தலைநகர் புதுதில்லியில், கடந்த மூன்று நாட்களாக வட கிழக்கு தில்லியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களின் விளைவாக இதுவரை பத்துபேர் இறந்துள்ளதாகவும், 150க்கும் மேற்பட்டோர் காயங்கள் அடைந்துள்ளதாகவும் சதாராவில் உள்ள குரு தேக் பகதூர் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நபரும் இறந்த நிலையிலேயே கொண்டுவரப்பட்டதாகவும் எனவே இறந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் என்டிடிவி மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வேறு தனித்தனி சம்பவங்களில் இருவர் இறந்துள்ளதாக குறிப்பிட்டிருக்கின்றன. எனவே இறந்தோர் எண்ணிக்கை 13ஆக உயர்ந்துள்ளது.
இந்தத் தகவல்களைத் தெரிவித்த மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் சுனில் குமார், காயம் அடைந்தவர்களில் 70 பேர் துப்பாக்கிக் குண்டுகளைப் பெற்றிருப்பதாகக் கூறினார். இதுவரை மருத்துவனைக்கு திங்கள் அன்று 93 பேரும், செவ்வாய் அன்று மேலும் பலரும் சிகிச்சைக்காக வந்திருப்பதாகவும், இவற்றின் மூலம் காயம் அடைந்தோர் எண்ணிக்கை 186ஆக உயர்ந்திருப்பதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
காயம் அடைந்தவர்களை தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மனிஷ் சிசோடியோ, லெப்டினன்ட்-கவர்னர் அனில் பைஜால் வந்த காயம் அடைந்தோர் நிலை குறித்து விசாரித்தனர்.
தலைநகர் தில்லியில் ஞாயிறு அன்று மாலை பாஜக தலைவர் கபில் மிஷ்ரா வன்முறையைத் தூண்டும் விதத்தில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜஃராபாத் மற்றும் சந்த்பாத் ஆகிய இடங்களில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருப்போர் தாங்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் காலி செய்திட வேண்டும், இல்லையேல் என்கிற ரீதியில் ஆத்திரமூட்டும் வித்த்தில் பேசியதற்குப்பின்னர், மேற்படி இடங்களில் வன்முறை வெறியாட்டங்கள் தலைதூக்கின. அங்கிருந்த கடைகள், வாகனங்கள், தனியார் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன மற்றும் தீக்கிரையாக்கப்பட்டன.
நிலைமைகள் மிகவும் மோசமாகச் சென்றுகொண்டிருப்பதை, உய்த்துணர்ந்த தில்லி உயர்நீதிமன்றம், அதிகாலை 1.42 மணியளவில் அவசரமாகக் கூடி, முஸ்தப்பாபாத்தில் வன்முறையில் பாதிப்புக்கு உள்ளான 20 பேரை உரிய பாதுகாப்புடன் உடனடியாக குரு தேக் பகதூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திட வேண்டும் என்று கட்டளையிட்டது.
நீதியரசர் முரளிதர் இல்லத்தில் நீதியரசர்கள் எஸ்.முரளிதர் மற்றும் ஏ.ஜே. பம்பானி ஆகியோரடங்கிய அமர்வாயம், அசாதாரணமான சூழ்நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
“இது ஒரு சிறப்பு அமர்வாகும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தில்லியில் இல்லாததால், அடுத்த மூத்த நீதிபதி ஜி.எஸ்.சிஸ்டானி உத்தரவுக்கு இணங்க 26.2.2020 அதிகாலை 12.30 மக்கு இந்த சிறப்பு அமர்வு நடைபெற்றது. எங்களில் ஒருவர் (நீதியரசர் எஸ்.முரளிதர்,ஜே.) வழக்குரைஞர் சுரூர் மாண்டர் என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்றினைப் பெற்றார். அந்த அழைப்பானது, மிகவும் கொடூரமான சூழ்நிலைகளை விளக்கியதுடன், வட கிழக்கு தில்லியில் கலவரம் நடந்த பகுதிகளில் மிகவும் கொடுங் காயங்கள் அடைந்துள்ள நபர்கள் புது ஏ1 ஹிந்த் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும், ஆனால் அது மிகவும் சிறிய மருத்துவமனையானதாலும் அங்கே கொடுங்காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய வசதிகள் இல்லாததாலும், தில்சாத் கார்டனில் உள்ள குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், அவர்களை பாதுகாப்பாக அங்கே அனுப்பிவைத்திட ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்திட வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்.
