tamilnadu

img

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லாது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அந்தஸ்தைத் தரம் தாழ்த்தி, அதனை இரு யூனியன் பிரதேசங்களாக மாற்றியமைத்து இருப்பதென்பது, அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவின்மீது நாட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்தப் பிரிவானது, எந்த மாநிலத்தின்எல்லையையும் தனியே பிரித்தோ அல்லது இரண்டு அல்லது மூன்று மாநிலங்களின் எல்லைகளைச் சேர்த்தோ அல்லது மாநிலங்களில் சில பகுதிகளைச் சேர்த்தோ புதிய மாநிலத்தை அமைத்திட நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை அளிக்கிறது. மேலும் அது, ஒரு மாநிலத்தின் எல்லையை விரிவாக்கிக் கொள் வதற்கோ அல்லது குறைப்பதற்கோ, எந்த மாநிலத்தின் எல்லைகளையும் மாற்றியமைப்பதற்கோ அல்லது மாநிலத்தின் பெயரை மாற்றியமைப்பதற்கோ கூட நாடாளுமன்றத்திற்கு அனுமதி அளிக்கிறது.

ஒரு மாநிலத்திற்கு மேற்கொண்ட விஷயங்களில் எதை வேண்டுமானாலும் நாடாளுமன்றம் செய்ய முடியும் என்கிறஅதே சமயத்தில், இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 1-ஆவது பிரிவின்கீழ் இந்தியாமாநிலங்களின் ஓர் ஒன்றியமாகத் (A Union of States) தொடர்ந்து இருந்திடவேண்டும். மாறாக அது யூனியன் பிரதேசங்களின் ஒன்றியமாக இருந்திடக் கூடாது. (not a Union of Union Territorids).இந்தியா, மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக தொடர்ந்து இருந்து வருவதற்கு,மாநிலங்கள் இருக்க வேண்டியதும், கூட்டாட்சி அமைப்பு இருக்க வேண்டியதும் அவசியம்.இந்தியாவின் கூட்டாட்சி அமைப்புமுறை, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புமுறையின் ஓர் அங்கமாகும்.இதன் பொருள், நாடாளுமன்றம், அரசமைப்புச் சட்டத்தின் 1-ஆவது பிரிவைத் திருத்துவதன் மூலமாக, அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றிட முடியாது என்பதேயாகும். 

அரசமைப்புச் சட்டத்தின் 3ஆவது பிரிவின்கீழ் அமைந்துள்ள 2-ஆவது விளக்கம், ஒரு புதிய யூனியன் பிரதேசம் முன்பே இருக்கக்கூடிய யூனியன்பிரதேசத்தின் ஒரு பகுதியை, வேறொருயூனியன் பிரதேசத்துடன் இணைப்பதன் மூலம் ஏற்படுத்த முடியும் அல்லது ஒரு மாநிலத்தின் எந்தப் பகுதியையாவது தனியே பிரித்து, அதன்மூலம் ஒரு யூனியன் பிரதேசத்தை ஏற்படுத்த முடியும் என்று தெளிவானமுறையில் கூறுகிறது. எனினும், நாட்டிலுள்ள எந்தவொரு மாநிலத்தையே, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற முடியுமா என்பது குறித்து அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவு எதுவும் கூறாமல் மவுனமாக இருக்கிறது.அவ்வாறிருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 3-ஆவது பிரிவின்கீழ் நாடாளுமன்றமானது, மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்றால், பின் இந்தியாவை, ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று 1-ஆவது பிரிவு அறிவிப்பதில் எவ்விதமான அர்த்தமும் இல்லாமல் போகிறது. 


ஏனெனில், நாடாளுமன்றம் ஒருசட்டத் திருத்தத்தின் மூலம் ஒரு மாநிலத்தை, ஒரு யூனியன் பிரதேசமாக மாற்ற முடியும் என்றால், பின்னர் அது,அதேபோன்று அனைத்து மாநிலங்களையுமே யூனியன் பிரதேசங்களாக மாற்றுவதற்கு அதிகாரம் உண்டு என்பது போலாகி விடும். ஆனால், 3-ஆவது பிரிவின் நோக்கம் இதுவல்ல.அதன்காரணமாகத்தான், 3ஆவது பிரிவு, மாநிலங்களை, யூனியன் பிரதேசங்களாக மாற்றுவது தொடர்பாக எதுவும் பேசவில்லை. இது, மாநிலங்களில் ஏதேனும் ஒரு பகுதியில், எல்லையில் மற்றும் பெயர்களில் மாற்றங்கள் செய்வது மற்றும் புதிய மாநிலங்கள் அமைப்பது பற்றி மட்டுமே பேசுகிறது. 3ஆவது பிரிவின் கீழுள்ள 1-ஆவதுவிளக்கம், ‘மாநிலம்’ என்பது ‘யூனியன் பிரதேசத்தை’யும் உட்படுத்தும்என்றும், இதன் பொருள் மாநிலங்களுக்கெல்லாம் என்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் யூனியன் பிரதேசங்களுக்கும் செய்திடலாம் என்ற பொருளிலேயே ஆகும். எனவே, 3ஆவதுபிரிவின்கீழ், மாநிலங்கள் என்பவை மாநிலங்களாகவே நீடித்திட வேண்டும். வேண்டுமானால் அது சற்றே விரிவாக்கப்படலாம், அல்லது குறைக்கப்படலாம், அல்லது புதிய பெயரிடப்படலாம் அல்லது புதிய எல்லைகளுடன் அமைந்திடலாம்.

