tamilnadu

img

ஒரு சோசலிச கனவின் தேடல் காலத்தின் கொடுமையான சாட்சி! - எம்.கண்ணன், கோவை

ஒரு சோசலிச கனவின் தேடல்  காலத்தின்  கொடுமையான சாட்சி!

உலகம் ஒரு கொடூரமான வரலாற்று சாதனையைக் பார்த்துக் கொண்டிருக்கிறது. 63 ஆண்டுகள்! நீண்ட, இருண்ட, வேதனை நிறைந்த ஆண்டுகள்! மனிதகுல வரலாற்றிலேயே ஒரு சிறிய தீவு நாடு கியூபா மீது விதிக்கப்பட்ட மிக நீண்ட பொருளாதாரத் தடையால் சுற்றி வளைக்கப்பட்டு, மூச்சுத் திணறிக்கொண்டிருக்கிறது. ஆனால் என்ன அற்புதம்! இந்த முற்றுகையின் நடுவிலும், கியூபா உலகிற்கு எப்படிப்பட்ட வீரத்தையும் மனித நேயத்தையும் காட்டியிருக்கிறது என்பதே “சோசலிச” வீரியத்தின் மிக அழகான பகுதி. பத்ரியா கருத்தரங்கம் முடிந்து அறைக்கு திரும்பும் போது, பார்வை மட்டும் சாலைகளை நோக்கி இருந்தது. சிந்தனை முழுவதும் கியூபா மீதான தடைகளையும், அந்த மக்கள் அதை எதிர்கொண்டு வரும் அசாத்திய துணிச்சலையும் குறித்த கேள்விகளாகவே இருந்தது. இதுகுறித்து மென்மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தூண்டுதல் இருந்து கொண்டே இருந்தது. பத்ரியா கருத்தரங்கில் ஸ்பானிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க உதவிய ஹவானா பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் பயிலும் மாணவிகள் கெமிலா, மர்லா ஆகியோரிடம் தொடர்ந்து கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர்களும் சளைக்காமல் பதிலளித்துக் கொண்டே இருந்தனர். அதோடு முடியவில்லை. இந்தியா திரும்பிய நிலையிலும் வாட்ஸ்அப் மூலம் மீண்டும் விளக்கம் மேல் விளக்கம் கேட்டேன். அப்போதுதான் தடையின் முழு கொடூரமும் புரிந்தது.

அசாத்திய சாதனை!

உலகம் கோவிட்-19 என்ற அரக்கனால் நடுங்கிக்கொண்டிருந்தபோது, முற்றுகையில் சிக்கிய கியூபா என்ன செய்தது? தனது மக்களில் 87.8% பேருக்கு தடுப்பூசி போட்டது! குறிப்பாக குழந்தைகளில் 95% பேருக்கு தடுப்பூசி போட்டது. அப்தலா (Abdala), சோபெரானா 02 (Soberana 02),  சோபெரானா பிளஸ் (Soberana Plus) ஆகியன கியூபா உருவாக்கிய மூன்று தடுப்பூசிகள். இவை அதன் இலக்கை துல்லியமாக பூர்த்தி செய்தன. உலகின் பல பணக்கார நாடுகள் தடுமாறிக்கொண்டிருந்தபோது, கழுத்தில் இறுக்கப்பட்ட தடையுடன் இந்தச் சிறிய தீவு மனிதகுலத்திற்கே பாடம் சொல்லிக்கொடுத்தது. அதுதான் உண்மையான மனித நேயம்! அதுதான் சோசலிசம்!

தொடரும்  கொடுமைகளின் பட்டியல்

இன்றும் கூட இந்த முற்றுகையின் பிடியில் கியூபாவின் கழுத்து இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. டச்சு வங்கியான ஐஎன்ஜி (ING) வங்கி, கியூபாவில் கோவிட் தடுப்பூசிகளுக்கு உதவச் செல்லும் மனிதாபிமான அமைப்புகளின் பணத்தைக் கூட தடுத்து விட்டது. நோய் தீர்க்கும் மருந்துக்கே தடை! இதைவிடக் கொடுமை வேறென்ன இருக்க முடியும்? Airbnb-  என்கிற உலகின் மிகப்பெரிய விடுதிச் சேவை நிறுவனம் கியூபாவில் சேவை செய்ததற்காக அமெரிக்கா அபதாரம் விதித்தது. இதையடுத்து அந்த நிறுவனம் கியூபாவிற்கான சேவையை படிப்படியாக குறைத்து 2025 மார்ச் மாதம் முதல் முழுமையாக நிறுத்திவிட்டது. 2021 இல் சீனாவின் சியோமி போன்களை கூட விற்க அமெரிக்கா அனுமதிக்கவில்லை. காரணம் பணபரிமாற்றம் டாலரில் இருந்ததால், அமெரிக்கா வங்கி சேவைகளை பயன்படுத்த வேண்டும். அதனை பயன்படுத்தி அழுத்தம் கொடுத்தது. அதனை ஏற்ற சியோமி பின் நாட்களில் டாலருக்கு பதிலாக கியூபாவின் பெசோ மூலம் சியோமி போனை வாங்கும் வசதி உருவானது. அதனால் இன்று சியோமி கியூபாவில் உள்ள மொபைல் போன் பயன்பாட்டில் 30 சதவிகிதத்துடன் இரண்டாமிடத்தில் இருக்கிறது.

