tamilnadu

img

அம்மாவுக்காக அல்ல தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி

திருவள்ளூர்:
அம்மாவிற்காக ஆட்சி நடத்தவில்லை. தில்லி தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் கூறினார்.ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் தேசிய கவுன்சில் கூட்டம் திருவள்ளூரில் நடைபெற்றது.இதையொட்டி ஞாயிறன்று (அக். 14) நடந்த கருத்தரங்கில் அவர் பேசியது வருமாறு:

 அனைத்து மாநிலங்களிலும் ஆதிவாசி பெண்கள், இளைஞர்கள், குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க எங்களது அமைப்பு பாடுபட்டு வருகிறது. ஆதிவாசி மக்களின் பங்களிப்பு இல்லாமல் இந்திய சுதந்திரப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கமுடியாது.ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள் இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.1857க்கு முன்பே இந்தியாவில் முதல் சுதந்திரப்போர் தொடங்கிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆதிவாசி மக்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியிருக்கிறார்கள்.இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்திற்காக அந்நியர்களிடமிருந்து இந்தியாவை பாதுகாக்க போராடியவர்களில் 9 விழுக்காட்டினர் ஆதிவாசிகள் என்பதை யாரும் மறுக்கமுடியாது.ஆனால்இன்று தில்லியில் உள்ள ஆட்சியாளர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரால்அந்த ஆதிவாசி மக்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஏழைகளாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு வளமான கலாச்சாரம் உண்டு.வளமான மொழி உண்டு.வளமான பாரம்பரியம் உண்டு. ஆதிவாசி மக்கள் மீது தங்களது கலாச்சாரத்தை புகுத்தபாஜக ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். ஒரே மொழி, ஒரேநாடு என நமது அடையாளம், பாரம்பரியம்,கலாச்சாரத்தை அழிக்க முயற்சிக் கிறார்கள். ஏன் இதை செய்கிறார்கள் என்றால் நமது ஆதிவாசி என்ற அடையாளத்தை அழித்துவிட்டால் நான் ஒரு எஸ்டி என்று இனச்சான்றிதழ் பெறமுடியாது. 

இந்த சான்றிதழை பெற  நாம் எத்தனைஆண்டுகள் அமைச்சர்கள் முன்பும் அதிகாரிகள்  முன்பும் கையை கட்டிக் கொண்டு நின்றோம். அதற்காக அரசியல் வாதிகளிடம் எவ்வளவு பணம் கொடுத்தோம்.இனச்சான்றிதழ் கேட்டு ஒவ்வொரு அரசு அலுவலகங்கள்முன்பும் தமிழகத்தில் உள்ள பெ.சண்முகமும், டில்லிபாபுவும் இங்குள்ள இதர தலைவர்களும் பணம் வாங்காமல் தாமதிக்கா மல் மலைவாழ் மக்களுக்கு இனச்சான்றிதழை கொடுங்கள் என பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். நாம் நமது அடையாளத்தோடு இருப்பதும் அதற்கான இனச்சான்றிதழை கேட்பதும் நமது அடிப்படை உரிமை.குருமன்ஸ் இன மக்கள் தங்களதுஇனச்சான்றிதழுக்காக இன்னமும் போராடவேண்டியுள்ளது. அவர்களுக்கு இனச்சான்றிதழ் எளிதாகவழங்கப்படுவதில்லை.இதில் உள்ளசதித்திட்டத்தை நாம் அறிந்து கொள்ளவேண்டும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பழங்குடியினருக்கு இடஒது க்கீடு வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 1.5விழுக்காட்டினர் மட்டுமே எஸ்டி மக்கள் உள்ளனர். இவர்களுக்கு இடஒதுக்கீடு மறுக்கப்பட்டால் இடஒதுக்கீட்டுக்கான விழுக்காடு தொடர்ந்து குறைவாகவே இருக்கும் என்று கருதுகிறார்கள். இம் மக்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை உயர்த்துமாறு நாம் வலியுறுத்தி வருகிறோம். இதனால் உண்மையான மலைவாழ் மக்களுக்கு கல்வியிலும் அரசு வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு கிடைக்கும். தமிழகத்தில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் இந்தகோரிக்கையை நாம் வலியுறுத்திவருகிறோம். நியாயமான மலைவாழ் மக்களுக்கான ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பு போராடி வருகிறது. இது மட்டுமல்ல எஸ்.சி.,எஸ்டி மக்களுக்கு அரசுத்துறையில் மட்டுமல்ல தனியார் துறையிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம்.

