புதுதில்லி:
4ஜி உட்பட நிலுவை கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்ற வலியுறுத்தி, பிஎஸ்என் எல் ஊழியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது தொடர்பாக பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின்பொதுச் செயலாளர் பி.அபிமன்யு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2019 அக்டோபர் 23 அன்று மத்திய அரசாங்கம்69 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புத்துயிர்ப்பு நிதித்தொகுப்பு (revised package) ஒன்றை அறிவித்தது. இதில் பிஎஸ்என்எல்-க்கு 4ஜி ஒதுக்கீடு,சொத்துக்களைக் காசாக்குதல், பிஎஸ்என்எல் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் நிதியைஉயர்த்திக்கொள்ள அனுமதித்தல் முதலானவையும் இத்துடன் ஊழியர்களை சுயஓய்வுத் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு அனுப்பும் திட்டமும் இருந்தன. இதில் ஊழியர்களை சுய ஓய்வு மூலம் வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தைத் தவிர வேறெதுவும் மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை.
மத்திய அரசு சூழ்ச்சி
பிஎஸ்என்எல்-க்கு 4ஜி வழங்கப்பட வேண்டியது மிகவும் முக்கியமான பிரச்சனையாகும். தனியார் நிறுவனங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அளித்துள்ளபோதிலும், பிஎஸ்என்எல்-க்கு இன்னமும் அளிக்கப்படவில்லை. இப்போது அதனைப் பெறுவதற்கான டெண்டரையும் அரசாங்கம் நிறுத்தி வைத்திருக்கிறது. உள்நாட்டு நிறுவனம் ஒன்றிடமிருந்துதான் 4ஜி-க்கான தள வாடங்களை வாங்க வேண்டும் என்று இப்போது அரசாங்கம் நிர்ப்பந்தித்து வருகிறது. நாட்டில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும், சர்வதேச அளவில் 4ஜி தளவாடங்களை கொள்முதல் செய்துள்ள நிலையில், பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் உள்நாட்டு நிறுவனம் ஒன்றிடமிருந்துதான் கொள்முதல் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படிச்சரியாகும்.
உள்நாட்டு நிறுவனம் எதுவும் 4ஜி தொழில்நுட்பத்தில் திறமையானவைகள் அல்ல.மேலும், மிகப் பெரிய அளவில் வலைப்பின்னலைக் கொண்டுள்ள பிஎஸ்என்எல் நிறு வனத்திற்கு தளவாடங்களை அளிக்கக்கூடிய அனுபவமோ வல்லமையோ அவற்றில் எதற்கும் கிடையாது. எனவே, உள்நாட்டு நிறுவனம்ஒன்றிடமிருந்துதான் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி-க்கான தளவாடங்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது, பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அலைவரிசையை அளிக்காமல் மறுப்பதற்கான சூழ்ச்சியே தவிர வேறல்ல.
பிஎஸ்என்எல்லுக்கு எதிராக சதிதிட்டம்
பிஎஸ்என்எல்-க்கு 4ஜி அளிக்காவிட்டால் அதனால் பயனடைவோர் யார் என்பதைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல. பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி வழங்கக்கூடாது என்பதற்கு ஒரு சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகவே பிஎஸ்என்எல் ஊழியர்கள் நம்புவதற்குப் போதுமான காரணங்கள் இருக்கின்றன. எனவே மத்திய அரசாங்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு 4ஜி அலைவரிசைக்கான தளவாடங்களை சர்வதேச அளவில் டெண்டர் விட்டு கொள்முதல் செய்வதற்கு அனுமதித்திட வேண்டும்.புத்துயிர்ப்பு நிதித்தொகுப்பு அறிவித்து எட்டு மாதங்களாகின்றன. இதன் காரணமாக 79ஆயிரம் ஊழியர்கள் ஏற்கனவே சுய ஓய்வில்சென்றுவிட்டார்கள். எனினும், இந்த சுய ஓய்வுத்திட்டத்தைத் தவிர புத்துயிர்ப்பு நிதித்தொகுப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ள வேறெந்த திட்டமும், அமல்படுத்தப்படவில்லை. அவற்றையும் அமல்படுத்த வேண்டும்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்கிறார்கள். கோரிக்கைகளை மேலும் தாமதம் இன்றி நிறைவேற்றமத்திய அரசாங்கம் முன்வர வேண்டும்.அவ்வாறு கோரிக்கைகளை நிறைவேறாவிட்டால், பிஎஸ்என்எல்ஊழியர் சங்கம் போராட்டங்களைத் தீவிரப்படுத்திடவும் திட்டமிட்டிருக்கிறது.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.மேலும் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள், கோவிட்-19 கொரோனா நுண்ணுயிரி தொற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் பெரிய நகரங்களில் 10 ஊழியர்கள் மற்றும் சிறிய நகரங்களில் 5 ஊழியர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும் என்றும், அனைத்து ஊழியர்களும் தனிநபர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், முகக்கவசங்கள் கட்டாயமாக அணிந்திருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். (ந.நி.)