tamilnadu

img

பாஜக தோற்கடிக்கப்படுவது உறுதி

புதுதில்லி:

மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது தொடர்பான, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீண்டும் பாஜக-வே ஆட்சி அமைக்கும் என்று கூறியிருக்கின்றன.


‘நியூஸ் 18’ ஊடகத்தின் கணிப்பில், பாஜக கூட்டணிக்கு அதிகபட்சமாக 336 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ‘டைம்ஸ் நவ்- விஎம்ஆர்’ கணிப்பு 306 இடங்களையும், ‘நியூஸ் நேஷன்’ 290 இடங்களையும், ரிபப்ளிக் டிவி- சிவோட்டர் 287 இடங்களையும் பாஜகவுக்கு வழங்கியுள்ளன. குறைந்தபட்சமாக 267 இடங்கள் கிடைக்கலாம் என்று கூறியிருக்கிறது ‘ஏபிபி நியூஸ்’.


எந்த வகையில் பார்த்தாலும், பாஜக கூட்டணி ஆட்சியமைக்கவே வாய்ப்பு என்று, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்ட அனைத்து ஊடகங்களும் தெரிவித்துள்ளன.ஆனால், இந்தக் கணிப்புகள் அப்படியே ஏற்கத்தக்கதாக தெரியவில்லை. கள யதார்த்தத்திற்கு சம்பந்தம் இல்லாமல் இருப்பதாகவே பலரும் கருதுகின்றனர். ஏனெனில் மோடி அலை வீசப்பட்டதாக கூறப்பட்ட 2014 மக்களவைத் தேர்தலிலேயே பாஜக கூட்டணி பெற்றது 330 இடங்கள்தான்.


ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி நடவடிக்கைகளால், அழிந்துபோன சிறு-குறு தொழில்கள், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்த இளைஞர்களுக்கான வேலையின்மை, விவசாயிகள் தற்கொலை, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி ஆகியவை, மோடிக்கு மிகப்பெரிய எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்திருக்கின்றன. தேர்தல் பிரச்சாரங்களில் இவை எதைப் பற்றியும் மோடி பேசவில்லை என்பதிலிருந்தே, அந்த எதிர்ப்பின் தீவிரத்தை யாரும் உணரலாம். 

அவ்வாறிருக்கும்போது, இப்போதும் 330 இடங்கள் என்பது நம்புவதற்கு உரியதாக இல்லைஎன்பது முதலாவது விஷயம்.இதுதவிர, 2014-இல் இருந்த பல கட்சிகள், தற்போது பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மக்களவைக்கு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியே கிடைத்திருக்கிறது. அண்மையில் நடைப்பெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில், பாஜக-வுக்கு செல்வாக்கான மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலேயே பாஜக ஆட்சியைப் பறிகொடுத்திருக்கிறது.


உத்தரப்பிரதேசத்தில் கடந்த முறை பாஜக அணி78 இடங்களைப் பெற்றபோது, சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சி தனித்தனியே போட்டியிட்டன. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் அக்கட்சிகள் ஒன்றுபட்டு தேர்தலைச் சந்திக்கின்றன. ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருக்கும் சுமார் 85 தொகுதிகளில் பாஜக அணிக்கு 10 இடங்கள் கிடைத்தாலே பெரிது. 


மேற்குவங்கம் 42, பீகார் 40 என மொத்தம் 82 இடங்கள் இருக்கின்றன. இவற்றில் பாஜக கடந்த முறை பெற்றதை விட கூடுதலாக பெற வாய்ப்பில்லை. பீகாரில் போனமுறை 22 இடங்களில் பாஜக வென்றிருந்தது. தற்போது பாஜக போட்டியிடுவதே 17 தொகுதிகளில்தான். அத்துடன் பாஜகவுடன் இருந்த ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி இப்போது அவர்களுடன் இல்லை. 


2014 மக்களவைத் தேர்தலின்போது, கர்நாடகத்தில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் தனித்துப் போட்டியிட்டன. அப்படியிருந்தும் பாஜக 17 இடங்களைத்தான் பெற முடிந்தது. மோடி அலை வீசியபோதே இதுதான் நிலை. வாக்கு சதவிகிதம் என்று பார்த்தால், பாஜக 43 சதவிகிதத்தையும், காங்கிரஸ் 40.80 சதவிகிதத்தையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 11 சதவிகிதத்தையும் பெற்றிருந்தன. ஆனால், தற்போது காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணியாக போட்டியிடுகின்றன. பழைய வாக்கு சதவிகிதத்தைக் கணக்கில் கொண் டாலே, இந்த இருகட்சிகளும் பாஜகவைவிட சுமார்9 சதவிகிதம் கூடுதலான வாக்குகளை கொண்டிருக்கின்றன.


2017 குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது, பாஜக முன்பு பெற்றதை விட சுமார் 16 சதவிகித வாக்குகளை இழந்தது. அந்த வாக்குகளை அப்படியே காங்கிரஸ் கைப்பற்றியிருந்தது. இவற்றையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், சுமார் 350 தொகுதிகளில் பாஜகவுக்கு 100 தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயம்.களநிலவரம் இவ்வாறு இருக்கும்போது, பாஜக கூட்டணி 336 இடங்களைப் பெறும் என்பது, நம்பமுடியாததாகவே இருக்கிறது.


அதுமட்டுமல்லாமல், இத்தகைய கருத்துக் கணிப்புகள், கடந்த பல தேர்தல்களில் முழுமையாக பொய்த்துப் போனதையும் பார்க்கலாம்.1999 மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் 300 முதல் 336 தொகுதிகள் வரை கைப்பற்றும் என்று தற்போது போலவே அத்தனை எக்ஸிட் போல் முடிவுகளும் கூறின. ஆனால் பாஜக 296 இடங்களைத் தான் கைப்பற்றியது. இதுகூட பரவாயில்லை. 2004-இல் முடிவுகள் அப்படியே தலைகீழாக மாறின.


அப்போது, பாஜகவுக்கு 250 முதல் 290 இடங்கள்கிடைத்துவிடும் என்றன கருத்துக் கணிப்புகள். ஆனால் பாஜகவுக்கு 189 இடங்கள்தான் கிடைத்தன.காங்கிரஸ் கட்சிக்கு 205 இடங்கள்தான் அதிகபட்சம்கிடைக்கும் என கூறப்பட்ட நிலையில் அக்கட்சி 222 இடங்களில் வென்றது. 2009-இல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்கள் பாஜக-வுக்கு 177 முதல் 197 இடங்கள்கிடைக்கும் என்றன. தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு கிடைத்தது 159 இடங்கள் மட்டும்தான். காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சம் 216 இடங்கள்தான் கிடைக்கும் என்றன. ஆனால் 262 இடங்களை காங்கிரஸ்அள்ளியது.


கடைசியாக 2014 மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொண்டால் கூட, காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 148 இடங்கள் கிடைக்கும் என்று, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறின. ஆனால், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத அளவிற்கு, 44 இடங்களை பெற்று காங்கிரஸ்படுதோல்வி அடைந்தது. 

ஆகவே, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பது மக்களின் மனநிலை. மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவிலும் அதுவே எதிரொலிக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

;