நான் ஆகஸ்ட் 9 அன்று காலை ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரை இறங்கியபோது எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து இந்தக் கடிதத்தைத் தங்களுக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன். ஜம்மு-காஷ்மீர் தங்கள் கட்டுப்பாட்டில் மத்திய ஆட்சியின் கீழ் இருப்பதால் இக்கடிதத்தைத் தங்களுக்கு எழுதுகிறேன். நான் விமானத்திலிருந்து தரை இறங்கியவுடனேயே, காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு, ஓர் அறைக்குக் கொண்டுசெல்லப்பட்டேன். அங்கே ஒரு மூத்த காவல்துறை அதிகாரி இருந்தார். அவர் என்னை விமான நிலையத்திலிருந்து வெளியே அனுப்பமுடியாது என்றும் அதற்கான உத்தரவுகளைப் பெற்றிருப்பதாகவும், திரும்புவதற்கு எந்த விமானம் உடனடியாகத் தயாராக இருக்கிறதோ அதில் திரும்பிப் போய்விட வேண்டும் என்றும் கூறினார்.
மேலும் அவர், அதற்காக ஏற்பாடு செய்திருப்பதாகவும் கூறினார். நான் அன்றைய தினம் மாலை தில்லி திரும்புவதற்கு ஏற்கனவே டிக்கெட் எடுத்திருந்தேன். அவ்வாறு நான் ஏற்கனவே ‘ரிட்டர்ன் டிக்கெட்’ எடுத்திருந்ததால், நான் எந்த விமானத்தில் திரும்பிச் செல்ல டிக்கெட் எடுத்திருக்கிறேனோ அதில்தான் திரும்பிச் செல்வேன் என்று கூறினேன். சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக, நான் காவல்துறையினரின் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டேன். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா அவர்களும் என்னுடன் இருந்தார். நான் என்னை விமான நிலையத்திலிருந்து ஸ்ரீநகருக்குள் அனுப்பக்கூடாது என்பது தொடர்பான ஆணையைக் காட்டுமாறு கேட்டபோது, மாவட்ட ஆட்சித் தலைவர் வரவழைக்கப்பட்டார். அவர் அதற்கான ஆணையை என்னிடம் காட்டினார். அந்த ஆணையில், ‘நீங்கள் ஸ்ரீநகருக்கு வருவது சட்டம் – ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால், நீங்கள் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறீர்கள்’ என்றிருந்தது.
இது மிகவும் விநோதமானது. நான் ஜம்மு-காஷ்மீர் ஆளுநருக்கு என் பயணம் குறித்து முன்னதாகவே தெரிவித்திருந்தேன். அவருக்கு நான் எட்டாம் தேதியன்று எழுதியிருந்த கடிதத்தில், ஒன்பதாம் தேதி நான் எமது கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவருமான தோழர் முகமது யூசுப் தாரிகாமியைப் பார்க்க இருப்பதாகவும் கூறியிருந்தேன். அவர் உடல் நலமின்றி இருப்பதால் அவருக்காக சில மருந்துகளைக் கொண்டு வந்திருந்தேன். ஒரு தேசிய அரசியல் கட்சியாக இருக்கின்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில், நான் எனது கட்சி உறுப்பினர்களையும், கட்சித் தலைவர்களையும், குறிப்பாக அவர்கள் உடல்நலமின்றி இருக்கும் சமயங்களில் பார்ப்பதற்கு உரிமை பெற்றிருக்கிறேன். இருந்தபோதிலும் நான் என்னுடைய அடிப்படை ஜனநாயக உரிமைகளை மேற்கொள்ள மறுக்கப்பட்டேன். எங்கள் கட்சி உறுப்பினர்களைப் பார்த்துவர அனுமதி மறுக்கப்பட்டு சுமார் நான்கு மணி நேரம், சிறை வைக்கப்பட்டிருந்த சமயத்தில், மக்கள் மத்தியில் மிகவும் விரிவான அளவில் கொந்தளிப்பு உள்ளது என்பதையும், அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டது சம்பந்தமாக ஏராளமான புகார்கள் உள்ளன என்பதையும் அறிந்தேன்.
சில செய்தி நிறுவனங்கள், (அயல்நாட்டு செய்தி நிறுவனங்களும், நம் நாட்டு செய்தி நிறுவனங்களும்) மக்களின் எதிர்ப்புக் கிளர்ச்சிகள் குறித்தும், அவர்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொண்ட வன்முறைகள் குறித்தும் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன. இது மிகவும் ஆழமான விஷயம். இதுகுறித்து தங்கள் பரிசீலனையும் தலையீடும் தேவைப்படுகிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் காவலன் என்ற முறையிலும், அனைத்து அரசியல் குடிமக்களும் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் தங்களுக்கு உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும் என்று தங்களை வலியுறுத்துகிறேன்.தங்களுடைய அதிகாரத்தின்கீழ் உள்ள தற்போதைய மத்திய ஆட்சியாளர்கள், எனது அடிப்படை ஜனநாயக உரிமையை மேற்கொள்ள முடியாமல் தடை செய்திருக்கிறார்கள். எனது ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதற்கு எதிராக, கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திடவே இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.” (ந.நி.)