tamilnadu

img

வானிலிருந்து பூமாரி பொழிய வேண்டாம் முடிந்தால் தரமான உணவு கொடுங்கள்... எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் உருக்கம்

டேராடூன்:
வானிலிருந்து பூமாரி பொழிவதை விட்டு விட்டு, கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தங்களுக்கு தரமான உணவு கொடுக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றிவந்த மூன்று ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுடன் தொடர்புடைய 15 சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த மருத்துவ ஊழியர்கள்தான்,தங்களுக்கு தரமான உணவுகூட வழங்கப்படவில்லை என்று தற்போது வேதனை தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ள இடத்தில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருக்கிறது. அறைகள் சுத்தம் செய்யப்படுவது இல்லை.நாங்களே சுத்தம் செய்ய நினைத்தாலும் விளக்குமாறு இல்லை. குப்பைத் தொட்டியை காலி செய்ய இடமும் இல்லை. டாய்லெட் கிளீனரும் இங்கு இல்லை. நாங்கள் ஒரே படுக்கையில் உட்காருவதுடன், அதிலேயே சாப்பிட்டு விட்டு தூங்கி வருகிறோம்.எங்களுக்கு பாலிதீன் பைகளிலேயே உணவு கொடுக்கப்படுகிறது. சாப்பிட தட்டு எதுவும் கொடுப்பதில்லை. அடிப்படை வசதிகளும் முறையாக இல்லை.எப்படி சுகாதாரத்தை உறுதி செய்து கொள்வது என்றே தெரியவில்லை” என்று புலம்பியுள்ளனர்.

“நாங்கள் எய்ம்ஸ் போன்றஒரு முதன்மையான நிறுவனத்தில் படித்து வேலை செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு கிடைத்த வெகுமதி இதுதானா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள அவர்கள், அண்மையில் ஹெலிகாப்டரிலிருந்து மருத்துவ ஊழியர்கள் மீது பூக்கள் தூவி மரியாதை செய்யப்பட்ட நிகழ்வைக்குறிப்பிட்டு, “வானிலிருந்து பூமாரி பொழிவதை விட்டு விட்டு, முதலில் எங்களைப் போன்ற மருத்துவ ஊழியர்களுக்கு நல்ல உணவு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்றும் விரக்தியுடன் குறிப்பிட்டுள்ளனர்.

;