tamilnadu

img

ரம்ஜான் கொண்டாடும் தருணத்தில் கொரோனாவிலிருந்து விடுபடுவோம் பிரதமர் மோடி நம்பிக்கை

புதுதில்லி:
ரம்ஜான் கொண்டாடும் நாளில் நாம் கொரோனா தொற்று தாக்கத்திலிருந்து  விடுபடுவோம் என பிரதமர் மோடி கூறினார். ஞாயிறன்று மான் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசாங்கங்களின் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டினார்.  மாநிலங்கள் மிகவும் சுறுசுறுப்பாக செயலாற்றிவருவதாகக் கூறினார்.

கொரோனா வைரஸ் எதிர்ப்புக்கான போராட்டத்தில் மக்கள்  ஒவ்வொருவரும் ராணுவ வீரர்களைப் போல் பணியாற்றி வருகின்றனர். மக்கள் சக்தியுடன் இந்தப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
தொற்றுநோய்க்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சிலர் ஏழைகளுக்கு உணவளிக்கின்றனர். சிலர் முகக்கவசங்களை தயாரித்து வழங்குகின்றனர். பலர் இந்தப் போருக்கு நிதி  திரட்டுவதற்காக தங்கள் நிலங்களை விற்கிறார்கள். சிலர் தங்கள் ஓய்வூதியத்தை  வழங்குகிறார்கள். அதே நேரத்தில் மக்கள் நோய்தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ‘கவனமாக இருக்க வேண்டும். தனி நபர் பாதுகாப்பு முக்கியம்.

கொரோனா வைரஸ் காரணமாக முகக்கவசங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. யாராவது முகமூடி அணிந்தால், அவர் உடல்நலம் குன்றியவர் என்று அர்த்தமல்ல. முகக்கவசங்கள் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளமாகும். "எங்கள் நகரம், எங்கள் கிராமம், எங்கள் தெருக்கள், எங்கள் அலுவலகம் ஆகிவை இதுவரை கொரோனாவைப் பார்த்ததில்லை. அதனால் அது நம்மைப் பாதிக்காது என்ற  தன்னம்பிக்கையில் ஒருபோதும் சிக்கிக் கொள்ள வேண்டாம்  இதுபோன்ற தவறான கருத்தை ஒரு போதும் ஊக்குவிக்க வேண்டாம். 

நெருப்பு, கடன் , நோய் ஆகியவற்றை எளிதாக எடுத்துக்கொண்டால் அது தீவிரமடையும். ஆபத்தான நிலைக்குச் செல்லும். நம்மை முழுமையாக மிரட்டும். ஆதலால், எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும்.
கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்காக வளர்ந்த நாடுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு மருந்துகளை வழங்குவதற்கான இந்தியாவின் முடிவு  பண்பாட்டு நெறிமுறைளின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.   மருந்துகள் வழங்கியதற்காக உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்ததை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன்.

 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய யோகா, ஆயுர்வேதத்தின் மூலம் முடியும். மக்கள் அதில் கவனம் செலுத்தலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட கொரோனா வைரஸ் தொடர்பான நெறிமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும். மக்கள் அனைவரும் covidwarriors.gov.in என்ற இணையதளத்தில் சேர்ந்து மருத்துவர்கள், உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்படவேண்டுமென வலியுறுத்தினார். ரம்ஜான் கொண்டாடப்படும் நேரத்தில் உலகம் வைரசிலிருந்து ஓரளவு விடுபடும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 

;