உமர்காலித் உள்பட 10 பேர் 5 ஆண்டாக சிறையில் தவிப்பு தில்லி உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் மறுப்பு; கடுமையான நீதித்துறை முரண்பாடாகும்!
சிபிஎம் அரசியல் தலைமைக்குழு கண்டனம் புதுதில்லி, செப். 3 - உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் 8 பேர்களுக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: குற்றச்சாட்டு பதிவின்றியே 5 ஆண்டாக சிறைத்தண்டனை உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் எட்டு பேருக்கு தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. 2020 பிப்ரவரியில் தில்லியில் நடந்த மதக் கலவரங்களுக்குப் பின்னணியில் உள்ளதாகக் கூறப்படும் “சதித்திட்டத்துடன்” தொடர்புடையதாகக் கூறப்படும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (UAPA) கீழ், அவர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் அவர்களின் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவது இது ஐந்தாவது முறையாகும். கடந்த 5 ஆண்டுகளாக அவர்கள் மீதான வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இது மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும் விஷயமாகும். தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு நீதியை கேலிக்கூத்தாக்குவதும், “ஜாமீன் வழங்குவது விதி, மறுப்பது விதிவிலக்கு” என்ற கொள்கையை மறுப்பதும் ஆகும். விசாரணையும் இல்லை; ஆதாரமும் இல்லை! இந்தப் பத்து இளைஞர்கள் மீதான வழக்கில் எந்த விதமான விசாரணையும் மேற்கொள்ளப்படாமல், எந்த ஆதாரமும் இல்லாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களை சிறையில் அடைத்திருக்கும் அதே சமயத்தில், தில்லி மதக் கலவரங்களுக்குத் தூண்டுதலாக இருந்த கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாக்குர் போன்ற பாஜக தலைவர்கள் எந்தத் தண்டனையும் இல்லாமல் சுற்றித் திரிவது இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்குர், கர்னல் பிரசாத் புரோஹித் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டாலும், உமர் காலித், ஷர்ஜீல் இமாம் மற்றும் பலர் 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் விசாரணை எதுவுமின்றி அவதிக்குள்ளாக்கப்பட்டிருப்பது ஒரு கடுமையான நீதித்துறை முரண்பாடாகும். இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது. (ந.நி.)