நம்பியே உள்ளன. ஊராட்சி நிர்வாகம் நடப்பு ஆண்டில் அனைவருக்கும் நூறு நாள் வேலையை ஒருநாள் கூட கொடுக்காமல் பொதுமக்களை வஞ்சிக்கும் நோக்கில் திட்டத்தை கிடப்பில் போடப் பட்டுள்ளது. நொய்யல், வேட்டமங்கலம், பங்களா நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்பகுதிகளில் நூறு நாள் வேலையை நம்பியே வாழ்க்கை நடத்தும் பொது மக்களுக்கு நூறு நாள் வேலையை வழங்கு வதற்கு உடனடியாக வேட்டமங்கலம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நூறு நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும். நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ரூபாய் 400 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் கரூர் ஒன்றியக் குழு சார்பில், வேட்ட மங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் கரூர் ஒன்றிய அமைப்பாளர் மா. குணசேகரன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி. ஜீவானந்தம், விதொச மாவட்டச் செய லாளர் பி. ராஜு, சிபிஎம் கரூர் ஒன்றியச் செயலாளர் சி. முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். ராஜேந்திரன், புகழூர் நகராட்சி கவுன்சிலர் அ. இந்துமதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் ஒன்றிய அமைப்பாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகி யோர் உரையாற்றினர். வழக்கறிஞர் ஜி. பாண்டியன், விசிக சுரேஷ்குமார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.