tamilnadu

img

கீழடி அகழாய்வுக்கு நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு அமைத்திடுக! மக்களவையில் கார்த்தி சிதம்பரம் பேச்சு

“கீழடியை இந்த சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அதைப் பாதுகாத்திட தொடர்ந்து வலியுறுத்தும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரான மதுரை நாடாளுமன்ற உறுப்பினரை (சு.வெங்கடேசன்) தலைவராக நியமிக்க வேண்டும்” 

புதுதில்லி, ஜூலை 3- கீழடி அகழாய்வுக்கு நாடாளு மன்ற மேற்பார்வைக்குழு ஒன்றை அமைத்து அதன் தலைவராக மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசனை நியமிக்க வேண்டும் என  மத்திய அரசுக்கு சிவகங்கை நாடாளு மன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்தார். மக்களவை கூட்டத் தொடர் நடை பெற்று வருகிறது. செவ்வாயன்று மாலை அவையில் தமது முதல் பேச்சைத் துவக்கிய சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் கீழடி குறித்து விரிவாகப் பேசி மத்திய அரசிடம் வலியுறுத்திய விபரம் வருமாறு: நான் சிவங்கை தொகுதி பிரதிநிதி. 1700களிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய துணிச்சல்மிக்க ராணி வேலு நாச்சியாரின் பூமி இது. தமிழகத்திலுள்ள ஹீரோக்களையும் சின்னங்களையும் பற்றியும் நாட்டின் பிறபகுதியில் இருப்பவர்கள் கவலைப் படுவதில்லை. குறிப்பாக வட இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவ தில்லை அல்லது இவர்களுக்கு விழா  நடத்தியெல்லாம் கொண்டாடப்படுவ தில்லை என்பதை நாங்கள் உணரு கின்றோம்.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறை கீழடி கிராமத்தில் அகழாய்வினை மேற்கொண்டது. அதில் அவர்கள் பல ஆச்சரியமிக்க புதிய விசயங்களை கண்டறிந்துள்ளனர். அந்த ஆய்வில், நாம் ஏற்கெனவே  அறிந்த ஹரப்பா மற்றும் மொகஞ்ச தாரோ நாகரீகத்திற்கு முந்திய ஒரு  நாகரீகம் இருக்கலாம் என்பதற்கான தடயங்களை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். அதில் மிகுந்த ஆச்சரியமிக்க உண்மை என்னவெனில், இதுவரை எந்தவொரு மத ரீதியிலான பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது ஆகும். இது பெருமதங்கள் உருவாவதற்கு முன்பே இந்த நாக ரீகம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை நமக்கு கொடுப்பதாக உள்ளது. எனவே இந்த அகழாய்வு முழுமையாக நடத்தப்பட்டு அதன் உண்மையை கண்டறிய வேண்டும். வரலாறு எப்போதும் முக்கியத்துவ மானது. அதை எந்த விருப்பு வெறுப்பு களுக்கும் இடம் கொடுக்காமல் கற்க வேண்டும். அதை அவரவர் சித்தாந்தங் களுக்கோ அல்லது நம்பிக்கை களுக்கோ பொருந்தக்கூடிய வகை யில் விளக்க முயற்சிக்கக் கூடாது. எனவே கீழடி ஆய்வு குறித்த சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கு இந்த அவையின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.

1. இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை கீழடியைச் சுற்றியுள்ள 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி அதில் முழுமையான அகழ்வாராய்ச்சி செய்யப் பட வேண்டும். ஆய்வுக்கு எடுக்கப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு தகுந்த உரிய இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்.
2. தற்போது கீழடியில் 5வது கட்ட அகழ்வாராய்ச்சி பணி தமிழக அரசின் தொல்பொருள் துறையினரால் மேற் கொள்ளப்படுகிறது. இதில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையும் இணைந்து ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.
3. இந்த ஆய்வின் முதல் கட்டத்தில் பல உண்மைகளைக் கண்டறிந்த இளம் தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணனை மீண்டும் இந்த ஆய்வுப்பணிக்கு திரும்ப உத்தரவிட வேண்டும்.
4. கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டு மைசூரில் வைக்கப்பட்டுள்ள சுமார் 13,600 தொல்பொருட்களை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டுவர வேண்டும்.
5. முக்கியமான சில தொல்பொருட் களை ‘கார்பன் டேட்டிங்’ சோதனைகளுக்கு அமெரிக்காவின் புளோரிடா வில் உள்ள பீட்டா பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
6. சர்வதேச அகழாய்வு நிபுணர் களுக்கு இந்த அகழாய்வில் கண்டு பிடிக்கப்பட்ட பொருட்கள் காண்பிக்கப் பட வேண்டும்.
7. இறுதியாக, முக்கியத்துவமுள்ள கீழடி அகழாய்வுக்கு நாடாளுமன்ற மேற்பார்வைக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அக்குழுவிற்கு கீழடியை இந்த சமூகத்தின் பார்வைக்கு கொண்டு வந்து அதைப் பாதுகாத்திட தொடர்ந்து வலியுறுத்தும் சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரான மதுரை நாடாளுமன்ற உறுப்பினரை (சு.வெங்கடேசன்) தலைவராக நியமிக்க வேண்டும்.  வரலாறு சரியாகவும், துல்லிய மாகவும் பதிவு செய்யப்படுவது அவசியம். கீழடி அகழாய்வு இந்திய வரலாற்றுக்கு மட்டுமல்ல; உலக வரலாற்றிற்கே முக்கியமானது ஆகும். பழங்கதைகளையும், பல நம்பிக்கைகளையுமே நாம் வர லாறாக கொண்டிருக்கிற இக்காலத்தில் “கீழடி”யை எதிர்கால தலைமுறை யினருக்கு நாம் கொண்டு சென்று பயில வைப்பது அவசியம். இவ்வாறு கார்த்தி ப.சிதம்பரம் பேசினார்.