tamilnadu

img

நெருப்பை நெய்விட்டு அணைத்துவிட எண்ணுவது... - என்.ராமகிருஷ்ணன்

உலகப் புகழ்பெற்ற மீரட் கம்யூனிஸ்ட் சதி வழக்கு - 5

“அரசாங்கத்தின் செலவில், நீதிமன்ற மேடையை தங்களுடைய தத்துவத்தை ஒலிபரப்பும் இடமாக மாற்றியதைப் போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் ஒன்றிரண்டு தான் இருக்க முடியும். மீரட் சதி வழக்கானது இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கிடைத்த ஒரு அரசியல் தோல்வியாகும். இது இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.”

மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டி.ஆர்.தெங்டி தீர்ப்பு எழுதப்பட்டு வந்த சமயத்தில் காலமானார். 68 வயது நிரம்பிய பொறியாளரான அவர் பம்பாய் தொழிலாளிகள் விவசாயிகள் கட்சியில் தலைவராவார். இந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் கோரக்பூரைச் சேர்ந்த ஹோமியோபதி வைத்தியர் விஸ்வநாத் முகர்ஜி, கல்கத்தாவைச் சேர்ந்த சிவநாத் பானர்ஜி மற்றும் கிஷோரிலால் கோஷ் ஆகிய மூவர் மட்டுமே.  தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவதற்கு வழக்கறிஞரை அமர்த்த பணம் எதுவும் கிடையாது. இவர்களுக்காக பாதுகாப்புக் குழுவை உருவாக்கிய காங்கிரஸ் கட்சி 1930ஆம் ஆண்டு மறியல் இயக்கம் நடத்துவதால் இவர்களுக்கு உதவி செய்ய இயலாது என பின்வாங்கிவிட்டது. 

இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியினால் இங்கிலாந்து தொழிலாளிகள், ரெஜினால்டு பிரிட்ஜ்மேன் என்பவரை செயலாளராகக் கொண்டு ஒரு பாதுகாப்புக் குழுவை லண்டனில் அமர்த்தியிருந்தனர். இப்பொழுது உயர்நீதிமன்றத்தில் வழக்கை நடத்துவதற்கும் மீரட் கம்யூனிஸ்ட் கைதிகள், அந்தக்குழுவை நம்பியே செயல்பட வேண்டியிருந்தது. இங்கிலாந்தின் தொழிலாளி வர்க்கம் மீண்டும் உதவிக்கரம் நீட்டியது. ஆகையால் தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாட டாக்டர் கைலாஷ்நாத் கட்ஜூ என்ற பிரபல வழக்கறிஞர் நிச்சயிக்கப்பட்டார். இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவருமாவார். இந்த மேல்முறையீடு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதிபதி டாக்டர் சுலைமான் மற்றும் டக்ளஸ் யங் என்பவர் முன்னிலையில் வந்தது. எட்டு நாட்கள் விவாதம் நடைபெற்றது. தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக கைலாஷ்நாத் கட்ஜூ வாதாடினார். பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

எம்.ஜி.தேசாய், எச். எல். ஹட்சின்சன், எச்.எஸ்.ஜாப்வாலா, ராதாராமன் மித்ரா, கேதார்நாத் சைகால், ஜி.ஆர்.கஸ்லே, கௌரி சங்கர், எஸ்.ஆர்,கதம், அர்ஜூன் ஆத்மாராம் அல்வே முதலிய ஒன்பது பேரும் விடுதலை செய்யப்பட்டனர். அயோத்யா பிரசாத், பி.சி.ஜோஷி, ஜி.பாசக், டாக்டர் அதிகாரி, சம்சுல்ஹூதா ஆகிய ஐவரும் இதுவரை அனுபவித்த தண்டனையே போதுமானது என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர், கோபென் சக்ரவர்த்தியின் தண்டனை ஏழு மாதங்களாக குறைக்கப்பட்டது. முசாபர் அகமது, எஸ்.ஏ. டாங்கே, சௌகத் உஸ்மானி ஆகிய மூவரின் தண்டனையும், 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. பிலிப் ஸ்பிராட்டுக்கு தண்டனைக்காலம் இரண்டு வருடமாகக் குறைக்கப்பட்டது. எஸ்.வி.காட்டே, கே.என்.ஜோக்லேகர், ஆர்.எஸ்.நிம்ப்கர், பிராட்லி, எஸ்.எஸ்.மிராஜ்கர், சோகன் சிங் ஜோஷ், தரணி கோஸ்வாமி, மிர் அப்துல் மஜீத் ஆகிய எட்டு பேருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு 1933 ஆகஸ்ட் 5ஆம் தேதி அளிக்கப்பட்டது. இத்துடன் 41/2 வருடக் காலம் நீடித்த ‘மீரட் சதி வழக்கு’ ஒரு முடிவுக்கு வந்தது. முசாபர் அகமது கூறுகிறார்: 

