சென்னை:
“அரசியலமைப்பை பாதுகாப்போம், ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் அரசியலமைப்பு பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள கேரள சமாஜத்தில் ஞாயிறன்று (பிப். 23) நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், சிஏஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் போராடி வருகிறார்கள். இது இஸ்லாமியர்களுக்கும் இந்திய அரசுக்குமான போராட்டமல்ல. இந்திய அரசிலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என நினைக்கும் இந்திய மக்களுக்கும் அரசுக்குமான போராட்டமாகும் என்றார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
நாடுமுழுவதும் சிஏஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி. குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். தங்களுடைய வாழ்வுரிமை பாதிக்கப்படுகிறது என ஆயிரக்கணக்கானோர் தினசரி போராடிக் கொண்டிருக் கிறார்கள். இந்த சட்டம் குறித்து மத்தியரசு திரித்துக் கூறுகிறது. அசாம் பழங்குடியினர் அல்லாத, அசாமில் பிறக்காத ‘அந்நியர்களை’ அடையாளம் காண வேண்டும் என்பதற்காக, 1971ஆம் ஆண்டுக்கு முன்னர் வந்தவர்கள் அசாமில் இருக்கலாம், மற்றவர்களை வெளியேற்ற வேண்டும் என நடைபெற்ற போரட்டத்தையொட்டி ராஜீவ்காந்தி ஆட்சியில் ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது 50 ஆண்டுகள் கடந்து விட்டன. இதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன, குழுக்கள் அமைக்கப்பட்டன. அனைத்து முயற்சிகளும் முழுமை அடையவில்லை.
மக்கள் நிராகரிப்பு
இந்நிலையில் மத்திய பாஜக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று அசாமிலே ஒரு கணக்கெடுப்பு நடத்த வேண்டும், தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டும் என்றது. அப்போது இது பேராபத்தில் முடியும், சமுதயாத்தில் குழப்பமும், கலவரமும் ஏற்படும் என அனைவரும் எச்சரித்தார்கள். அப்போது தலைமை நீதிபதியாக இருந்தவர் இந்த பட்டியலை தயாரிக்க வேண்டும் என பிடிவாதமாக இருந்ததன் விளைவாக என்.ஆர்.சி. தயாரிக்கப்பட்டது. இந்த என்.ஆர்.சி.யை தயாரிக்க ஒரு சர்வாதிகாரியான அஜெய்லா என்ற அதிகாரியை நியமித்தார்கள். இதற்காக 1400 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது. இதில் 40 லட்சம் பேர் அந்நியர்கள் என என்.ஆர்.சி. பதிவேட்டில் அடையாளம் காணப்பட்டது. 40 லட்சம் குறைவு என்று ஒரு தரப்பினரும், இல்லை இது அதிகம் என ஒரு தரப்பினரும் போராடினார்கள். உடனே அரசு இதுகுறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறியது. அதே அதிகாரிதான் மீண்டும் சீராய்வு மேற்கொண்டார். சீராய்வில் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் அந்நியர்கள் என அறிவிக்கப்பட்டது. இதில் சேர்க்கக் கூடாதவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள் என கடந்த வாரம் மீண்டும் அங்கு போராடும் இரு தரப்பில் இருந்தும் குரல் எழுந்துள்ளது. இந்த கணக்கெடுப்பை அசாம் மக்களும் நிராகரித்து விட்டார்கள், அசாம் மாநில பாஜக அரசும் நிராகரித்து விட்டது. எத்தனை முறை கணக்கெடுத்தாலும் இதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. இதுதான் மனித இயல்பு. இதற்கு அதிகாரியாக இருந்தவர் இன்று ஊழல் வழக்கில் சிக்கி வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிரம்ப்பால் முடியவில்லை
அசாமில் அந்நியர்கள் என்று கூறப்பட்டுள்ள 19 லட்சம் பேரில் 12 லட்சம் பேர் இந்துக்கள், 7 லட்சம் பேர் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பிற மதத்தினர் சிலர் உள்ளனர். 19 லட்சம் மக்களையும் வெளியேற்றினால் எந்த நாடு அவர்களை ஏற்றுக் கொள்ளும்? இல்லையென்றால் அனைவரையும் வங்கக் கடலில் வீசப்போகிறார்களா? உலகில் சட்டவிரோதமான குடியேற்றத்தை தடுத்த நாடுகள் உள்ளன. ஆனால் 19 லட்சம் பேரை வெளியேற்றிய நாடு எதுவும் இல்லை. ஒருவேளை நரேந்திர மோடிக்கு சந்தேகம் இருந்தால் இந்தியாவிற்கு வரும் டிரம்பை கேட்கட்டும். மெக்சிகோவில் இருந்து வந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என டிரம்ப் கூறினார். ஆனால் அவரால் ஒருவரையாவது வெளியேற்ற முடிந்ததா? 2024ஆம் ஆண்டிற்குள் அனைவரையும் தூக்கி எறியப் போகிறேன் என உள்துறை அமைச்சர் இங்கே கூறுகிறார். 2024இல் யாரை தூக்கி எறிய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.
எந்தநாட்டு மக்களை சிஏஏ பாதிக்கும்?
