tamilnadu

img

ஜனநாயகச் சுடராக ஒளிரும் தீக்கதிர்

தீக்கதிர் திருநெல்வேலி பதிப்பு துவக்கவிழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  வாழ்த்துச் செய்தி

சமரசமற்ற போராட்டக் குணத்தின் அச்சு வடிவமாகத் திகழ்கின்ற தீக்கதிர் இதழ், பாட்டாளி மக்களின் படைக்கலனாக உருவாகி, சமூகநீதி சமத்துவக் கொள்கைகளின் அறப்போர்க் கருவியாக 60 ஆண்டுகளைக் கடந்து பயணிக்கின்ற நிலையில், அதன் ஐந்தாம் பதிப்பாக, திருநெல்வேலி பதிப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர், முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் அவர்கள் இன்று (22-9-2023)  தொடங்கி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.  மக்களின் உரிமைகளுக்காகப் பாடுபடும் இயக்கங்களுக்குப் பத்திரிகை என்பது எந்தளவில் முக்கியமானது என்பதை ஜஸ்டிஸ், குடிஅரசு, விடுதலை, திராவிடநாடு, முரசொலி உள்ளிட்ட பல ஏடுகளின் வாயிலாகத் திராவிட இயக்கம் நிறுவிக்காட்டியது என்றால், பொது வுடைமைக் கொள்கைகளின் முழக்கமாக ஜனசக்தி, தாமரை, சமரன், தீக்கதிர், செம்மலர் உள்ளிட்ட இதழ்கள் தங்கள் பங்களிப்பைத் திறம்பட ஆற்றியுள்ளன. 

தத்துவ வலிமை

தமிழ்நாட்டின் பொதுவாழ்வுப் பயணத்தில் சமூகநீதி சமதர்மம் என்கிற தண்டவாளமாகத் திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்க மும் சமுதாய மறுமலர்ச்சி என்கிற இலக்கை அடைவதற்குத் துணை நிற்கின்றன. இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் சீரான இடை வெளி உண்டு. ஆனால், இரண்டும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் தத்துவ வலிமை கொண்ட இயக்கங்கள்.  தேர்தல் களங்கள் மாறுபட்டு இருந்த காலங்கள் உண்டு. எனினும், ஜனநாயகம் காப்பதிலும், மக்களின் உரிமையை மீட்பதிலும் இரண்டு இயக்கங்களும் பொதுவான நோக்கத்தையும் செயல்பாடுகளையும் கொண்டே எப்போதும் பயணிக்கின்றன. தமிழ் நாட்டில் தொடங்கிய பயணம் இன்று ‘இந்தியா’  முழுவதுமான பயணமாக மாறியிருக்கிறது. இது ஒரு கடினமான பாதையில், பொறுப்பு டன் மேற்கொள்ள வேண்டிய நெடிய பயணமாகும். இந்தப் பயணத்தில் ஒலிப்பானாக (horn) இருப்பதுதான் பத்திரிகை. மக்களை கவனப்படுத்தவும், விழிப்புணர்வு அடையச் செய்யவும், ஒருங்கிணைக்கவும் பத்திரிகை என்ற ஒலிப்பான் மிகவும் அவசியமானது. 

பத்திரிகையாளர் என்ற பெருமிதம்

நான் ஒரு பத்திரிகையாளரின் மகன். பொதுவாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பத்திரிகைப் பணி செய்திருக்கிறேன். பத்திரிகை நிறுவனத்திற்கு பொறுப்பு வகித்திருக்கிறேன். பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறேன். அந்த வகையில் நான் என்றும் பத்திரிகை யாளன்தான் என்பதில் பெருமிதம் உண்டு.  செய்தித்தாள்கள் அனைத்தையும் அதி காலையிலேயே படித்துவிடும் பழக்கம் கொண்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நெஞ்சுக்கு நெருக்கமான இதழ்களில் ஒன்று, தீக்கதிர்.  அதன் தலைப்புச் செய்திகளை, தலை யங்கத்தை, கட்டுரைகளை தவறாமல் படிக்கக் கூடியவர். அரசியல் சூழல்களால் தீக்கதிரில்  விமர்சனக் கருத்துகள் வைக்கப்பட்ட போதும்கூட அன்பு குறையாத வாசகராகவே தலைவர் கலைஞர் இருந்தார். அதுபோலவே, தீக்கதிரும் அரசியல் நிலைமைகளைக் கடந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தனித்துவமான செயல்பாடுகளில் அக்கறை கொண்டே இருந்தது. 2010-ஆம் ஆண்டு மாற்றுக் கூட்டணியில் இருந்தபோதும், முத்தமி ழறிஞர் கலைஞர் தலைமையில் கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காகத் தீக்கதிர் வெளியிட்ட சிறப்பு மலர், தலைவர் கலைஞரின் உள்ளங்கையில் தவழ்ந்து, அவரது உள்ளத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்தது என்றால் மிகையில்லை. அவர் வழியிலேயே தீக்கதிர் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. 

வலிமைமிக்க நாளேடு

நடப்புச் செய்திகள், நாட்டு நிலைமையை விரிவாகவும் தெளிவாகவும் விளக்குகின்ற கட்டுரைகள், சிந்தனைச் செறிவுமிக்க இலக்கியப் படைப்புகள், கலை விமர்சனங்கள் என அனைத்து வகை செய்திகளையும் ஒடுக்கப்பட்ட - உழைக்கும் மக்களின் உரிமைக் கான முழக்கமாகத் தொடர்ந்து வழங்கி வரும் தீக்கதிர், பல நெருக்கடியான காலகட்டங்களை யும் கொள்கை உறுதியுடன் எதிர்கொண்ட வலிமை மிக்க நாளேடாகும். அச்சு இதழாக மட்டு மின்றி, இணையத்தளத்திலும், மின்னிதழாக வும், காட்சி ஊடகமாகவும் காலத்திற்கேற்ற பரி மாணங்களை எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. 

திசையெட்டும் பரவட்டும்

இந்தியாவின் ஜனநாயகம் மிகப் பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிற இன்றைய சூழலில், மக்களிடம் உண்மை நிலையை எடுத்துரைத்து, விழிப்புணர்வடையச் செய்யும் பெரும் பணியை மேற்கொண்டு, ஜனநாயகச் சுடராக ஒளிர்கிறது தீக்கதிர். அந்தச் சுடர் பல விளக்குகளை ஏற்றவேண்டும். சூரியன் போல ஒளிர வேண்டும் என்ற விருப்பத்தின் ஒரு பகுதியாக, தனது ஐந்தாவது பதிப்பினைத் திருநெல்வேலியில் தொடங்குவது மகிழ்ச்சிக் குரியதாகும். மதுரை, சென்னை, திருச்சி, கோவை ஆகிய மாநகரங்களைத் தொடர்ந்து நெல்லை மாநகரத்தில் இந்த ஐந்தாவது பதிப்பினைத் தொடங்கி வைத்து முதல் படியினை வெளியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிரகாஷ் காரத் அவர்களுக்கும், அதனைப் பெற்றுக்கொள்ளும் மாண்புமிகு  அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கும், இந்நிகழ்வினை முன்னின்று மேற்கொண்டு ள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் என் வாழ்த்துகள்.  தீக்கதிரின் பயணத்திற்குத் துணை நிற்கும் ஆசிரியர் குழுவினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  தீக்கதிரின் சிந்தனைப் பொறிகள் திசை யெட்டும் பரவட்டும். இந்தியாவில் புதிய ஜன நாயக வெளிச்சம் பரவட்டும்.