நாகையில் அதிகரிக்கும் ஆவின் குளறுபடி! பாதிப்புக்குள்ளாகும் பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி கண்டனம்
நாகப்பட்டினம், செப். 8- நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டாரத்தில் சுமார் 15 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் அரசு மூலம் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. தினசரி காலை-மாலையில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அரசு அதற்கென பரிசோதனை கருவி வழங்கி அதனடிப்படையில் எடுக்கப்பட்டு வருவது வழக்கம். ஆனால் தற்போது பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய எவ்வித திட்டமும் வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி ஊக்கத்தொகை, காப்பீடு வழங்கப்படவில்லை. மேலும் கொள்முதல் செய்யப்படும் பால் அளவு கணக்குகளிலும் குளறுபடி செய்து சரியான தொகையை வழங்குவதில்லை. தற்போது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 200 லிட்டர் பாலை ஆவின் நிர்வாகம் திருப்பி அனுப்பிவைத்த நிலையில், பாலை சாலையில் ஊற்றி எதிர்ப்பினையும் கண்டனத்தையும் தெரிவித்தனர். மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத படியும், பால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படாத படியும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.