tamilnadu

img

கொரோனா எதிர்ப்புப் போராட்டம் பல மாதங்கள், பல ஆண்டுகள் ஆகலாம்.... சௌமியா சுவாமிநாதன் தகவல்

புதுதில்லி:
“பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தி, இறப்பு விகிதத்தை குறைத்திருப்பது பாராட்டத்தக்கது’’ என உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தேசிய தொழில்நுட்ப தின விழாவில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக அவர் கூறியதாவது: இந்தியாவில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஹர்ஷ்வர்த்தன் மற்றும் அரசு அதிகாரிகள் சிறப்பான நடவடிக்கை எடுத்ததைப் பாராட்டுகிறேன். பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை, இந்தியாவில் குறைவாக உள்ளது.
இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகள் அனைத்தும், கொரோனா பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வர போராடி வருகின்றன. இதற்கு, பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட ஆகலாம். அதற்குத் தயாராக வேண்டும். உண்மையில், இந்தியாவில் பொது சுகாதார கண்காணிப்பு, ஆரம்ப சுகாதார பராமரிப்பு மற்றும் சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்துவதற்கான நேரம் இது. தடுப்பூசி கண்டுபிடிப்பில், இந்தியா எப்போதும் முக்கியப் பங்காற்றி வருகிறது.

இதில், இந்தியா பங்கு கொள்ளாவிடில், உலகில் போதுமான தடுப்பூசிகள் கிடைத்திருக்காது. ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, சோதனைக்குப் பின், பயன்பாட்டிற்கு வர, 10 ஆண்டுகள் ஆகும். ஆனால், ‘எபோலா’ வைரசுக்கு, ஐந்து ஆண்டுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனாவுக்கு, ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டு பிடிக்க முயற்சிக்கப்படுகிறது. இதற்கு தொழில்நுட்பப் பரிமாற்றம், உத்திகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும், உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 

தடுப்பூசியை உருவாக்கி பரிசோதிப்பது மட்டும் போதாது.  அதை உற்பத்தி செய்வது, மதிப்பீடு செய்து கொள்முதல் செய்வது மக்களுக்கு தடுப்பூசிகளை போடுவதற்கான சுகாதார கட்டமைப்புகளைப் பெறுவதும் மிக முக்கியமானது என எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியதை நினைவில் கொள்ளவேண்டுமென்றார். உலக சுகாதார அமைப்பின் தகவல்படி, 215 நாடுகளில் 4, 013, 728 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,78,993 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மே 12-ஆம் தேதி நிலவரப்படி 70,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22,455 பேர் குணமடைந்துள்ளனர். 2,293 பேர் உயிரிழந்துள்ளனர்,

;