சென்னை:
மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கும் பணியை தமிழக அரசு மேற்கொள்ளக்கூடாது என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தக்கூடாது என்றும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கருத்தரங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழர் துரோக, முஸ்லீம் விரோத குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னை சைதாப்பேட்டையில் வியாழனன்று (டிச.26) நடைபெற்ற கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
மத்திய பாஜக அரசு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை படிப்படியாக சிதைத்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற தன்மையை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் , தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய முக்கிய அம்சங்களில் வகுப்புவாத கண்ணோட்டத்துடன் குறிப்பாக முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது . குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் எழுப்பி வரும் ஆவேசமிக்க குரலை பாஜக உதாசீனப்படுத்தி வருகிறது. சமீபத்தில் மத்திய அரசு அறிவித்திருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கும் (சென்சஸ்), தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் (என்பிஆர்) மிகப்பெரிய வேறுபாடு உண்டு. மக்கள் தொகை கணக்கெடுப்பு நூற்றாண்டு காலமாக இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் பெறப்படும் தனி மனித தகவல்கள் பொதுவெளியில் வைக்கப்பட மாட்டாது. சென்சஸ் தகவல்களை யாரும் பார்வையிட முடியாது. நீதிமன்றத்தில் சாட்சியமாக இந்த தகவலை எடுத்துக் கொள்ள முடியாது.
இத்தகைய உத்திரவாதத்தை சென்சஸ் சட்டம் தருகிறது. கண்ணியமிக்க வாழ்க்கையை அடிப்படை உரிமையாக இந்திய அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்துகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மூலம் பெறப்படும் தகவல்களில் இருந்து புள்ளி விபரங்களை அரசிற்கும் மற்றவர்களுக்கும் தருவார்கள். அத்தகைய தகவல் மக்களுக்கான நலத் திட்டங்கள், நாட்டின் வளர்ச்சி ஆகியவை குறித்து திட்டமிட அரசிற்கு பயன்படுகிறது. ஆனால் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக (என்பிஆர்) திரட்டப்படும் தகவல் மின்னணு முறையில் பராமரிக்கப்படும். ‘அரசிற்கு தரப்படும் தனி மனிதர் குறித்த அனைத்து தகவல்களும் - கைரேகையில் இருந்து அவர் சார்ந்துள்ள மதம் வரை - அனைவரும் அறியும் வண்ணம் இருக்கும். தனிமனித தகவல் பொது வெளியில் இருந்தால் அத்தகவலை எவரும் அறிந்துக்கொள்ள இயலும். இத்தகைய சூழலில் தனிமனித பாதுகாப்பு கேள்விக் குறியாகும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டை (என்பிஆர்) வைத்துக்கொண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயார் செய்ய முடியும். ஆக என்பிஆரின் (சிஏஏ) நோக்கமே என்ஆர்சி உருவாக்கத்தான்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பான மதச் சார்பற்ற தன்மைக்கு எதிராக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கவோ, நிராகரிக்கவோ வழி வகை செய்கிறது. இது குறிப்பிட்ட மூன்று அண்டைநாடுகளில் இருந்து வருபவருக்குத்தான் என்று சொல்லப்பட்டாலும் இதன் நோக்கம் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கவோ நிராகரிக்கவோ இயலும் . இத்தகைய சூழலில் என்ஆர்சி தயாரிக்க விதிகளை உருவாக்கிவிட்ட பிறகு மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பதன் நோக்கம் மக்கள் நலப் பணிக்காக அல்ல. என்ஆர்சி தயாரிக்கவே என்பது தெளிவாகிறது. இந்தியா முழுக்க இத்தகைய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டிய அவசியம் எங்கிருந்து எழுகிறது?
இந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிக்காக மத்திய அரசு 3,941.35 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மக்கள் மத்தியில் அச்சத்தையும், பிளவையும் உண்டு செய்யக் கூடிய தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு அடிப்படையாக அமையக்கூடிய தேசிய மக்கள் தொகை பதிவேட்டை அரசு கைவிட வேண்டும். இந்திய அரசு தேசிய மக்கள் தொகை பதிவேடு பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு இப்பணிகளை தமிழ்நாட்டில் நிறுத்த வேண்டும்.குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு ஆகிய மூன்றுக்கும் தொடர்பு உள்ளது. இந்த மூன்றையும் மத்திய மற்றும் தமிழக அரசுகள் திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வழிமொழியும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இசைக்கலைஞர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் பேசினர். தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன் தலைமை வகித்தார். கல்வியாளர் தாவூத் மியாகான் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் க. உதயகுமார் நன்றி கூறினார்.