பெண்களின் உண்மை அறியும் குழு அறிக்கை
ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இன்னமும் திரும்பவில்லை என்று அங்கு சென்று திரும்பியுள்ள பெண்களின் உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது. 14 அல்லது 15 வயது பையன்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும், ராணுவத்தினர் தங்களை பாலியல் தொந்தரவுகள் செய்வதாக இளம் பெண்கள் முறையிட்டதாகவும் அவர்கள் மேலும் கூறினார்கள். மத்திய அரசாங்கமும், ஆளுநர் ஆட்சியும் ஜம்மு-காஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று திரும்பத்திரும்ப ஊடகங்களில் கூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றை முழுமையாக நிராகரித்து, அம்மாநிலத்திற்குச் சென்று வந்த பெண்கள் உண்மை அறியும் குழு கூறியுள்ளது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனம், பிரகதீஷீல் மஹிலா சங்காதன் ஆகிய சங்கங்களைச் சேர்ந்தவர்களும் மற்றும் முன்னாள் திட்டக் கமிஷன் உறுப்பினர் சயிதா ஹமீத் முதலானவர்களும் இக்குழுவில் இடம் பெற்றிருந்தார்கள். இவர்கள் அண்மையில் ஓர் அறிக்கை வெளியிட்டார்கள். அதில் கூறப்பட்டிருந்ததாவது: சென்ற வாரம் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குச் சென்றிருந்த இக்குழுவினர், பையன்களை ராணுவத்தினர் அவர்களின் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதாகவும், இவர்களை மீட்பதற்காக இவர்களது பெற்றோர் சென்றால் அவர்களிடம் 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை ‘டெபாசிட்’ கட்டுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள் என்று தங்களிடம் ஒரு பெண்மணி கூறியதாகவும் அக்குழுவினர் தெரிவித்தார்கள்.
ராணுவத்தினர் ஒரு வீட்டிற்குள் நுழைந்திருக்கின்றனர். அங்கே தந்தையும் தனயனும் என இருவர் மட்டும் இருந்திருக்கின்றனர். அவர்களை விசாரணைக்காக இழுத்துச் சென்றுள்ளனர். அன்றிலிருந்து அவர்கள் அடைப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். 14, 15 வயது பையன்கள் அவரவர்களின் வீடுகளிலிருந்து இழுத்துச்செல்லப்பட்டு, சித்ரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். கடந்த 45 நாட்களாகவே அவர்கள் இத்தகைய சித்ரவதைக்கு உள்ளாகி வருகிறார்கள்.
இளம்பெண்கள், தங்களிடம் தங்களை ராணுவத்தினர் பல்வேறு வடிவங்களில் தொல்லை கொடுத்துவருவதாகக் கூறியுள்ளார்கள். தங்கள் படுதாவை அகற்ற வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தார்கள். மருத்துவர்கள், சிகிச்சை கோருபவர்களுக்கு சிகிச்சையளித்திட நேரத்திற்குச் செல்லமுடியாத நிலை இருக்கிறது. தொலைபேசி இணைப்புகள் துண்டிப்பு, பொதுப் போக்குவரத்து மற்றும் அனைத்து பிரதான சாலைகளிலும் தடுப்பரண்கள் இருப்பதால் இவர்களால் உரிய நேரத்திற்குச் செல்லமுடியாத நிலை நீடிக்கிறது. கடந்த நாற்பது நாட்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும், 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டபின் கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் விடுவிக்கப்படவேண்டும். ராணுவத்தினர், துணை ராணுவத்தினர் அம்மாநிலத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், ராணுவத்தினர் – துணை ராணுவத்தினரின் அடாவடித்தனங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள புகார்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதன் காரணமாக பலர் தங்கள் குடும்ப உறுப்பினர்களைத் தொலைத்துள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் உரிய இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பெண்கள் உண்மை அறியும் குழுவினர் கோரியுள்ளார்கள்.