நாட்டில் உள்ள வனம் இந்தியாவில் உள்ள ஆதிவாசி சமூகத்தினருக்கு சொந்தமானது. வனஉரிமைச்சட்டம் வருவதற்குமுன்பு இந்தியாவில் வனம் பழங்குடியின மக்களுக்கு சொந்தமாக இருந்தது.அரசுக்கு இந்த வனத்தின் மீது எப்போதும் ஒரு கண் உண்டு.அதை தனியார்மயமாக்கி தனியார் நிறுவனங்களுக்கு வழங்க ஆட்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். வனநிலத்திற்கு அடியில் உள்ள கனிம வளங்களை எடுப்பதற்காக அந்த நிலங்களின் உரிமையாளர்களாகிய ஆதிவாசி மக்களை அங்கிருந்து விரட்டுவதில் குறியாக இருக்கிறார்கள். ஆனால் செங்கொடி இயக்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடி வன உரிமைச்சட்டத்தை நிறைவேற்றினார்கள்.இங்குள்ள துணை அமைப்பாளர் பாபுராவ், திரிபுரா மாநில முன்னாள்எம்பி பாஜூபாய் ரியாங் ஆகியோரும் இதற்கான நாடாளுமன்ற  தெரிவுக்குழுவில் இருந்தனர்.இவர்களோடு நானும் அந்த குழுவில் இடம்பெற்றிருந்தேன். இடதுசாரி கட்சிகளின் கடுமையான வற்புறுத்தலுக்கு பின்னர்தான் வன உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.இதன் மூலம் யார் யார் வனத்தில் வசிக்கிறார்களோ அவர்கள் தான் அந்தநிலத்திற்கு சொந்தக்காரர்கள் என்றுநிலைநாட்டப்பட்டு பட்டா பெற்றுத்தரப்பட்டது.இப்படி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு அந்த சட்டம்நிறைவேற்றப்பட்டதுதான் காரணம்.

ஆனால் மோடி தலைமையிலான மத்திய அரசு அந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் சென்றுள்ளது. வனத்தின் மீது அம்மக்களுக்கு உள்ள உரிமையை பறிக்க முயற்சிக்கிறது.இதில்  வெட்கக்கேடான விஷயம் என்னவென்றால் இங்குள்ள அதிமுக அரசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும்  அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துகிறோம் என்கிறார். ஆனால் உண்மையில் அவர் தில்லியில் உள்ள தாதாக்களுக்காக ஆட்சி நடத்துகிறார். அந்ததாதாக்களோ இந்த சட்டத்தை எப்படியாவது ஒழித்துக்கட்டிவிடுவோம் என்கிறார்கள்.உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி அரசு தாக்கல் செய்த பிரமானபத்திரத்தில் மலைவாழ் மக்கள் பொய்சொல்கிறார்கள். அவர்களுக்கு வனத்தின்மீது எந்த உரிமையும் இல்லை என்கிறார்.அவர்கள் உண்மையான மலைவாழ் மக்கள் அல்ல என்கிறார். எனவே தான் எங்களது அரசு அவர்களை  எஸ்டியாக அங்கீகரித்து  சான்றிதழை வழங்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். பொய்யாகஇனச்சான்றிதழ் கேட்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் வாய் கூசாமல் பொய் சொல்லியிருக்கிறார். இதுவரை இனச் சான்று கேட்டு விண்ணப்பித்தவர்களில் 40 முதல் 50 விழுக்காடு விண்ணப்பங்களை அரசு நிராகரித்திருக்கிறது. எனவே தான் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பும் விவசாயிகள் சங்கமும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து சட்டப்படியான போராட்டத்தை நடத்தி வருகிறோம். வன மக்களுக்கு அரசும் நீதிமன்றமும் துரோகமிழைத்தாலும் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிவிட்டோம். நீதிமன்றமும் இதில் உள்ள நியாயத்தை உணர்ந்து கொள்ளவேண்டும். என்ன ஆனாலும் சரி நாங்கள் எங்களது நிலத்தை விட்டு வெளியேற மாட்டோம். அது எங்களது நிலம்.