மேலும், 3ஆவது பிரிவின்கீழுள்ள விலக்கக்கூறு (proviso), மாநில சட்டமன்றம் என்பது குறித்து ஒரு விளக்கத்தையும் அளிக்கிறது. அந்த விளக்கத்தின் படியும், நாடாளுமன்றம் நிறைவேற் றக்கூடிய சட்டம், ஒரு மாநிலத்தின் எந்தவொரு பகுதியையோ, எல்லையையோ அல்லது பெயரையோ மாற்றலாமே தவிர, அதனை யூனியன் பிரதேசமாகமாற்ற முடியாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.மேலும் அந்த விலக்கக்கூறானது,ஒரு மாநிலத்தை மறுசீரமைத்திடுவதற்கான முன்மொழிவு அடங்கிய சட்டமுன்வடிவைப் பெறும்போது, குடியரசுத் தலைவர் அதனை சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு அதன் கருத்துக் களைக் கேட்பதற்காக அனுப்பி வைக்கவேண்டியது கட்டாயம் என்றும் கூறுகிறது. இதற்காக குடியரசுத் தலைவர் ஒருகுறிப்பிட்ட கால அளவையும் நிர்ணயித்திடுவார். குறிப்பிட்ட காலத்திற்குள் மாநில சட்டமன்றத்திலிருந்து கருத்துக் கள் வராவிடில், அக்காலத்தை மேலும்நீட்டித்துக் கொள்ளலாம். அப்படியும் கருத்துக்கள் வரவில்லை என்றால் அவை இல்லாமலேயே அச்சட்டமுன்வடிவை நாடாளுமன்றத்தின் ஏதேனும் ஓர் அவையில் அறிமுகப்படுத்திடலாம். மாநில சட்டமன்றத்திலிருந்து கருத்துக்கள் பெற வேண்டும் என்று கட்டாயம் ஏதுமில்லை. எனவே, நாடாளுமன்றம் அதனை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிடலாம்.

எனினும், முக்கியமான பிரச்சனைஎன்னவென்றால், ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் போது, அவர் எவரிடமிருந்து அம்மாநிலம்குறித்த கருத்துக்களைப் பெற முடியும்என்பதாகும். இது மாநில சட்டமன்றத்தின்அதிகாரங்களைப் பெற்றிருப்பதாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தின் கருத்துக்களா? அல்லது சட்டமன்றம் மறுபடியும் அமைக்கப்படும்வரை குடியரசுத் தலைவர் காத்திருக்க வேண்டுமா?அரசமைப்புச் சட்டத்தின் 356(1)(பி) பிரிவானது, மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை, நாடாளுமன்றத்தால் நடைமுறைப்படுத்தப்படும் என்று குடியரசுத் தலைவர் அறிவிப்பார் என்று கூறுகிறது. எனவே, ஒரு மாநிலம், குடியரசுத்தலைவரின் ஆட்சியின் கீழ் வரும்போது,நாடாளுமன்றம், அம்மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களை நடைமுறைப் படுத்தும்.சட்டமன்றத்தின் அதிகாரங்கள் என்பவை இருவகைப்படும். ஒன்று, சட்டங்கள் இயற்றுவது. மற்றொன்று, மாநில பட்ஜெட்டை நிறைவேற்றுவது. எனவே, குடியரசுத் தலைவர், ஒரு மாநில அரசின் அதிகாரங்களை 356ஆவது பிரிவின்கீழ் எடுத்துக்கொள்ளும்போது, நாடாளுமன்றத்தில் அம்மாநிலம்தொடர்பாக என்ன நிறைவேற்றப்படுகிறதோ அது அந்த மாநில சட்டமன்றத் தால் நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்பட வேண்டும்.

ஒரு கருத்தை வெளியிடுவது என்பது,அது மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்களின் ஒரு பகுதியாக இருக்காது, இருக்கவும் முடியாது. குடியரசுத் தலைவர் ஆட்சிக் காலத்தின்போது நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட மாநிலத்தின் எந்த விஷயம் குறித்து வேண்டுமானாலும் சட்டம் இயற்ற முடியும் அல்லது அந்த மாநிலத்தின் பட்ஜெட்டை நிறைவேற்ற முடியும். ஆனால், அம்மாநில சட்டமன்றத்தின் கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, மாநிலம் சம்பந்தப் பட்ட பகுதி, எல்லைகள் அல்லது பெயர்ஆகியவற்றைப் பாதிக்கும் ஒரு சட்டமுன்வடிவின்மீது கருத்துக்களை வெளிப்படுத்தும்போது, நிச்சயமாகநாடாளுமன்றம், அந்த சட்டமன்றத்திற் கான பதிலியாக இருந்திட முடியாது.  (Parliament cannot deputise for the state.)
 

( பி.டி.டி. ஆச்சாரி ,மக்களவை முன்னாள் செக்ரடரி-ஜெனரல் மற்றும் அரசமைப்புச் சட்ட வல்லுநர்)

(தமிழில்: ச.வீரமணி)

;