tamilnadu

img

சர்வாதிகாரியின் பிடியில் நாட்டின் தன்னாட்சி அமைப்புகள்...

புதுதில்லி:
மோடி ஆட்சியில் தேர்தல் ஆணையம்,ரிசர்வ் வங்கி, சிபிஐ, மீடியா மட்டுமன்றி, நீதித்துறையும் கூட அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக சமூக செயற்பாட்டாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான தேவனூரா மகாதேவா கூறியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டது வரை பல்வேறு விஷயங்கள் அதனை நிரூபிப்பதாகவும் தேவனூரா மகாதேவா தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக ‘தி வயர்’ இணையதளஏட்டில் எழுதியுள்ள கட்டுரையில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

பிரஷாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவருக்கு 1 ரூபாய்அபராதம் அல்லது 3 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது பற்றி, எனது நண்பரான ரவி வர்மாகுமாருடன் பேசினேன். அப்போது, “நீதித்துறையே ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கிறது; அந்தக் குற்றச்சாட்டை அதுவே விசாரிக்கிறது; பின்னர் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு விட்டதாககூறி ஒரு தீர்ப்பை வழங்குகிறது; இதுதான்உச்சநீதிமன்றத்தில் நடந்துள்ளது” என்றார்அவர். உண்மையும் அதுதான்.
மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கு முன்பு பூஷன் சமர்ப்பித்த பதிலைக் கூட தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பதைப் போன்று, இந்தத் தீர்ப்பும் கண் களைக் கட்டிக்கொண்டு, உண்மையைப் பார்க்காமல் வழங்கப்பட்டுள்ளது.இன்றைய நிலையில், பயம் என்பதுநீதித்துறையை மட்டும் ஆட்டுவிக்கவில்லை. மாறாக, நிர்வாகம், சட்ட அவைகள் மற்றும் மீடியாவையும் பீடித்துள்ளது. எந்தவொரு தன்னாட்சி அமைப்பும், இன்றுதன்னாட்சியுடன் செயல்பட முடியவில்லை.‘ரஞ்சன் கோகோய், தான் பதவி வகித்தபோது (அவரை நீதிபதி என்று நான்அழைக்க மாட்டேன்), பாஜக அரசின் முன்பாக மண்டியிட்டு, ஒட்டுமொத்த உச்சநீதிமன்றத்தையும் அவர்களிடம் கையளித்துவிட்டார்’ என்று மார்க்கண்டேய கட்ஜூ கூறியிருந்ததை நாம் இங்கே நினைத்துப் பார்க்கலாம்.

அரசியல் சட்டத்தை எரிப்பதுகூட இங்குநீதிமன்ற அவமதிப்பு குற்றமாகாது. அதனால்தான், அரசியலமைப்பின் பெயரில்பதவியேற்கும் அந்த அரசியல் தலைவர்கள், “நாங்கள் அரசியலமைப்பை மாற்றவந்திருக்கிறோம்” என்று கூறும்போது, ​​யாரும் அதனை நீதிமன்ற அவமதிப்பு என்றுகுற்றம் சாட்டத் துணிவதில்லை. அவர்கள்அரசியலமைப்பை எரித்தாலும், அது நீதிமன்றங்களை அவமதிப்பதாக இருக்காது.ஆனால் நீதிமன்றத்தின் கவுரவத்தைப்பாதுகாக்க முற்படும் பிரசாந்த் பூஷனின் டுவீட்டுகள் மட்டும் இந்த நீதிபதிகளால் அவமதிப்பாகி விடுகின்றன. நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டுமென குரல்கொடுத்த பூஷண், நீதிபதிகளுக்கு குற்றவாளியாக தெரிந்துள்ளார்.

இந்தியா இதற்கு முன்னதாக இப்படியொரு சூழலை சந்தித்தது இல்லை. இந்திரா காந்தி அமல்படுத்திய நெருக்கடிநிலையின்போதுகூட, நீதித்துறையில் நல்ல விழுமியங்கள் இருந்தன. அதேபோன்று தேர்தல் ஆணையம், மத்திய ரிசர்வ் வங்கி, சிபிஐ, மீடியா உள்ளிட்ட பலவற்றிலும் அப்படியேதான். அந்த நெருக்கடிநிலையானது ஒருவகையில் புலியைப் போன்றது. அது எதையும் நேரடியாக எதிர்கொண்டது. முகத்திற்கு – முகம் என்பதாகஇருந்தது. ஒடுக்குமுறைகள் இருந்தாலும், போராட்டங்களும் நடைபெற்றன.

ஆனால், இன்றைய நெருக்கடி நிலையானது, பசுத்தோல் போர்த்திய புலியாகஉள்ளது. இது காப்பான் போல் முகமூடிபோட்டுக்கொண்டு வருகிறது. இது எதையும் முகத்திற்கு நேராக எதிர்கொள்வதில்லை. ஆனால், இப்போதுதான் நாட்டின்அனைத்து தன்னாட்சி அமைப்புகள் & உரிமைகள் நசுக்கப்படுகின்றன. சுதந்திரமான தன்னாட்சி நிறுவனங்கள் பாதி உயிருடனேயே இருக்க வேண்டிய நிலையிலும், சர்வாதிகாரியின் விருப்பத்தின்படி செயலாற்ற வேண்டிய நிலையிலும் உள்ளன.இந்தியாவின் நிலை தற்போது மாபெரும் ஆபத்தில் உள்ளது. வேலையின்மை நம்மை உண்ணுகிறது. நாட்டில்வறுமை என்பது பசிக்கொடுமை என்றநிலைக்கு மாறிச் செல்கிறது. பொதுச்சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்றால் மட்டுமே அரசாங்கத்தால் இயங்க முடியும் என்ற நிலை உள்ளது. இதுதொடர்பான மக்களின் கோபங்களை அடக்குவதற்காகவே பிரஷாந்த் பூஷணின் டுவிட்டர் பதிவை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, பொதுநலனுக்கான குரலைநசுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.இவ்வாறு தேவனூரா மகாதேவா கூறியுள்ளார்.

;