விளையாட்டிற்கு கூட தடை!

விளையாட்டு என்பது மனித நேயத்தின் சிகரம். அது எல்லைகளைத் தாண்டி, மொழிகளைக் கடந்து, மதங்களையும் சாதிகளையும் மீறி மனிதர்களை ஒன்றிணைக்கும். ஆனால், அந்த களத்திலும் அரசியலின் நச்சுப்பல் ஊடுருவி, விளையாட்டு வீரர்களின் கனவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது. கியூபாவின் விளையாட்டு வீரர்கள் இன்று எதிர்கொள்ளும் சவால் வெறும் விளையாட்டுத் தோல்வி அல்ல - அது மனித உரிமையின் மீதான தாக்குதல்.

கால்பந்தாட்டக் கனவுகள்:

பச்சைப் புல்வெளியில் பந்தோடு விளையாடும் கனவு கொண்ட கியூபக் கால்பந்து வீரர்களுக்கு, அவர்களின் திறமையை உலகுக்கு காட்டும் 

வாய்ப்பே மறுக்கப்படுகிறது. 2019 இல் கியூபா கால்பந்தாட்ட அணியின் கேப்டன் சான்டா க்ரூஸ் - அந்தப் பெயரிலேயே புனிதமும் தியாகமும் இணைந்திருக்கிறது. அவர் தனது அணியை வழிநடத்திச் செல்லும் கனவோடு விசா விண்ணப்பம் செய்தார். ஆனால் பதில் வந்தது ‘மறுப்பு’ என்ற ஒரே வார்த்தையில். அதே போல் 2021 இல் ஒரு வீரர் அல்ல, முழு அணியுமே விசா மறுப்பை சந்தித்தது. இது வெறும் நிர்வாகத் தடையல்ல – பந்துகளை எட்டி உதைக்கும் கால்களை கட்டிபோடும் அநீதி..

வலைகளில் சிக்கிய பறவைகள்

ஜூலை 2025 இல் புவேர்ட்டோ ரிக்கோவின் நீல வானத்தின் கீழ் நடைபெற்ற NORCECA பெண்கள் பங்கேற்கும் வாலிபால் போட்டி. கியூபப் பெண்கள் வாலிபால் அணியின் விளையாட்டு வீராங்கனைகள் தாங்கள் சாம்பியன் ஆவதை தடுக்க எந்த அணி இருக்கிறது என சவால் விட தயாராக இருந்தனர். 12 விளையாட்டு வீரர்கள், அவர்களின் அனுபவமிக்க பயிற்சியாளர்கள், நியாயம் வழங்கும் நடுவர்கள் – அனைவரும் ‘விசா மறுப்பு’ எனும்  ஒரே வார்த்தையால் தோற்கடிக்கப்பட்டனர்.

வானத்தை நோக்கிய கைகளின் ஏமாற்றம்

கூடையை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு பந்தும் ஒரு கனவு, ஒரு நம்பிக்கை. பிப்ரவரி 2025 இல் கியூப ஆண்கள் கூடைப்பந்து அணி புவேர்ட்டோ ரிக்கோவில் நடைபெற்ற FIBA AmeriCup போட்டியின் வாசலில் நின்று, உள்ளே செல்ல முடியாமல் திரும்ப வேண்டிய கொடுமை. மேல் நோக்கி வீசப்படும் கூடைப்பந்தும் விசா தடையை தாண்டமுடியவில்லை.  அதே போல் மார்ச் 2025 இல் புளோரிடாவின் வெயிலில் 14 தடகள வீரர்கள் தங்கள் ஓட்டத்தை முடிக்க முடியாமல் போனது. அவர்களின் கால்கள் ஓடத் தயாராக இருந்தன, ஆனால் அவர்களது கனவுகள் எல்லைகளில் தடுக்கப்பட்டன.

