tamilnadu

img

‘கலவரத்தில்’ காணாமல் போனது தில்லி ஆம் ஆத்மி அரசு

புதுதில்லி:
ஒருவாரம் கழித்து ரூபினா தனது இல்லத்திற்கு முதல் முறையாக திரும்புகிறார்.பிப்ரவரி 25 அன்று தில்லி ஷிவ் விகாரில்தனது இல்லத்தை அடித்து நொறுக்க வந்த மதவெறி கும்பலிடமிருந்து தனது ஐந்து குழந்தைகளோடு தப்பித்து ஓடிய 33 வயது பெண்மணி ரூபினா. ஒரு வாரம் கழித்து மார்ச் 2 அன்று, ஷிவ் விகாரின் 14ஆவது தெருவில் அமைந்துள்ள கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்கு வருகிறார். வழிநெடுகிலும் அந்த வீதி சுடுகாடு போல காட்சியளிக்கிறது. கட்டடத்தின் கீழ் தளத்தில் அந்த வீட்டுக்கு சொந்தக்காரரான முஸ்லிம் பெரியவர் வைத்திருந்த கடை அடித்துநொறுக்கப்பட்டு கிடக்கிறது. தானியங்கள், துணிமணிகள், கண்ணாடிகள், வாட்டர்கூலர்கள் என ஒவ்வொன்றும் அந்த சந்து முழுவதும் சிதறி, நொறுக்கப்பட்டு அந்த கட்டடமேஇடிந்து விழுந்தது போல காட்சியளிக்கிறது.

மூன்றாவது மாடியில் உள்ள தனது வீட்டிற்குள் நுழைகிறார் ரூபினா. உள்ளே கண்ட காட்சியைப் பார்த்து கதறி அழுகிறார். வீட்டே அலங்கோலமாக்கப்பட்டுள்ளது. துணிகள் எரிக்கப்பட்டுள்ளன. எல்சிடி டிவி தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் ஒரு கம்பியில் மாட்டிக்கொண்டிருக்கிறது. அவரது ஒரே வாழ்வாதாரமாக இருந்த தையல் இயந்திரம் சுக்கு நூறாக நொறுக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற வெல்வெட் துணியில் அலகுற பைண்டிங் செய்து வைக்கப்பட்டிருந்த திருக்குர் ஆன் நூல் சுக்கு நூறாக கிழிக்கப்பட்டுள்ளது. ஓடிச் சென்று, நொறுக்கப்பட்டு கிடந்த பீரோவுக்குள் தேடிப் பார்க்கிறார் ரூபினா. அவர் சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பத்தாயிரம் ரூபாயை காணவில்லை. மற்றொருடிரங்க் பெட்டிக்குள் அவசர அவசரமாக தேடுகிறார். அதில் வைத்திருந்த 25 ஆயிரம் ரூபாயையும் காணவில்லை. ரூபினாவின் கணவர் புனேயில் ஒரு கடையில் வேலை செய்கிறார். இந்த குடும்பத்தின் மொத்த மாதவருமானமே 10 ஆயிரம் ரூபாய்தான். அதில் 5ஆயிரம் ரூபாய் வாடகைக்கு போய் விடும். எஞ்சிய வெறும் 5 ஆயிரம் ரூபாயில் மிச்சம்வைத்து, தனது மகள்களின் திருமணத்திற்காக சேமித்து வைத்துக் கொண்டிருந்த பணம் அது.

கண்களில் பெருகும் நீரை கட்டுப்படுத்த முடியாமல் ரூபினா கதறுகிறார்: “நாங்கள் என்ன தவறு செய்தோம்? எனது மகள்களின் திருமணத்தை எப்படி நடத்துவேன்? நாங்கள்ஒருபோதும் இங்கே இருக்கும் இந்துக்களுடன் சண்டை போட்டதேயில்லை. நான் அவர்களை அத்தை, மாமா என்றுதான் அழைப்பேன்.அவர்களுக்கு தேனீர் போட்டு தருவேன். எனது கணவர் வரும்போது இந்து குடும்பத்தினரும், நாங்களும் ஒன்றாக சேர்ந்தே சாப்பிடுவோம். இங்குள்ள எல்லோருக்கும் என்னை நன்றாக தெரியும். முல்லா சாகேபின் மகள் என்று என்னுடன் பாசத்தோடு பழகுவார்கள். இங்குள்ள யாரும் எனது வீட்டை அடித்து நொறுக்க வாய்ப்பேயில்லை.” 

