tamilnadu

img

காவிரியில் 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் ஒப்புதல்

மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹுசைன் பேட்டி

புதுதில்லி,மே 28- தமிழ்நாடு அரசு கோரியபடி, காவிரி நதியில் 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனையேற்று காவிரியில் நீர் திறக்க கர்நாடக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் தில்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் செவ்வாயன்று நடைபெற்றது. ஆணைய தலைவர் மசூத் ஹூசைன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட 4 மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தின் விவாதப் பொருள் நிரலில் மேகதாது அணை விவகாரம் சேர்க்கப்பட்டதற்கு தமிழ்நாடு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேகதாது அணைத் திட்டம் குறித்து வழக்கு உள்ளதால், அதுகுறித்து இனிவரும் கூட்டங்களில் விவாதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 9.2 டிஎம்சி தண்ணீரை காவிரியில்  திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மே மாதம்முடிவதற்குள் வழங்க வேண்டிய 2 டிஎம்சி நீரை கர்நாடகம்வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழகத்தின் தரப்பில்தெரிவிக்கப்பட்டது. ஆனால் அணைகளில் போதிய நீர் இருப்புஇல்லை என்று கர்நாடகம் தெரிவித்தது. இந்த கூட்டத்தின் இறுதியில், தமிழ்நாட்டிற்கு, காவிரியில், ஜூன் மாதத்திற் குரிய 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.இந்த கூட்டத்திற்கு பின்னர்  காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் மசூத் ஹூசைன் செய்தியாளர்களிடம்  கூறுகையில், காவிரியில் 9.2 டி.எம்.சி தண்ணீர் திறக்க வேண்டும் என்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை கர்நாடகா ஏற்றுக் கொண்டதாகவும்  ஒருமித்த கருத்தின் அடிப்படையிலேயே, காவிரியில் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், காவிரியில் கர்நாடகம், 9.2 டி.எம்.சி தண்ணீரை கட்டாயம் திறக்க வேண்டும் என்றும் மேகதாது தொடர்பாக எந்த விவாதமும் நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.

ஜுன் 12 மேட்டூர் அணை திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு

மேட்டூர், மே 28 -தென்மேற்கு பருவமழை தாமதமாகி வரும் நிலையில், காவிரியில் தற்சமயம் தரவேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடகாவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ள பின்னணியில், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறுகின்றன. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிஉள்பட 12 மாவட்டங்களில் 16.05 லட்சம்ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறுகின்றன. இந்த பாசனத்தின் மூலம் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சல் நடைபெறுகிறது. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை விளங்குகிறது.தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தீவிர மடையும் போது, அங்குள்ள அணைகள் நிரம்பும். இதைத்தொடர்ந்து அங்குள்ள அணைகளில் இருந்து காவிரியில் திறந்துவிடப்படும் தண்ணீர், தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் வந்து, அங்கிருந்து மேட்டூரை வந்தடையும்.இதன்பின்னர் பாசனத்துக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். அணை யின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதியோ அல்லது கால தாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒரு மாத காலம் தாமதமாகஜூலை 19-ந் தேதி அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.கடந்த 2011-ம் ஆண்டுதான் ஜூன் மாதம் 12-ந் தேதி சரியான காலத்தில் பாச னத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன்பின்னர் இதுவரை ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47 அடி என்ற அளவில் (மொத்த கொள்ளளவு 120 அடி) இருந்து வருகிறது. தண்ணீர் குறைந்துள்ள தால் அணை குட்டை போல காட்சி அளிக்கிறது.அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 60 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்க சாத்தியக்கூறுகள் ஏற்படும். ஆனால் மே மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இதுவரை தொடங்கவில்லை. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும்குறைவாக உள்ளது. அதே நேரத்தில் தென்மேற்கு பருவமழையும் தொடங்கா மல் தாமதமாகி வருகிறது. இதன் காரண மாக அணைக்கு நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப் பில்லை. காவிரி ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க ஆணையம் வழிவகுத்தால் மட்டுமே தண்ணீர் திறக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.இந்நிலையில் 9.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம், கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருப்பது அமலானால் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வர வாய்ப்பு ஏற்படும்.