சிறுமிகளின் கண்ணீர்

ஜூலை 2025 இல்  மிகவும் வேதனையான சம்பவம் - லிட்டில் லீக் சாப்ட்பால் உலக தொடருக்கு 9-10 வயது சிறுமிகளின் பயிற்சியாளர்களுக்கு விசா மறுப்பு. இந்த அப்பாவி சிறுமிகள் எந்த அரசியலையும் புரிந்து கொள்ளாதவர்கள். அவர்களுக்குத் தெரிந்தது விளையாட்டின் மகிழ்ச்சி மட்டும்தான். குழந்தைகளின் கனவுகளை அரசியல் காரணங்களுக்காக நசுக்குவது எவ்வளவு கொடுமை? இது வெறும் விசா மறுப்பல்ல - இது எதிர்கால சாம்பியன்களின் வளர்ச்சிக்குப் போடும்  முட்டுக்கட்டை.

ஒலிம்பிக் நிர்வாகத்தின் நீதியின்மை

ஒலிம்பிக் என்பது உலகின் மிகப் பெரிய விளையாட்டு விழா. அதன் கியூபா அதிகாரிகளே மியாமி மற்றும் புவேர்ட்டோ ரிக்கோவில் நடந்த பிராந்திய ஒலிம்பிக் கமிட்டி கூட்டங்களுக்கு செல்ல முடியவில்லை என்றால், இது எவ்வளவு பெரிய அநீதி? கியூப ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர் - இவர்கள் அனைவரும் தங்கள் நாட்டின் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக உழைப்பவர்கள். அவர்களின் குரலே கேட்கப்படவில்லை என்றால், விளையாட்டு வீரர்களின் குரல் எப்படி கேட்கும்? எதிர்காலத்திற்கான கேள்வி? விளையாட்டு என்பது மனிதகுலத்தின் பொதுசொத்து. அது யாருக்கும் சொந்தமானது அல்ல, எல்லோருக்குமானது. ஒரு நாட்டின் அரசியல் கொள்கைகளுக்காக விளையாட்டு வீரர்களை தண்டிப்பது எவ்வளவு அநீதி? இன்று கியூபா, நாளை வேறு ஏதேனும் நாடு. விளையாட்டின் மகத்துவத்தை காத்து நிற்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு. கியூபாவின் விளையாட்டு வீரர்கள் வெறும் புள்ளிவிவரம் அல்ல - அவர்கள் கனவுகள் கொண்ட மனிதர்கள், அவர்களின் திறமையை உலகுக்குக் காட்ட ஏங்கும் கலைஞர்கள். தடைகள் தகர்ந்து, விளையாட்டு தனது உண்மையான சுதந்திரத்தைப் பெறும் அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். வரலாற்றின் இருண்ட அத்தியாயம் பிப்ரவரி 3, 1962 - அந்த இருண்ட நாளில், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜான்.எஃப். கென்னடி ஒரு கொடூரமான உத்தரவில் கையெழுத்திட்டார். அது வெறும் கையெழுத்தல்ல - அது ஒரு முழு நாட்டின் மீதான மரண தண்டனை உத்தரவு. ஏன் இந்தக் கொடுமை? கியூப மக்கள் தங்கள் விதியை தாங்களே தீர்மானிக்க விரும்பினார்கள். முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். சமூக நீதிக்காகப் போராடினார்கள். இதுதான் அவர்களின் “குற்றம்”! சேதங்களின் கணக்கு அறுபது ஆண்டுகளில் 1,47,853 மில்லியன் டாலர்கள் சேதம்! ஆனால் டாலர்களில் எப்படி அளக்க முடியும் ஒரு தாயின் கண்ணீரை? ஒரு குழந்தையின் பசியை? ஒரு நோயாளியின் வேதனையை?  கியூபாவில் 78% பெண்களும் குழந்தைகளும் இந்த முற்றுகையின் கீழ் பிறந்தவர்கள். அவர்கள் எந்தக் குற்றம் செய்தார்கள்? அவர்களின் ஒரே  “குற்றம்” கியூபாவில் பிறந்தது! சுகாதாரத் துறையின் சோகம் மருத்துவம் என்பது மனிதகுலத்தின் பொதுச் சொத்து. நோயைக் குணப்படுத்துவது எல்லா மத, இன, தேசிய எல்லைகளுக்கும் அப்பாற்பட்டது. ஆனால் இந்த முற்றுகை மருத்துவத்தின் மீதும் தனது கொடிய நகங்களை பதித்தது. 