விவசாய ஆலோசனைக் குழு கூட்டம்
பாபநாசம், செப். 24- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வேளாண் துறை அட்மா திட்டத்தின் சார்பில், 2025-2026 ஆம் ஆண்டிற்கான வட்டார விவசாய ஆலோசனைக் குழு கூட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடந்த கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் தலைமை வகித்தார். வட்டார விவசாய ஆலோசனைக் குழு தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் மோகன், அட்மா திட்டம் 2025-26 ஆம் ஆண்டிற்கான முதல் இன்ஸ்டால்மெண்ட் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இதில் வேளாண் இடுபொருட்கள், வேளாண் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. பட்டு வளர்ச்சித் துறை தீபா, பட்டுப் பூச்சி வளர்ப்பு மற்றும் மல்பெரி சாகுபடி தொழில்நுட்பங்கள், மானியங்கள் குறித்து விளக்கவுரையாற்றினார். வேளாண் பொறியியல்துறை கண்ணபிரான், வேளாண் இடுபொருட்கள், மானியம் மற்றும் வாடகை குறித்து விளக்கவுரையாற்றினார். கூட்டத்திற்கான ஏற்பாட்டினை அட்மா திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பை பாஸ் சாலையில், இரவு நேரத்தில் மாடுகள் உட்கார்ந்துக் கொள்கின்றன. இதனால் விரைவாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்க நேரிடுகிறது. எனவே அய்யம்பேட்டை பேரூராட்சி நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்துமாறு, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.