முன்னதாக செவ்வாய்க் கிழமையன்று மாலை, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுவருவதில் காவல்துறையினர் ஆதரவினைப் பெறுவதில் தோல்வி அடைந்துவிட்டபின்னர், மருத்துவமனை அதிகாரிகள் தங்கள் இக்கட்டான மற்றும் சங்கடமான நிலையினை சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர்.
நீதிபதிகள் விசாரணை மேற்கொண்டிருந்த சமயத்தில், நீதிபதிகள் தில்லிக் காவல்துறை சார்பான வழக்குரைஞர் சஞ்சய் கோஷ் மற்றும் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகளுடனும் மற்றும் ஏ1 ஹிந்த் மருத்துவமனை டாக்டர் அன்வர் ஆகியோருடனும் ‘ஸ்பீக்கர் போன்’ மூலமாகப் பேசினார்கள்.
டாக்டர் அன்வர் நீதிபதிகளிடம், ஏ1 ஹிந்த் மருத்துவமனையில் இறந்த நிலையில் இருவரும், காயம் அடைந்த நிலையில் 22 பேரும் இருப்பதாகவும், காயமடைந்தவர்கள் குருதேக் பகதூர் மருத்துவமனைக்கு அனுப்புவதற்காக, அன்று மாலை 4மணியிலிருந்தே காவல்துறையினரின் உதவியைக் கோருவதற்கு முயன்றுகொண்டிருந்ததாகவும், எனினும் வெற்றி பெறமுடியவில்லை என்றும் கூறியதை நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பின்னர் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் முன்பாகவே, மூத்த காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான காவல்துறை துணை ஆணையர்(குற்றப்பிரிவு), ராஜேஷ் டியோ, காவல்துறை துணை ஆணையர் (கிழக்கு) தீபக் குப்தாவிடம் பேசி, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.
இந்தக் கட்டத்தில் நீதிமன்றத்தின் பிரதானக் கவலை, காயமடைந்தவர் களுக்கு உரிய பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும், அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு ஏற்பாடு செய்வதும் அதற்காக காயடைந்தவர்களை பக்கத்தில் இருக்கின்ற அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைப்பதாகும். இந்த விதத்தில் நீதிமன்றம், தில்லி காவல்துறையினருக்கு பாதுகாப்புடன் காயமடைந்தவர்களை ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும், அங்கே காயமடைந்தவர்களை சிகிச்சை அளிப்பதற்கான வசதி இல்லையெனில் அவர்கள் எல்என்ஜேபி மருத்துவமனை அல்லது மௌலானா ஆசாத் அல்லது வேறு ஏதேனும் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும்.”
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருக்கின்றனர். நீதியரசர் முரளிதர் தன் உத்தரவை டிக்டேட் செய்துகொண்டிருக்கையிலேயே, காவல்தறை துணை ஆணையர் (கிழக்கு) ஏ1 ஹிந்த் மருத்துவமனைக்குச் சென்று, காவல்துறையினர் காயமடைந்தவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றதாகக் கூறி, நீதித்துறையின் கட்டளைகள் நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்தார்.
நீதிமன்றத்தில் அதிகாலையளவில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் மேலும், காவல்துறையினர் நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்று அதிகாலை 2.15 மணிக்குள் கூற வேண்டும் என்றும், மேலும் இவற்றை காவல்துறை ஆணையரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
நீதியரசர் முரளிதர் தில்லி உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது மூத்த நீதிபதியாவார். எனினும் பஞ்சாப்-ஹர்யானா உயர்நீதிமன்றத்திற்கு விரைவில் மாற்றப்பட இருக்கிறார்.
நோயாளிகளுக்கு உரிய சிகிச்சைக்காக உரிய மருத்துவமனைக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து, அதில் தோல்வி கண்ட, முற்போக்கு மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்கள் அமைப்பு (Progressive Medicos and Scientists) மருத்துவர் டாக்டர் ஹர்ஜித் சிங் பாட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்குக் கூட நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயகத்தின் நகைமுரண்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
(நன்றி, தி ஒயர்)