41 பேர் பலி : பாஜகவோடு சேர்ந்து சிபிஐ விசாரணை கோரும் தவெக
சென்னை, அக். 8 - கரூர் கூட்ட நெரிசல் குறித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அக்டோபர் 10ஆம் தேதி விசார ணைக்கு வருகிறது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 அன்று இரவு தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற் கொண்ட போது நெரிசலில் சிக்கி தவெக தொண்டர்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்த னர். இந்தச் சம்பவம் நாடு முழு வதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு ஒன்றில், ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த குழுவும் கரூ ரில் விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமை யிலான குழுவால் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தவெக தரப்பில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், உடனடி யாக விசாரிக்க மறுப்பு தெரிவித்த உச்சநீதிமன்றம், இந்த சம்பவம் தொடர்பான மற்ற வழக்குகளுடன் அக்டோபர் 10 அன்று விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி பாஜக வழக்கறிஞர் உள்பட சிலரும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.