2020-இல் கோவிட் பெருந்தொற்றின் நடுவில், மனிதாபிமான மருத்துவ உதவி விமானங்களைக் கூட கியூபாவுக்கு அனுப்ப அமெரிக்கா அனுமதி மறுத்தது. இதைவிட மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் வேறென்ன இருக்க முடியும்? நுரையீரல் வெண்டிலேட்டர்களை வாங்க முடியவில்லை, ஏனெனில் சப்ளையர்கள் அமெரிக்க நிறுவனங்களால் வாங்கப்பட்டு விட்டனர். மூச்சுக் காற்றுக்கே தடை! தடுப்பூசி உற்பத்தித் தடை: கியூபா தனது தடுப்பூசிகளை உற்பத்தி செய்யத் தேவையானது செல்களின் வளர்ச்சிக்கு உதவும் ஊட்டச்சத்து நிறைந்த திரவம் அல்லது ஜெல் ஆகும். இவை செல்களை அவற்றின் இயற்கையான சூழலுக்கு வெளியே செயற்கையான சூழலில் வளர்க்க உதவுகின்றன. இவற்றை அமெரிக்காவிலிருந்து வாங்க முடியவில்லை. இவையில்லாமல் தடுப்பூசி உற்பத்தி சாத்தியமில்லை. ஆனாலும் கியூபா பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தனது சொந்த தடுப்பூசிகளை வெற்றிகரமாக உருவாக்கியது. சட்டக் கொடுங்கோன்மை 1990களில் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது, கியூபா உலகத்துடன் புதிய உறவுகளை ஏற்படுத்த முயன்றது. ஆனால் அமெரிக்கா என்ன செய்தது? மேலும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்தது! டோரிசெல்லி சட்டம் (1992): முற்றுகையை இன்னும் கடுமையாக்கியது. ஹெல்ம்ஸ்-பர்டன் சட்டம் (1996): இது மிக கொடூரமானது. இந்தச் சட்டம் அமெரிக்க ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இருந்ததை அந்த நாட்டின் நாடாளுமன்றத்தின் (காங்கிரஸின்) சட்டமாக்கி விட்டது.  டிரம்பின் தீவிரம் டிரம்ப் நிர்வாகம் கியூபாவின் மீதான தாக்குதலை இன்னும் தீவிரப்படுத்தியது. கியூபர்கள் தங்கள் உறவினர்களுக்கு பணம் அனுப்புவதைக் கூட தடுத்திருக்கிறது. இதன் மூலம் குடும்பங்களை பிரித்து, உறவுகளைக் கூட அறுத்தெறிகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவை கூட கடுமையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கியூபா வின் தனியார் வணிகங்கள் சார்ந்த நிதிபரிவர்த்தனை களுக்குக் கூட அமெரிக்க வங்கி கணக்குகளைப் பயன்படுத்தக் கூடாது என ஜூலை 2024 இல் ்நிதிக்கும் தடைவிதிக்கப்பட்டது. மக்கள் மூச்சு விட மட்டுமே நேரடியாக தடைவிதிக்கவில்லை. மற்றபடி அனைத்து வழிகளிலும் தடைவிதிக்கப்பட்ட கொடூரம் உலகில் வேறு எந்த நாட்டிற்கும் இதுவரை நேர்ந்ததில்லை. மானுடத்தின் கூக்குரல் அறுபத்தி மூன்று ஆண்டுகள் போதும்! இந்த கொடுமை இனியும் தொடரக்கூடாது. இந்தத் தடையை எதிர்ப்பது வெறும் கியூபாவுக்கான ஆதரவல்ல. இது மானுட விடுதலைக்கான போர். ஒரு நாடு மற்ற நாடுகளை அடிமைப்படுத்த முயல்வதற்கு எதிரான எழுச்சி. இது நியாயமற்ற ஆதிக்க சக்தியால் இந்தபூவுலகம் முழுவதும் திணிக்கப்படும் மனிதாபிமானமற்ற நிலைக்கு எதிரான கிளர்ச்சி. மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக... கியூபா என்ற சிறிய தீவு நாடு, தனது வீரத்தாலும், விடாமுயற்சியாலும், மனிதநேயத்தாலும், சோசலிசக் கொள்கையின் மூலம் உலகிற்கு என்னென்ன அற்புதங்களைக் காட்ட முடியும் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். முற்றுகையை நீக்குவது கியூபாவுக்கு மட்டும் நன்மை வழங்குதல்ல - அது மனிதகுலம் முழுமைக்குமான ஒரு பரிசாக இருக்கும். மருத்துவத்திலும், அறிவியலிலும், கலாச்சாரத்திலும் கியூபாவின் பங்களிப்பு உலகிற்கு எவ்வளவு பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியும். இந்த முற்றுகை ஒரு தேசத்திற்கு எதிரான தாக்குதல் மட்டுமல்ல - இது மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கே எதிரான குற்றம். வரலாறு இந்த அநீதியை மன்னிக்காது. காலம் இந்த கொடுமையை மறக்காது. ஆனால் நம்பிக்கை என்னும் ஒளி இன்னும் அணையவில்லை. ஒரு நாள் நிச்சயம் கியூபாவின் மீதான இந்த கொடிய சங்கிலிகள் உடைந்து போகும். அன்று மனிதகுலம் முழுவதும் கொண்டாடும்!