ரூபினாவை அங்குள்ள எல்லோரும் தேற்றுகிறார்கள். ரூபினாவின் வீட்டை போல இங்குள்ளஎல்லா முஸ்லிம்களின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன. ஒரு வீடு கூட தப்பவில்லை. ஒருவார காலமாக, இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள முஸ்தபா பாத்தில் உள்ள ஒரு தற்காலிக முகாமில் ரூபினாவும் அவரது குழந்தைகளும் தங்கியிருந்தார்கள்.ரூபினாவைப்போலவே அனைத்தையும் இழந்து நிற்கிறார் சோனி.வடகிழக்கு தில்லியில் பிப்ரவரி 24ல் துவங்கி மூன்று நாட்கள் ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடிய வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி அனைத்தையும் இழந்து ரூபினாவைப் போல வெளியேறிய குடும்பங்கள் ஏராளம். அந்த பயங்கர வன்முறையில் 47 பேரின் உயிர் பறிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். வீடுகளை இழந்து வெளியேறியவர்கள் முழுமையாக எத்தனை பேர் என்று இன்னும் விபரங்கள் தெரிய வரவில்லை. ரூபினாவின் வீடு உள்ள ஷிவ் விகார் பகுதியில் மட்டும் சுமார் 1500 குடும்பங்கள் வெளியேறியுள்ளன. அவர்களது வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன என்று தற்போது முஸ்தபாபாத்தில் தங்கியுள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிற தொண்டர்கள் மதிப்பீடு செய்திருக்கிறார்கள்.

இங்கு ஒரு விசயம், ஒட்டு மொத்த தில்லி மக்களின் மனங்களை ரணமாக அறுத்துக் கொண்டிருக்கிறது. மார்ச் 1 ஆம் தேதி வரைதில்லி அரசாங்கம், பாதிக்கப்பட்ட வீதிகளுக்கு வந்து சேரவில்லை. பளீச்சென்று சொன்னால், தில்லி மாநில அரசாங்கத்தை காணவில்லை. மார்ச் 1ஆம் தேதிக்கு பிறகுதான்எட்டு இடங்களில் தலா 50 பேர் மட்டுமே தங்கும் அளவிற்கு இரவு நேர முகாம்களை அமைத்திருக்கிறார்கள். இந்த முகாம்களிலும் பொறுப்பாளர்கள் யாரும் இல்லை. பாது
காப்போ, சுகாதாரமோ எதுவும் இல்லை. கழிப்பறை கூட இல்லை. எனவே இந்த முகாம்களில் யாருமே தங்குவதற்கு வரவில்லை. பலரும் அருகில் உள்ள பாபுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தெரிந்தவர்களின் வீடுகளில் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். 

அதுமட்டுமல்ல, எரிக்கப்பட்ட, சூறையாடப்பட்ட வீடுகளை பார்ப்பதற்கோ, கணக்கெடுப்பதற்கோ அல்லது விபரம் கேட்பதற்கோ, காவல்துறையோ, வேறு அதிகாரிகளோ யாரும் இதுவரை வரவில்லை. இந்தநிலையில், அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை முஸ்லிம் மற்றும் இந்து சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்கள் செய்யத் துவங்கியிருக்கிறார்கள். ஷிவ் விகாரில் உள்ள ராஜதானி பொதுப் பள்ளிக்குத்தான், பிப்ரவரி 24 அன்று வன்முறை ஏற்பட்டபோது எல்லா மக்களும் ஓடியிருக்கிறார்கள். ஆனால் அங்கும் வந்த வெறிக்கும்பல், அந்தப் பள்ளிக்கூடத்தை அடித்து நொறுக்கி தீவைத்திருக்கிறது. எனவே ஷிவ் விகாரில் பாதிக்கப்பட்டவர்கள் தங்குவதற்கு எந்த இடமும் இல்லை. பாபுநகரில் ஒரு சிறிய மசூதியில் பலர் அடைக்கலம் புகுந்திருக்கிறார்கள். காலியாக கிடக்கும் சில வீடுகளை சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்கள் முன்வந்து தந்திருக்கிறார்கள். பலரும் உணவுப் பொருட்கள் மற்றும் துணிமணிகள் கொடுத்து உதவி வருகிறார்கள். இப்படித்தான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக, ஷிவ் விகார் பகுதியைச்சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். பாபுநகரில் கொஞ்சம் வசதியான குடும்பங்கள் உள்ளன. அந்த குடும்பங்கள் அனைத்தும் நிவாரணப் பணிகளில் இறங்கியுள்ளன. இந்து, முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லை. 42 வயதான முகமது சம்சீர் என்பவர்அங்கு ஒரு துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். துணிக் குடோனில் 100 பேரை தங்க வைத்து பாதுகாத்து வருகிறார். பாபுநகர், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதி என்றாலும் ஏராளமான இந்து குடும்பங்கள் உள்ளன. அவர்களும் கரம் கோர்த்து நிவாரணக் களத்தில் நிற்கிறார்கள். சுருக்கமாக சொன்னால் மதவெறியர்களின் பிடியில் சிக்கி ஷிவ் விகார் பகுதி ஒருசுடுகாடு போல காட்சியளிக்கிறது. ஆம் ஆத்மி அரசாங்கம் எங்கோ தொலைதூரத்தில் நின்றுகொண்டிருக்கிறது.

(ஸ்க்ரால்.இன் இணைய ஏட்டின் செய்தியாளர்கள் இப்ஷிதா சக்ரவர்த்தி, விஜெய்தா லால்வானி)

;