tamilnadu

img

ரெடிமேட் ரயில்கள் வாங்கும் மோடி அரசு!

புதுதில்லி:
பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை போன்று அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ரயில்வே சம்பந்தமான ரயில்கள் மற்றும் பெட்டிகள் உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, தனியார் நிறுவனங்களிடமிருந்து ரெடிமேட் ரயில்களை (Ready Made Trains) வாங்கு வதற்கு, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.

தற்சமயம் பொதுத்துறை நிறுவனங்களான சென்னை, பெரம்பூர் ஒருங்கிணைந்த ரயில்பெட்டித் தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரயில்பெட்டித் தொழிற்சாலை மற்றும் காபுர்தலாரயில் பெட்டித் தொழிற்சாலைகளில் ரயில்வேக்கு தேவையான பெட்டிகள் மற்றும் ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. முதற்கட்டமாக இவற்றை நிறுத்திவிட்டு பதிலுக்கு தனியார் நிறுவனங்களிடமிருந்து வாங்குவதற்கு ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டிருக்கிறது.புதுதில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், இணை அமைச்சர் சுரேஷ் சி. அங்காடி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்தான் முழுமையான அளவில் ரெடிமேட் ரயில்பெட்டிகளை உலக அளவில் டெண்டர் விட்டுத் தனியாரிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 

அடுத்த மூன்று ஆண்டுகளில், 320 ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ மற்றும் 124 கொல்கத்தா மெட்ரோ ரயில் பெட்டிகளையும் இவ்வாறு வாங்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும்,  இதன்காரணமாகவே சென்னை, பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையில் உருவாகிவந்த ‘டிரெயின் 18’ முதல் பாதி - அதி விரைவு ரயில் ‘டிரெயின் 18’ (First semi - highspeed Train 18) உற்பத்தியை நிறுத்திவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதன்காரணமாக ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி வரும் பல்லாயிரக்கணக்கானத் தொழிலா ளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பூர் ரயில்பெட்டித் தொழிற்சாலையின் மூத்த அதிகாரி இதுபற்றிக் கூறுகையில், “நாங்கள் இந்திய ராணுவத்திற்கும் மற்றும் பல்வேறு அண்டை நாடுகளுக்கும் ரயில்பெட்டிகளைத் தயார் செய்து அளித்துக் கொண்டி ருக்கிறோம். பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் திறன், உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் முதலானவை உலகத்தரம் வாய்ந்தவைகளாகும். தற்போது எங்கள் குறியீடு 4000 புதிய ரயில்பெட்டிகளை உற்பத்தி செய்வதாகும்,” என்றார்.
ஆனால், இவற்றையெல்லாம் பூசிமெழுகும் விதத்திலேயே மத்திய ரயில்வே அமைச்சர் நாடாளுமன்றத்தில் ‘வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்’ தொடர்பாக எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
“ரயில்களை நவீனப்படுத்துவது ஒரு தொடர் நடவடிக்கை, ‘வந்தே பாரத் ரயில்கள்’ அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பது ஒரு பாய்ச்சல் வேக சாதனை. நம் தொழிற்சாலைகளில் அலுமினிய ரயில்பெட்டிகளைத் தயாரி ப்பதற்கான தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார். (ந.நி.)
 

;