tamilnadu

img

ஒரே ஒரு மாணவிக்காக ஒரு படகு!

கோட்டயம்:
கேரளமாநிலம் கோட்டயம் மாவட்டம் காஞ்சிராமைச் சேர்ந்த 17வயது மாணவி மேல்நிலை முதலாமாண்டு தேர்வெழுதச் செல்வதற்கு வசதியாக கேரள மாநில நீர் போக்குவரத்துத் துறையின் (எஸ்.டபிள்யூ.டி.டி) 70 பேர் பயணம் செய்யும் படகு ஒன்றை அம் மாநில அரசு அனுப்பிவைத்துள்ளது.

கேரளம் மாநிலம் கோட்டயம்  குட்டநாடு பகுதியைச் சேர்ந்தவர் சாண்ட்ராபாபு (17). இவர் மேல்நிலைக் கல்வி முதலாமாண்டு படித்து வந்துள்ளார். தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊரடங்கு அமலில் இருந்ததால் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்வை எப்படி எழுதுவது என்று அந்த மாணவி கவலையில் இருந்துள்ளார்.ஆனாலும் மனம் தளராத அந்த மாணவி, “எஸ்டிபிள்யூடிடி (SWTD) அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு தனது  நிலையை அதிகாரிகளுக்கு தெரிவித்தார். மாணவியின் நிலையை புரிந்துகொண்ட அதிகாரிகள் ஒரு படகை அனுப்புவதாக உறுதியளித்தனர். அதன்படி அந்த மாணவி தேர்வெழுதச் செல்வதற்கு 70 பேர் பயணிக்கக்கூடிய படகை அதிகாரிகள் அனுப்பிவைத்துள்ளனர். அந்த ஒரு மாணவி மட்டும் படகில் பயணம் செய்து கோட்டயம் காஞ்சிராமில் உள்ள எஸ்.என்.டி.பி. மேல்நிலைப்பள்ளிக்கு சென்று  வெற்றிகரமாக தேர்வெழுதியுள்ளார். அவர் தேர்வெழுதி முடியும் வரை அந்தப் படகு காத்திருந்தது. தேர்வெழுதிய பின் அந்த மாணவியை அழைத்துக்கொண்டு ஊர்திரும்பியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாண்ட்ரா, “ எனது பள்ளிக்குச் செல்ல எனக்கு எந்த வழியும் இல்லாததால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்று நினைத்தேன். பின்னர், நான் எஸ்டபிள்யூடிடி அலுவலகத்தை தொடர்பு கொண்டு அவர்களுக்கு எனது நிலையை விளக்கினேன். அவர்கள் என் நிலைமையைப் புரிந்துகொண்டு ஒரு படகை அனுப்புவதாக உறுதியளித்தனர். எஸ்.டபிள்யூ.டி.டி குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், என் மகிழ்ச்சியை எவ்வாறு பகிர்ந்து கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.எஸ்டபிள்யூடிடி இயக்குநர், ஷாஜி வி நாயர், “சாண்ட்ரா உதவி கேட்கும்போது யோசிக்கவில்லை. படகை இயக்குவதற்கு ஐந்து பேர் ஏற்பாடு செய்யப்பட்டனர். இதற்கு அரசாங்கம் முழு ஆதரவு அளித்தது என்றார்.

;