கடந்த 5 ஆண்டுகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 81 முக்கிய குறைபாடுகள்
கடும் கண்காணிப்பு அவசியம் : ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரிடம் எழுப்பிய நட்சத்திர கேள்விக்கு பதிலளித்த மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் ஜெய்ராம் கட்காரி, புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் மோசமான நிலை குறித்த அதிர்ச்சிகரமான புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளார். புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை களின் சீர்கெட்ட நிலையை சரிசெய்ய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றை சரிசெய்யும் கால அளவு குறித்தும், 2024-25 நிதியாண்டில் இது தொடர்பாக பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை குறித்தும் சச்சிதானந்தம் எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சர் கட்காரி அளித்த பதிலின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் (2024-25 உட்பட) தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் முக்கிய குறைபாடுகள் மற்றும் சேதங்கள் தொடர்பாக 81 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது சமூக ஊடக தளங்கள் மற்றும் பொது புகார் இணையதளம் மூலம் பெறப்பட்ட புகார்கள் தவிர்த்து என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த குறைபாடுகள் மற்றும் சேதங்களை சரிசெய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் பல்வேறு கட்டங்களில் முன்னேற்றத்தில் உள்ள தாகவும், பொருந்தக்கூடிய இடங்களில் ஒப்பந்த தாரர்கள், சலுகை பெற்றவர்கள், அதிகாரத்தின் பொறியாளர்கள், சுயேச்சையான பொறி யாளர்கள் ஆகியோருக்கு எதிராக தொடர்புடைய ஒப்பந்த விதிகளின்படி தண்டனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய நெடுஞ்சாலைகளின் தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளை மேம்படுத்த அரசு பல முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் தானியங்கி மற்றும் நுண்ணறிவு இயந்திர உதவி கட்டுமானம், நெட்வொர்க் சர்வே வாகனம் மூலம் சாலை நிலைமைகளின் மதிப்பீடு, என்எச்ஏஐ ஒன் ஆப் மூலம் மைய அமைப்பு, ட்ரோன் அனலிட்டிக்ஸ் கண்காணிப்பு அமைப்பு, மொபைல் தரக் கட்டுப்பாட்டு வேன்கள், மூன்றாம் தரப்பு தரத் தணிக்கையாளர்கள் போன்றவை அடங்கும். சச்சிதானந்தம் எம்.பி., விமர்சனம் கடந்த ஐந்து ஆண்டுகளில் 81 முக்கிய குறை பாடுகள் என்பது தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமான தரத்தில் உள்ள கடுமையான பிரச்சனையை வெளிப்படுத்துகிறது என சச்சிதானந்தம் எம்.பி. விமர்சித்துள்ளார். “ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் நெடுஞ்சாலைகள் புதிதாக கட்டி முடித்த சில ஆண்டுகளிலேயே சேதமடைவது கட்டு மான தரத்தில் உள்ள குறைபாட்டை தெளிவாக காட்டுகிறது. அரசு தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகப் படுத்தியதாக கூறினாலும், நடைமுறையில் ஒப்ப ந்தக்காரர்கள் மற்றும் சலுகை பெற்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. வெறும் தண்டனை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாக கூறுவது போதுமானதல்ல. இதுபோன்ற குறைபாடுகளுக்கு பொறுப்பான வர்களிடமிருந்து சேதத்தொகையை வசூலிக்க வும், அவர்களை கண்டிப்பாக கருப்பு பட்டியலிட வும் வேண்டும். பொதுப் பணத்தில் கட்டப்படும் சாலை களின் தரத்தை உறுதிப்படுத்த கடுமையான கண்காணிப்பு மற்றும் தண்டனை அமைப்பு அவசியம்” என்று அவர் கூறியுள்ளார்.