tamilnadu

img

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.... பிபிசில் வேலை நிறுத்தத்திற்கு சிபிஎம் ஆதரவு

புதுதில்லி:
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராக  தொழிற்சங்கங்கள் மேற்கொள்ளும் வேலைநிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

மிக அதிக அளவில் லாபம் ஈட்டிவரும் பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைத் தனியாருக்குத் தாரை வார்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கு முற்றிலும் சீரழிவினை ஏற்படுத்திடும். பிபிசில் நிறுவனத்துடன், ஷிப்பிங்கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, டிஎச்டிசி இந்தியாலிமிடெட், வட கிழக்கு மின் உற்பத்திக் கார்ப்பரேஷன் உட்பட நான்கு பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்த்திடமத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தப் பொதுத்துறை நிறுவனங்களில் அரசு தனக்கிருக்கும் மேலாண்மை அதிகாரத்தையும் கைகழுவிக் கொள்கிறது.ஓராண்டிற்குள் 28 பொதுத்துறை நிறுவனங்களை இவ்வாறு தனியாருக்குத் தாரைவார்த்திட மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது. தன்னுடைய சீர்கெட்ட செலவினங்களை (இதில் மிகவும் அதிகமானவை பொய்ப் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்துவதுதான்) சமாளிப்பதற்காக இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களை தாரை வார்த்திட முன்வந்திருக்கிறது. இவ்வாறு தாரைவார்ப்பதன் வாயிலாக சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம்  கோடி ரூபாய் வருவாய்க்கு,இலக்கு நிர்ணயித்திருக்கிறது. இந்த நடைமுறையின் மூலமாக பொதுத்துறை நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட உற்பத்தித் திறனையும், மதிப்பையும் இந்தியப் பொருளாதாரத்தை விருப்பத்திற்கேற்ப கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் தன்னுடைய கூட்டுக்களவாணி கார்ப்பரேட் நண்பர்களுக்கு அளித்திட மோடி அரசாங்கம் திட்டமிட்டிருக்கிறது.இது, நடைமுறைச் செலவினங்களுக்காக ஒரு குடும்பம் வீட்டிலுள்ள வெள்ளிப் பொருள்களை விற்க முன்வருவதன் மூலம் எப்படி அழிவை நோக்கி செல்கிறதோ அதற்கு ஒப்பானநடவடிக்கையாகும்.வரும் நவம்பர் 28 அன்று பிபிசில் நிறுவனத்தில் இயங்கும் அனைத்து சங்கங்களும் நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளவிருக்கும் வேலைநிறுத்தத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, தன்ஆதரவினைத் தெரிவித்துக் கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஏற்கனவே,  பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கு எதிராக டிசம்பரில் ஒரு மாத காலத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ளஅறைகூவல் விடுத்திருக்கிறது.இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   (ந.நி.)