tamilnadu

img

வாலிபர் சங்க தடகளப் போட்டிகள் திருச்சி ஸ்பார்க் கழகம் அசத்தல்

மதுரை, ஜன.25- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில அளவிலான தடகளப்போட்டி 6-வது சீசன் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் சனியன்று தொடங்கியது. 2 நாட்கள் (ஜன.25,26) நடைபெறும் இந்த தொடரில் திருச்சி ஸ்பார்க் கழகம்  சாதனை படைத்தது. 

5000 மீ

ஆடவர் 5000 மீ ஓட்டத்தில் டிரம்ப் விளையாட்டுக்கழக மாணவர்கள் எம்.கோகுல், டி.லாரன்ஸ் கிருபாகரன் ஆகியோர் முறையே முதலிரண்டு இடத்தைப் பிடித்தனர். எஸ்டிஏடி மாணவர் வி.வினோத் மூன்றாமிடத்தை பிடித்தார்.  மகளிர் 5000 மீ ஓட்டத்தில் மதுரை லேடிடோக் கல்லூரி மாணவியும், வாலிபர் சங்க விளையாட்டுக் கழகத்தின் மதுரை உறுப்பினருமான பி.சிந்து  முதலிடம் பிடித்து அசத்தினார். திருச்சி ஜாமல் முஹமது கல்லூரி ஜெ.தேஜஸ்வினி இரண்டாம் இடத்தையும், லேடிடோக் கல்லூரி மாணவியும், வாலிபர் சங்க விளையாட்டுக் கழகத்தின் மதுரை உறுப்பினருமான வி.நந்தினி மூன்றாம் பரிசும் பெற்றனர்.

2000 மீ 

ஆடவர் 2000 மீ ஓட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி  லயன்ஸ் விளையாட்டுக் கழக மாணவர் எம்.சரண் முதலிடமும், பெல் மேல்நிலைப் பள்ளி மாணவர் செரின் இமானுவேல் ரோட்டரிக்ஸ் இரண்டாமிடமும், கோயம்புத்தூரைச் சேர்ந்த எஸ்.கே.சச்சின் மூன்றாமிடமும்  பிடித்து அசத்தினார். மகளிர் 2000 மீ ஓட்டத்தில் திண்டுக்கல் பிருந்தாவன் மெட்ரிக் பள்ளி மாணவி எம்.பார்கவி முதலிடம் பிடித்தார். நாமக்கல் மாவட்டம் செல்வம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கே.மணிமேகலை என்ற மாணவி இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் செயின்ட் டொமினி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெ.பிரியதர்ஷினி மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 

உயரம் தாண்டுதல் - திருச்சி அசத்தல்

மகளிர் உயரம் தாண்டுதல் பிரிவில் திருச்சி ஸ்பார்க் தடகள கழகம் 2 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளது. ஸ்பார்க் கழகத்தைச் சேர்ந்த கே.தேன்மொழி முதலிடமும், வாலிபர் சங்க விளையாட்டுக் கழகத்தின் மதுரை உறுப்பினர் டி.ஜெஸிகா இரண்டாமிடமும், திருச்சி ஸ்பார்க் தடகள கழகத்தைச் சேர்ந்த ஆர்.ஷோபனாதேவி மூன்றாமிடம் பிடித்து அசத்தினார். இந்த பிரிவில் முதலிடம் பிடிக்க மாணவிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டது. மற்ற பிரிவுகளை காட்டிலும் இந்த பிரிவு மாரத்தான் இன்னிங்ஸை எதிர்கொண்டது.  

மும்முறை தாண்டுதல் 

மகளிர் மும்முறை தாண்டுதல் 18 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பெரம்பலூர் எஸ்டிஏடி மாணவி ஆர்.சங்கீதா முதலிடமும், எஸ்.நிரஞ்சனாதேவி இரண்டாமிடமும், திருச்சி ஸ்பார்க் தடகள கழக உறுப்பினர் டி.சகாய ஜெர்லின் மூன்றாமிடமும் பிடித்தனர்.  மகளிர் 20 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஐ.ஆஷா, எஸ்.சம்யுக்தா,  என்.திவ்ய தர்ஷினி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்தனர். 

குண்டு எறிதலில் தேனி சாதனை

ஆடவர் குண்டு எறிதலில் திருநெல்வேலி ஏ.விஷ்வா முதலிடம் பிடித்தார்.  தேனியைச் சேர்ந்த டி.விஜயேந்திரா, எம்.ஷர்வான் ஆகியோர் முறையே அடுத்த 2 இடங்களை பெற்று சாதனை புரிந்தனர். 




 

;