tamilnadu

img

எண்ணெய் வயல்களைத் தனியாரிடம் தராதே -ரிபுன் போரா

 

புதுதில்லி, ஜூலை 4-

நாட்டின் பல கோடி ரூபாய் மதிப்பிலான 64  எண்ணெய் வயல்களை மத்திய பாஜக அரசு தனியாரிடம் தாரை வார்த்திட டெண்டர் விட்டிருக்கிறது. மத்திய அரசு இதனை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் என்று மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர் ரிபுன் போரா கோரினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் சிறப்புப் பிரச்சனைகளை (Special Mention) எழுப்பும் நேரத்தில் ரிபுன் போரா பேசியதாவது:

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அளவில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக்கூடிய முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பதை இந்த அவையின் மூலமாக, மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

நாடு முழுதும் சுமார் 64 எண்ணெய் வயல்கள் இருக்கின்றன. இவற்றை மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா நிறுவனங்கள் நிர்வகித்து வருகின்றன. இவை இரண்டும் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களாகும். மிகப் பெரிய அளவில் இலாபம் ஈட்டித்தரும் நிறுவனங்களுமாகும். இவ்விரு நிறுவனங்களும் லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வரும் நிறுவனங்களுமாகும்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஜூன் 29, வெள்ளியன்று, மத்தியப் பெட்ரோலிய அமைச்சகம், இந்த 64 எண்ணெய் வயல்களையும் தனியாருக்குத் தாரை வார்த்திட டெண்டர் விட்டிருக்கிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய எண்ணெய் வயல்களாக விளங்கும் எங்கள் அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் டிக்பாய் எண்ணெய் வயலும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் பாக்கிடிப்பா எண்ணெய் வயலும்கூட இவ்வாறு தனியாரிடம் ஒப்படைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பக் கண்டு மிகவும் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.   

இந்த இரு பொதுத்துறை நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு அபரிமிதமான இலாபத்தை ஈட்டித்தருபவைகளாகும். இவற்றைத் தனியாருக்கத் தாரை வார்ப்பது என்பதன் பொருள், அரசுக்கு வரவேண்டிய அபரிமிதமான லாபம் தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது என்பதாகும். இது நாட்டிற்கோ நாட்டின் பொருளாதாரத்திற்கோ நலம் பயக்க்து. எனவே மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இவ்வாறு 64 எண்ணெய் வயல்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவினை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இவை அனைத்தும் பொதுத்துறை நிறுவனங்களாகவே தொடர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ரிபுன் போரா வலியுறுத்தியுள்ளார்.

(ந.நி.)