மோடியின் ஜூனியர் பார்ட்னராக செயல்படவே அதிமுகவினர் விரும்புகிறார்கள்.இந்தியாவில் ஒரே அரசுதான் இருக்கவேண்டும் என்று மோடி விரும்புகிறார். நாங்கள் பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். திரிபுராவில் இருந்த மாணிக்சர்க்கார் தலைமையிலான இடது முன்னணி அரசும் கேரளாவில் உள்ள இடது ஜனநாயக முன்னணி அரசும் ஆதிவாசி மக்களை வனப்பகுதியில் இருந்து அகற்றும் எந்த ஒரு சட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. வன உரிமை சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றம் நிராகரிக்கவேண்டும் என்றும் ஆதிவாசி மக்களின் பக்கம் நீதிமன்றம் நிற்கவேண்டும் என்றும் கேரள அரசு தெரிவித்தது.
மத்திய அரசு செல்வந்தர்களுக்கும் மிகப்பெரிய தொழில் அதிபர்களுக்கும் சலுகை மேல் சலுகைகளை வாரி வழங்கி வருகிறது.2018-2019ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில்நிறுவனங்களின் லாபம் 22 விழுக்காடு அதிகரித்துள்ளது. இருந்தும் அவர்களுக்கு அரசு இன்னமும் வரிச்சலுகை என்ற பெயரில் ஒருலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் வழங்கிவருகிறது. ஆனால் இதே காலகட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களின் நிலை இன்று மிகவும் துயரத்தில் உள்ளது. அவர்களின் ஊதியம் வெறும் 3.5 விழுக்காடுதான் உயர்ந்துள்ளது. 22 விழுக்காடு லாபம் எங்கே? 3.5விழுக்காடு கூலி உயர்வு எங்கே? அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் இந்த சிறிய கூலி உயர்வின் பலனையும் அவர்களால் அனுபவிக்கமுடியவில்லை. அத்தியாவசியப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தியதுதான் மோடி அரசின் சாதனை. அந்த அரசுக்குதான் இங்குள்ள அதிமுக அரசு முட்டுக்கொடுத்துவருகிறது. எனவே எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது. நாம் எந்த இடத்தில்இருக்கிறோம். அரசோ பணக்காரர் களுக்கு உதவி செய்து வருகிறது. நமக்குஉதவி செய்யமறுக்கிறது. விதவை களுக்கான ஓய்வூதியம் ஒரு ரூபாய் கூட உயர்த்தப்படவில்லை. பழங்குடியின குழந்தைகள் தங்கி படிக்கும் விடுதிகளின் நிலை மோசமாகிவருகிறது. உணவு சரியில்லை, கழிவறை சரியில்லை. பசுமாடுகளை பராமரிக்கும் கோ சாலை களுக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட குறைவாகத்தான் இந்த விடுதிகளுக்கு பாஜகஆளும் மாநிலங்களில் ஒதுக்கப் பட்டுள்ளது. பாஜக அந்த மாநிலங்களில் கோசாலை பாதுகாப்பு  அமைச்சர்கள் பதவி கூட உருவாக்கப்பட்டுள்ளது.பசுமாடு களுக்காக தனியிடம். தனி பட்ஜெட்., தனி நிதிஒதுக்கீடு. இப்படிப்பட்ட பாஜகவை தான் உங்களது மாநிலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி ஆதரித்து வருகிறார்.

வரும் காலத்தில் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபடவும் மாற்றுக் கொள்கைகளை நிறைவேற்ற பாஜக அரசை நிர்பந்திக்கவும்  நமதுகோரிக்கைகளுக்காகவும் பெரும் போராட்டத்தை நடத்தவும் திட்ட மிட்டுள்ளோம்.இவ்வாறு பிருந்தாகாரத் பேசினார். அவரது ஆங்கில உரையை விவசாயிகள் சங்க திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் பி.துளசி நாராயணன் தமிழில் மொழி பெயர்த்தார்.

;