“மீரட் சதி வழக்கை உருவாக்கியதன் மூலம் இந்தியாவில் உருவாகி வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அழித்துவிடலாம். கம்யூனிஸ்ட்டுகள் தலைதூக்காதபடி செய்துவிடலாம் என்று ஆங்கிலேய ஏகாபதிபத்தியம் மனப்பால் குடித்தது. ஆனால் இந்தியாவின் இளம் கம்யூனிஸ்ட்டுகள், ஏகாதிபத்தியத்தின் இந்த சதித்திட்டத்தை தகர்த்தெறிந்தார்கள்.

“அரசாங்கத்தின் செலவில், நீதிமன்ற மேடையை தங்களுடைய தத்துவத்தை ஒலிபரப்பும் இடமாக மாற்றியதைப் போன்ற நிகழ்ச்சிகள் வரலாற்றில் ஒன்றிரண்டு தான் இருக்க முடியும். மீரட் சதி வழக்கானது இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கத்திற்கு கிடைத்த ஒரு அரசியல் தோல்வியாகும். இது இந்தியக் கம்யூனிஸ்ட்டுகளுக்கு கிடைத்த வெற்றியாகும்.”

1030 - 31 ஆம் ஆண்டுகளில் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதன் இறுதியில் சோவியத் நாட்டிற்கு சென்று அங்குள்ளவற்றை வியப்புடன் கண்டு மார்க்சிய சிந்தனையுடன் இந்தியா திரும்பிய பெரியார் ஈவேரா மீரட் தீர்ப்பை குறித்து தனது ‘குடியரசு’ ஏட்டில்’ உணர்ச்சிமிக்க தலையங்கம் எழுதினார்:
 

‘பொது உடமைக் கொள்கை என்பதை 27 பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரைத் தண்டித்தோ அல்லது 27 லட்சம் பேரை சமணர்களைக் கழுவேற்றியது போல நடுத்தெருவில் நிறுத்தி கழுவில் ஏற்றிக் கொள்வதன் மூலமோ அடக்கி விடலாம் என்று நினைப்பது கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை நெய்விட்டு அணைத்து விடலாம் என்று எண்ணுவது போலத்தான் முடியும்.
 

ஆகவே மீரட்டின் முடிவை நாம் மேளதாளத்துடன் வரவேற்பதுடன் தண்டனை கிடைத்த தோழர்களை மனதார, வாயாற, கையாற பாராட்டுகிறோம். மூக்காலும் பாராட்டுகிறோம். நமக்கு நம் போன்ற வாலிபர்களுக்கு இப்பெரும் பேர் கிடைக்க பெரும் நிலையை அடைய முடியவில்லையே என்று வருந்தி மற்றுமொரு முறை பாராட்டுகிறோம்.

மீரட் நீதிமன்ற மேடையிலிருந்து கம்யூனிஸ்ட்டுகள் செய்த பிரச்சாரமானது இந்தியாவிலிருந்த பயங்கரவாத இயக்கத் தலைவர்களிடம் மறு சிந்தனைக்கு இட்டுச் சென்றது. இதன் விளைவாக இந்தியாவிலும், அந்தமான் தீவுச் சிறையிலும் அடைப்பட்டிருந்த அந்த இயக்கத்தினர் 1930ஆம்ஆண்டுகளின் இறுதிக்குள்ளாகவே பெரும் எண்ணிக்கையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். டாக்டர் நாராயண் ராய், சிவவர்மா, பண்டிட் கிஷோரிலால், கணேஷ் கோஷ், சதீஷ் பக்ராஷி, வீராங்கனை கல்பனா தத், சுபோத்ராய் போன்ற பலரும் இதில் அடங்குவர்.