செவ்வாய்க் கிரகத்தில் 300 கோடி ஆண்டு பழமையான கடற்கரை படிமங்கள்
சீன-அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய்க் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை படிமங்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். செவ்வாய்க் கிரகம் குறித்து பல ஆண்டுகளாக தொடர் ஆராய்ச்சி நடந்து வரும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளுக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
1970களில், நாசா அனுப்பிய மரைனர் 9 ஆர்பிட்டர் பூமிக்கு அனுப்பிய படங்கள் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் ஓடிய தடங்களை உலகிற்கு வெளிப்படுத்தின. செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருக்குமா என்ற கேள்விக்கு இது தீர்வு கொடுத்தது. இதனைத்தொடர்ந்து அங்கு தண்ணீர் எப்போது உருவானது? அங்கு கடல் இருந்ததா என பல கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் தற்போது சீனாவின் புதிய கண்டுபிடிப்பு உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சீனாவின் தேசிய விண்வெளி நிலையத்தால் செவ்வாய்க் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ஜுராங் என்ற ரோவர் மூலம், சீனாவின் குவாங்சூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜியான்ஹுய் லி தலைமையிலான சீன மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஆய்வில் 300 கோடி ஆண்டுகளுக்கு முன் செவ்வாய்க் கிரகத்தில் இருந்த கடற்கரை பற்றிய ஆச்சரியமான அறிவியல் உண்மை வெளிவந்துள்ளது. செவ்வாய்க் கிரகத்தின் வடக்கு அரை கோள பகுதியில் இருந்து கடற்கரையில் புதைந்துள்ள பாறைகளின் புகைப்படத்தை ஜுராங் ரோவர் மூலம் பெற்றுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கண்டுபிடிப்பு குறித்து சீன தேசிய அறிவியல் கல்வி நிலையத்தின் தலைவர்களில் ஒருவரும், குவாங்சோ பல்கலைக்கழக விஞ்ஞானியுமான ஜியான்ஹுய் லி திங்களன்று செய்தியாளர்களிடம் கூறிய போது, செவ்வாய்க்கிரகத்தின் மேற்பரப்பு 300 கோடி ஆண்டுகளில் வியத்தக்க முறையில் மாறிவிட்டது.
தரையில் நகரும் ரேடாரைப் பயன்படுத்தியதால் தான் வளிமண்டலத்தின் மேல் இருந்து பார்க்க முடியாத கடற்கரை படிவுகளின் நேரடி ஆதாரங்களைக் கண்டறிய முடிந்தது. பூமியில் உள்ளதைப் போன்று அலைகளால் கடற்கரைகள் உருவாக்கப்பட்டிருக்கும். இத்தகைய பெருங்கடல்கள் செவ்வாய்க் கிரகத்தின் நிலப்பரப்பை வடிவமைத்திருக்கும். உயிர்கள் தோன்றி வளர்வதற்கான ஏற்ற சூழல்களை உருவாக்கியிருக்கும் என்றார்.
‘பேருந்து நிலையத்தை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?’
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் “புதுக்கோட்டை மாவட்ட பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்து அதற்கான டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியரும், நகராட்சி ஆணையரும் கோரியுள்ளனர். தற்காலிகப் பேருந்து நிலையத்திற்காக அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கழிவறை, குடிநீர் போன்ற வசதிகள் இல்லை. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர்.
இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை அடிப்படை வசதி உள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்ய வும், அதுவரை வேறு இடத்திற்கு மாற்ற தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு அடிப்படை வசதிகள் இன்றி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அடிப்படை வசதிகளை செய்த பின்பு மாற்றலாமே? என கேள்வி எழுப்பி னர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.