19 லட்சத்தில் 12 லட்சம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தவுடன் அதில் இருந்து மீள்வதற்காகத்தான் சிஏஏ கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியாவிலே இருக்கும் மக்களை இந்த சட்டம் பாதிக்காது எனக் கூறுகிறார்கள். அப்படியென்றால் எந்த நாட்டு மக்களைஇந்த சட்டம் பாதிக்கும். இந்த சட்டத்தின் இறுதி நாளான 31.12.2014க்கும் முன் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்குத்தான் இந்த சட்டம் பொருந்துமே தவிர, அதன் பின் வந்தவர்களுக்கு பொருந்தாது. பாகிஸ்தானில் இருந்தோ, வங்கதேசத்தில் இருந்தோ யாராவது நாளை சட்ட விரோதமாக இந்தியாவிற்கு நுழைந்தால் அவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது. ஆனால் இந்தியாவிலே இருக்கும் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என அரசும், அமைச்சர்களும் பொய் பேசுகிறார்கள். சட்ட விரோத குடியேற்றத்தில் இந்துக்கள், பார்சி, பவுத்தர்கள், இஸ்லாமியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் இருப்பார்கள். ஆனால் இந்த சட்டம் இந்துவா, பவுத்தனா, பார்சியா, கிறித்துவரா இங்கே இருங்கள் வெளியேற வேண்டாம், இஸ்லாமியராக இருந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் எனக் கூறுகிறது.
மண்ணின் அடிப்படையில்தான் ....
இந்திய அரசியல் சாசனம் மதத்தின் அடிப்படையில் யாருக்கும் பாகுபாடு காட்டக் கூடாது எனக்கூறுகிறது. 70 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக மதத்தின் அடிப்படையிலே பாகுபாடுசெய்யப்பட்டு ஒரு சட்டம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. இந்திய அரசமைப்பு சாசனத்தில் குடியுரிமை குறித்து சில ஷரத்துகள் உள்ளன. டாக்டர் ராஜேந்திரபிரசாத், மௌலானா அபுல்கலாம் ஆசாத் போன்ற பெரிய அறிஞர்களால், மேதைகளால் அந்த ஷரத்துகள் விவாதிக்கப்பட்டு, திருத்தப்பட்டு, அவையில் முன் வைத்து விவாதித்து 3 மாதங்களுக்குப் பிறகு அவை ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் இந்த புதிய குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 72 மணி நேரத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மூல அரசியல் சாசனம், குடியுரிமை என்பது மதத்தின் அடிப்படையில் இல்லை, மண்ணின் அடிப்படையில்தான் என்று கூறுகிறது. இந்த பூமியிலே பிறந்தவர்கள், நீண்டகாலமாக வாழ்பவர்கள் இந்தியர்கள். இதுதான் ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொண்ட கோட்பாடு. அவர் அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி யார், எங்கே பிறந்தார்கள், அவர்கள் தாய்மொழி என்ன இவையெல்லாம் கேட்க வேண்டிய அவசிய மில்லை. 73 ஆண்டுகாலமாக நிலையாக இருந்த அரசியல் சாசனத்தை மாற்றி மதத்தின் அடிப்படை யில் ஒரு கோட்பாட்டை கொண்டு வருகிறார்கள் என்றால் எவ்வளவு அகங்காரம், அகந்தை இருக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் 14ஆவது பிரிவுக்கு இது நேர் விரோதமானது. எனவே உச்சநீதிமன்றம் இந்த சட்டத்தை செல்லாது என அறிவிக்கும் என நம்புகிறோம்.
அரசியல் சாசனத்திற்கு பேராபத்து
அதற்காக நாடு முழுவதும் விவாதம் நடைபெறுவதை நிறுத்தி விடக் கூடாது. உச்சநீதிமன்றத்திலே வழக்கு இருக்கும் போது நாடு முழுவதும் இதுகுறித்து விவாதிக்கப்படுகிறது என அமைச்சர் குற்றம்சாட்டுகிறார். அயோத்தி வழக்கு பல ஆண்டுகள் நடைபெற்ற போது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்று நீங்கள் அமைதியாகவா இருந்தீர்கள்? சாதுக்கள், சன்னியாசிகளை கூட்டி வைத்து மாநாடு நடத்தவில்லையா? போராட்டங்கள் நடத்தவில்லையா?தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை ரத்து
செய்ய வேண்டும்; என்.பி.ஆர். அறவே கூடாது; மக்கள் தொகை கணக்கெடுப்பு மட்டுமே நடைபெற வேண்டும். தற்போது இந்திய அரசியல் சாசனத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது. இதற்கெதிராக சாதி, மதம் கடந்து அனைவரின் குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ரஷ்மிதா ஆர்.சந்திரனும் உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, இதயதுல்லா (காங்கிரஸ்),அன்வர் எம்.பி., கும்பளங்காடு உண்ணி கிருஷ்ணன், நந்தகோவிந்த், எம்.கே.சோமன்மேத்யூ, பி.கே.பாலகிருஷ்ணன், கே.கருணாகரன், குன்கிக்கண்ணன், ஹசிரா சையத், டி.ஆனந்தன் (டீ கடை உரிமையாளர் சங்கம்) உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற மக்கள் கலைக்குழு, பாரதி கலைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தன. (ந.நி.)